காந்தியும் அம்பேத்கரும் முரண்பாடும் ஒற்றுமையும்
- காந்தியடிகளின் நினைவு தினத்தில் அம்பேத்கர் குறித்து ஏன் பேச வேண்டும்? தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை காந்தியுடன் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒருவர் குறித்து இந்நாளில் பேச என்ன இருக்கிறது? காந்தியை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளாதவர் அம்பேத்கர். அம்பேத்கர் கருத்துக்கு எதிராக காந்தியும் தனது இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டே இருந்தார்.
- இப்படி இவர்களுக்குள் இருந்த பல முரண்பாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான மனமாற்றங்களுக்கு அம்பேத்கர் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தினார் என்று பார்த்தோமானால், இவர்களுக்குள் இருந்தது பகை முரண் அல்ல என்பது நன்றாகத் தெரியும்.
தீண்டாமைக்கு எதிரான தலைவர்:
- 1948 ஜனவரி 30இல் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்பாக அவரைப் படுகொலை செய்ய ஏழு முறை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அந்த ஏழு முயற்சிகளும் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற பூனா ஒப்பந்த உரையாடலுக்குப் பின்பே நடைபெற்றன. காந்தியடிகள் ஆப்ரிக்காவில் இருந்த காலத்திலிருந்தே தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தவர்தான். தன் மனைவி கஸ்தூர்பாவைக் கொண்டு ஓர் ஒடுக்கப்பட்டவரின் மலச்சட்டி யைச் சுமக்கச் சொல்லும் அளவுக்குத் தீண்டாமைக்கு எதிராகச் சொந்த வாழ்வில் செயல்பட்டவர்.
- 1915இல் இந்தியா வந்த பிறகு அகமதாபாத்தில் அவர் தொடங்கிய ஆசிரமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைத் தங்கவைத்தார். அதற்காக காந்தியை வைணவப் பிரிவினர் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்தனர். அவர் ஆசிரமத்துக்கு நிதி கொடுத்தவர்கள் தங்கள் நிதியை நிறுத்திக் கொண்டனர். ஆனாலும் காந்தி தன் ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
- “தீண்டாமை ஒரு பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றும், “நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறப் போராடுகிறோம். பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்கும்வரை நமக்கு சுயராஜ்யம் சாத்தியமே இல்லை” என்றும் 1920களிலேயே - அதுவும் காங்கிரஸ் மாநாடுகளில் நின்றுகொண்டு கடுமையாகப் பேசியவர்தான் காந்தி. ஆனாலும் சாதிய அமைப்பு குறித்தும், இந்து மதப் புனிதம் குறித்தும் காந்திக்கு இருந்த பார்வை மிகப் பழமையானது. அப்போதெல்லாம் காந்தியடிகளின் இக்கருத்துக்கு எதிராக யாரும் வீதியில் இறங்கிப் போராடவில்லை.
கிளம்பிய எதிர்ப்பு:
- 1932 பூனா ஒப்பந்தத்தை ஒட்டியும் அதற்குப் பின்பும் அம்பேத்கருடன் நடைபெற்ற உரையாடல்கள் காந்தியிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தின. அதுவரை தீண்டாமைக்கு எதிரான கருத்துகள், அவருடைய தனிப்பட்ட கருத்துகளாகவே பார்க்கப்பட்டன. அம்பேத்கருடனான உரையாடலுக்குப் பின் அது, ‘ஹரிஜன இயக்கம்’ என்று தேசிய இயக்கத்தின் வேலைத் திட்டமாக மாறியது.
- தீண்டாமைக்கு எதிராக காந்தியடிகள் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கி, அது சூறாவளியாக வீசத் தொடங்கியவுடன், அவருக்கு எதிராக இந்து மகா சபையினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எதிர் இயக்கத்தைத் தொடங்கினார்கள்.
- முதல் முறையாக இந்தியாவில் காந்திக்கு எதிரான இயக்கம் தீவிரமடைந்தது அப்போதுதான். அதன் உச்சமாக 1934 ஜூன் 25ல் புனேவில் அவர் சென்றுகொண்டிருந்த கார் மீது குண்டு வீசி, அவரைக் கொலை செய்யும் முதல் முயற்சி நடைபெற்றது. அம்பேத்கரை காந்தி சந்தித்து உரையாடாமல் இருந்திருந்தால் இந்தக் கொலை முயற்சியே நடந்திருக்காது.
- ஆனாலும் தீண்டாமைக்கு எதிரான காந்தியின் இயக்கம் சுணக்கமில்லாமல் தீவிரமடைந்தது. கோயில் நுழைவுப் போராட்டம், தலித் அல்லாதோர் தலித்துகளைச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அவர்களை ஆசிர்வதிப்பது என்று அவர் பணி இன்னும் வேகமெடுத்தது. “இந்து மதத்தின் புனிதத்தை நீங்கள் கெடுக்கலாமா?” என்று காந்தியை நோக்கி வீசப்பட்ட கேள்விகளுக்கு, “என்னுடைய செயலால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும்.
- நான் கவலைப்படவில்லை. நான் இந்து மதத்தைக் காப்பாற்ற வரவில்லை. இந்து மதத்தின் முகத்தை மாற்றவே விரும்புகிறேன்” என்று கடுமையாகப் பதிலளித்தார். இதையடுத்து, “காந்தியையும் அவரைப் பின்பற்றுகிறவர்களையும் இந்து இல்லை என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும்” என்று ஆங்கில அரசுக்குக் கடிதம் எழுதினார்கள் அப்போதைய மடாதிபதிகள்.
- இப்படி இந்து மதப் பற்றாளர்களின் கருத்துகளுக்கு எதிராக காந்தி செயல்பட்டார். அந்த அளவுக்கு காந்தியடிகளுக்கும் இந்து மதப்பற்றாளர்களுக்கும் இடையே தீராப் பகையைத் தொடங்கிவைத்தவை அம்பேத்கருடனான காந்தியடிகளின் உரையாடல்களே. ஆனாலும், காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பணிகளை அம்பேத்கர் முழுவதும் அங்கீகரிக்கவில்லை. பல நேரம் கடிந்தே சொல்லியுள்ளார். “காந்தி ஓர் ஆச்சாரமான இந்துதான். இவரால் தீண்டாமை ஒழிக்கப்படாது.
- அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காகப் போராடிய கேரிசன் போலல்ல காந்தி” என்றே விமர்சித்தார். ஆனால் மறுமுனையில் காந்தியடிகளோ, “டாக்டர் அம்பேத்கரின் விமர்சனத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் மீது துப்புவதற்குக்கூட அவருக்கு உரிமை உண்டு. அனைத்து உயர் சாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களை நடத்தும் முறை பாவம். நம் மீது காறி உமிழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதைச் செய்தால் நான் ஏற்றுக்கொள்வேன்” என்று பதிலளிக்கிறார். ஆனால், இவ்வளவு கனிவான பதிலைத் தன்னை எதிர்க்கும் இந்து மதப் பற்றாளர்களுக்கு எதிராக காந்தியடிகள் சொன்னதில்லை.
காந்தி - அம்பேத்கர் உறவு:
- இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அம்பேத்கரை ஜின்னா தன் நாட்டுக்கு அழைத்தார். காரணம், 1946இல் அன்றைய வங்காள மாகாணத்திலிருந்தே அம்பேத்கர் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். அது பாகிஸ்தான் வசமானது. ஆனால், காந்தியடிகள் இதில் தலையிட்டு, அம்பேத்கரை மும்பை மாகாணத்திலிருந்து மீண்டும் தேர்வுசெய்ய வலியுறுத்தினார்.
- அதோடு, அவரை இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதையும் தனது விருப்பமாக முன்வைத்தார். இந்து மதப் பற்றாளர்களிடம் இருந்த பகை முரண்போல் ஒரு நாளும் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே இருந்த முரண்கள் பகை கொண்டதாக இருந்ததில்லை.
- காந்தியடிகளைப் பொறுத்தவரையில் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் அன்றைக்கு இருந்த நேரு, நேதாஜி, அம்பேத்கர், பி.சி.ஜோஷி என எல்லாருமே அவரின் பிள்ளை வயது உடையவர்களே. அதனால் ஒரு தந்தையின் முறுக்கோடே அவர் எல்லாரிடமும் நடந்துகொண்டார். தான் எடுத்த முடிவில் ஒருநாளும் அவர் பின்வாங்கியது கிடையாது.
- சில பிள்ளைகள் அவர் பேச்சைக் கேட்கும். சில பிள்ளைகள் அவரோடு முரண்பட்டு நிற்கும். ஆனாலும் அவர் தனது முடிவை முரண்படும் பிள்ளைக்காக மாற்றிக்கொண்டதேயில்லை. அதற்காக வருத்தப்பட்டதுமில்லை. ஆனால், ஒரே ஒரு பிள்ளை அவரின் மனசாட்சியைத் தூங்கவிடாமல் செய்தது. அந்தப் பிள்ளைக்காகவே அவர் பல நேரம் மனம் மாறினார். அந்தப் பிள்ளை அண்ணல் அம்பேத்கர்!
- ஜனவரி 30: மகாத்மா காந்தி நினைவுதினம்
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2025)