TNPSC Thervupettagam

காந்தியைப் பேச வைத்த நூல்கள்

January 29 , 2024 175 days 255 0
  • காந்தி இயல்பிலேயே கூச்ச சுபாவம் உள்ளவர். ஆனால், வாழ்க்கையின் தொடக்கத்தில் அவர் ஏற்று மேற்கொண்ட வழக்கறிஞர் தொழிலோ பேச்சையே மூலதனமாகக் கொண்டது.
  • தனது இயல்பான கூச்ச சுபாவத்தைப் பின்னுக்குத் தள்ளி, வெற்றிபெற்ற பேச்சாளராக அவரை மாற்றியது ஒரு புத்தகம்; அல்லது இரண்டு புத்தகங்கள். காந்தி இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றபோது, அவர் படித்த உயர்நிலைப் பள்ளி அவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியது. பாராட்டிதழ்கூட வாசித்து அளிக்கப்பட்டது.
  • ஆனால், அப்போது ஆசிரியர்கள் முன்பும் சக மாணவர்கள் முன்பும் பேசப் பயந்தாராம் காந்தி. “தாய்மொழியான குஜராத்தியில்தான் அந்தக் கூட்டம் நடந்தது. நானும் குஜராத்தியில்தான் பதில் சொல்லியிருப்பேன். நிச்சயமாக ஆங்கிலத்தில் அல்ல. எனினும் என்ன பதில் சொன்னேன் என்று நினைவில்லைஎன்கிறார் காந்தி. தாய்மொழியில் பேசவே காந்தி பயந்து நடுங்கியிருக்கிறார். அவ்வளவு கூச்சம்.

ஆக்கபூர்வமான அறிவுரை

  • வழக்கறிஞரான பிறகு இந்தக் கூச்சத்தை நீக்குவதற்கு முயன்றுள்ளார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரடெரிக் பிங்கர்ட் என்கிற அறிஞரைச் சந்தித்து இதற்கு ஆலோசனை கேட்டுள்ளார். அவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர். இந்தியாவின் நண்பர்களுள் ஒருவர்.
  • இந்திய மாணவர்கள் அவரிடம்தான் எதற்கும் அறிவுரைகேட்பது வழக்கம். “பேச ஆரம்பித்தால் திக்குகிறது. நான் எப்படி இதைச் சமாளிப்பது?’’ என்று அவரிடம் காந்தி கேட்டாராம். “பெரோஷ் ஷா மேத்தா போல வர விரும்புகிறாயா?” என்று அவர் திருப்பிக் கேட்டார். “நிச்சயமாக இல்லை! அவரது உடையின் நுனியைக்கூட நான் தொட முடியாது என்பதை அறிவேன்என்றார் காந்தி.
  • அப்படியானால், வழக்கறிஞராக சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்க விரும்புகிறாய்... அவ்வளவுதானே?” என்றார் பிங்கர்ட்.காந்தி, “ஆமாம்என்று சொன்னார். வழக்கறிஞராகச் சிறக்க இரண்டு ஆலோசனைகளை பிங்கர்ட் கூறியுள்ளார்:
  • ஒன்று, எடுத்துக் கொள்ளும் வழக்கைப் பற்றி முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும்; இரண்டு, மனித இயல்பைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் தெரிந்துகொண்டால் எந்த வழக்கு மன்றத்தையும் சமாளித்துவிடலாம் என்று பிங்கர்ட் கூறியுள்ளார்.
  • இதைப் புரிந்துகொள்ளச் சில புத்தகங்களைப் படிக்கச் சொல்லி அவர் எழுதித்தந்தாராம். அந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தால் அந்தப் புத்தகங்களின் பெயர்கள் நினைவில் இருக்கின்றன என்று இது நடந்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னால் குறிப்பிட்டார் காந்தி. முகத் தோற்றத்தைக் கொண்டு ஒருவரைப் புரிந்துகொள்ளும் கலை பிசியோனமி (Physiognomy). அந்தக் கலை பற்றி அறிய அவர் இரண்டு நூல்களைப் பரிந்துரைத்தார்.
  • ஒரு புத்தகம் லாவட்டர் எழுதியஉடலியல் கலை’. இன்னொரு நூல் ஷிமல் பென்னிங்ஸ் எழுதியது. இந்த இரண்டு நூல்களில் முதல் நூல்தான் படிக்கக் கிடைத்தது என்கிறார் காந்தி. அந்த நூலை 21 வயது இளைஞனுக்குரிய ஆர்வத்துடன் படித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

காந்திக்குப் பிடித்த புத்தகங்கள்

  • ஜோகன் காஸ்பர் லாவட்டர் ஒரு சுவிட்சர்லாந்து கவிஞர். தத்துவவாதி, உடலியல் கலை நிபுணரும்கூட. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உடலியல் கலை பற்றிப் புகழ்பெற்ற கட்டுரைகளை எழுதியவர்.
  • மனிதர்களைப் பொதுவான குணங்களைக் கொண்டுவகை பிரிக்க முடியும் என்றாலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணங்கள் உண்டு என்பதுதான் லாவட்டர் அறிமுகப்படுத்திய கொள்கை. அறிவியலோடு இந்தக் கலையை இணைத்துப் பேசியதுதான் அவரது தனிச்சிறப்பு.
  • பிங்கர்ட்டின் அறிவுரையில் இருந்து வழக்கறிஞராக காந்தி புரிந்துகொண்டது: உங்களது எதிர்த் தரப்பாரைவிட உங்கள் தரப்பாரிடம் நீங்கள் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் கட்சிக்காரரை முழுதும் நம்பிவிடக் கூடாது. ஏனெனில், அவர் ஒரு பக்க நல்ல கருத்தை மட்டும்தான் தருவார்; மறுபக்கத்தில் அவருக்கு எதிராக உள்ள கருத்தை அவர் சொல்ல மாட்டார் என்பதுதான்.
  • காந்திக்குப் பிடித்த புத்தகங்களாக டால்ஸ்டாயின்தி கிங்டம் ஆஃப் காட் இஸ்வித்தின் யூ’ (1894) என்ற நூலையும் ஜான் ரஸ்கின் எழுதியஅன்டு திஸ் லாஸ்ட்’ (Unto This Last [1860]) என்கிற நூலையும் தாரோவின்சிவில் டிஸ்ஒபிடியன்ஸ்என்ற நூலையும் குறிப்பிடுவார்கள்.
  • விவிலியத்தில் வலியுறுத்தப்படும் உலக அன்பின் அடிப்படையிலான ஒரு புதிய சமூக அமைப்பைப் பற்றி 30 ஆண்டுகள் சிந்தனையின் விளைவாக எழுதப்பட்டது டால்ஸ்டாயின் நூல். இது காந்தி வாழ்நாள் முழுதும் பரப்பிய அன்பை, புதிய சமூக அமைப்பைப் பற்றியதாகும்.
  • கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற ரஸ்கினின் அடுத்த நூல் முதலாளித்துவத்தை விமர்சிப்பது. இந்த நூலை 9 பாகங்களாக 1908இல் காந்தி குஜராத்தி மொழியில் எழுதினார். பின்னால் அதுசர்வோதயாஎன்ற பெயரில் சிறு நூலாக வெளிவந்தது.
  • தாரோவின் நூல் காந்தியின் சத்தியாகிரகத்துக்கு அடித்தளமிட்ட நூல். இம்மூன்று நூல்களும் அவரது வாழ்க்கையின் செல்நெறிகளுக்குப் பயன்பட்டன எனில், பிங்கர்ட் பரிந்துரைத்த நூல்களோ இயல்பான கூச்ச சுபாவத்தை நீக்கி, அவரது அறிவு சுடர்விடப் பயன்பட்டது.
  • இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த வெலிங்டன், காந்தியிடம் பேசுவதற்குத் தயங்கினார் என்று .ரா. ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அந்த அளவுக்குப் பேச்சுக் கலையில் காந்தி வெற்றிபெற உதவிய நூல்கள் என லாவட்டர், ஷிமல் ஆகியோரது நூல்களைக் குறிப்பிடலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories