- “நம் வாழ்க்கையிலிருந்து அந்த ஒளி போய்விட்டது. எங்கெங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. உங்களுக்கு என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. நமது அன்புக்குரிய தலைவர், நம் அனைவராலும் பாபு என்று அழைக்கப்படுபவர், நம் தேசத்தின் தந்தை தற்போது நம்மிடையே இல்லை” என்று தனது வானொலி உரையை ஆரம்பித்த நேரு, காந்தியைச் சுட்டுக்கொன்றவன் ஒரு இந்து என்பதைச் சொல்லத் தவறவில்லை.
- ஏனெனில், அப்போது டெல்லியில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்கள் தேசப் பிரிவினையைத் தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர்.
- காந்தியைக் கொன்றவன் ஒரு முஸ்லிம் என்ற புரளி வேறு கிளப்பப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் நாடு புதிய கலவரம் எதையும் தாங்காது.
- அது 1948-ன் ஜனவரி மாதம். இந்தியா சுதந்திரம் அடைந்து மிகவும் மோசமான தேசப் பிரிவினையைச் சந்தித்து ஐந்து மாதங்கள்தான் ஆகியிருந்தது. இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்களும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்களும் கொல்லப்படுவது இன்னும் நிற்கவே இல்லை.
- ஒருசில மாதங்களுக்கு முன்பு கல்கத்தாவில் உண்ணாவிரதம் இருந்து அங்கு அமைதியை நிலைநாட்டிய காந்தி, தற்போது டெல்லியில் பிர்லா மாளிகையில் தங்கியிருந்தார். வழக்கமாக, துப்புரவுத் தொழிலாளர்களின் குடியிருப்பில்தான் காந்தி தங்குவார். பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து அகதிகளால் அந்தக் குடியிருப்புகள் நிரம்பிவழிந்ததால் பிர்லா மாளிகையில் வந்து தங்கினார். கல்கத்தாவைப் போல டெல்லியும் மோசமான இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
- நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காந்திக்கு வேறு வழி தெரியவில்லை. உண்ணாவிரதத்தை ஜனவரி 12 அன்று கையிலெடுத்தார்.
- அந்த உண்ணாவிரதத்துக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். முஸ்லிம்கள் டெல்லியில் பாதுகாப்பாக உணர வேண்டும், தங்கள் இருப்பிடத்துக்கு அவர்கள் திரும்ப வழிசெய்ய வேண்டும் என்பதும், பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய ரூ.55 கோடியைக் கொடுக்க வேண்டும் என்பதும்தான்.
- எதிரியாக இருந்தாலும் வாக்களித்தபடி நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் காந்தியின் எண்ணம். இந்த இரண்டு காரணங்களுமே இந்துத்துவவாதிகளைச் சூடேற்றின. ‘கிழவன் சாகட்டும்’ என்று இந்துத்துவவாதிகள் கோஷம் எழுப்பியபடி டெல்லி வீதிகளில் சென்றதாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது நூலில் பதிவுசெய்கிறார்.
நல்லிணக்க அணிவகுப்புகள்
- காந்தி உண்ணாவிரதம் தொடங்கிய ஆறாம் நாளுக்குள் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. நல்லிணக்க அணிவகுப்புகள் டெல்லி முழுவதும் நடைபெற்றன.
- முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் குடியிருப்புகளுக்கு வருவதற்கு இந்துக்களே உதவினர். வகுப்புக் கலவரத்தில் ஈடுபட மாட்டோம் என்று இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் கையெழுத்திட்டனர்.
- கல்கத்தாவைப் போலவே டெல்லியிலும் தனிநபர் ராணுவமாகக் கலவரங்களை நிறுத்தினார் காந்தி.
- ஒருவழியாக, ஜனவரி 18 அன்று மௌலானா அபுல் கலாம் ஆசாத் கொடுத்த பழச்சாறை அருந்தித் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட காந்தி, தன் வாழ்நாளின் மிகச் சிறந்த உண்ணாவிரதமாக அதைக் குறிப்பிட்டார்.
- காந்தி, முஸ்லிம்கள் சார்பாக மட்டுமே நடந்துகொண்டதாக அன்றிலிருந்து இன்றுவரை இந்துத்துவவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
- சிறுபான்மையினரைப் பாதுகாப்பாக உணரவைக்க வேண்டியதை அவர் வலியுறுத்திவந்தது உண்மைதான் என்றாலும், நவகாளியில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டபோது வெற்றுக் கால்களுடன் நடந்து அங்கே அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டார் என்ற உண்மையை எல்லோரும் மறந்துவிடுவார்கள்.
- டெல்லி உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு பாகிஸ்தான் சென்று அங்கே சிறுபான்மையினராக இருந்த இந்துக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தும் திட்டத்தில்தான் காந்தி இருந்தார். ஆனால், அந்தத் திட்டம் நிறைவேறாமல் தடுப்பதற்கு ஒருவன் வந்தான்.
ஜனவரி 30
- அன்று ஜனவரி 30. மாலை 4.30. பிர்லா மாளிகையில் காந்திக்கென்று ஒதுக்கப்பட்ட எளிமையான அறை அது. தனக்கென்று பிரத்யேகமாக எந்த அறைகலனையும் அங்கே காந்தி வைத்திருக்கவில்லை. அந்த அறையுடன் ஒட்டி ஒரு கழிப்பறை, குளியலறை இருந்தது. காந்தி தங்கியிருந்த அறையில் அன்று அவருடன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு வல்லபபாய் படேல் வந்திருந்தார்.
- சமீப காலமாக படேலுக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவந்ததைப் பற்றிய சந்திப்புதான் அது. இருவரும் சேர்ந்து செயல்பட்டால்தான் பலமே தவிர, ஒருவர் பிரிந்தாலும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றார் காந்தி. அப்போது காந்திக்கு அவரது பேத்தி ஆபா உணவு கொண்டுவந்தார்.
- “உங்கள் கடிகாரம்தான் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதுகிறது” என்று பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டினார். “என் கடிகாரமாகவும் கைத்தடியாகவும் நீயும் மனுவும்தான் இருக்கிறீர்களே!” என்று பொக்கைவாயால் சிரித்தபடி காந்தி கிண்டலடித்தார். படேல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பிரார்த்தனைக் கூட்டம் முடிந்த பிறகு, ஜவாஹர்லால் நேருவும் அதே விஷயமாக வரவிருந்தார்.
- கழிப்பறைக்குச் சென்றுவிட்டு காந்தி பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பிர்லா மாளிகையிலேயே இன்னொரு பகுதியில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அதன் முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். பேத்திகள் இருவர் மீதும் கையைப் போட்டுக்கொண்டு காந்தி நடந்துவந்தார். அப்போது ஒருவன் வழிமறித்து காந்திக்கு வணக்கம் தெரிவித்தான்.
- “பாபுவுக்குப் பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது” என்றபடி அவனை விலக்க முயன்ற ஆபாவைப் பிடித்துத் தள்ளிவிட்டு, அவன் தன் சட்டைப் பையிலிருந்து துப்பாக்கியை எடுத்தான்.
- என்ன நடக்கிறது என்று காந்தியும் மற்றவர்களும் உணர்வதற்குள் காந்தியை நோக்கி அவன் மூன்று முறை சுட்டான். “ஹே ராம்” என்றபடி காந்தி சரிந்தார். சுட்டவனைக் கூட்டத்தினர் சூழ்ந்துகொண்டு தாக்க ஆரம்பித்தனர்.
- பிறகு, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சுட்டவன் பெயர் நாதுராம் கோட்சே என்று பிற்பாடு தெரிந்தது. காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என்பதும், அவர் உயிரோடு இருந்தால் இந்துக்கள் மிகவும் பலவீனமாக ஆகிவிடுவார்கள் என்று அவன் கருதியதும்தான் அவன் சுட்டதற்குக் காரணம்!
- காந்தியின் உடலைத் தூக்கிக்கொண்டு அவருடைய அறைக்குச் சென்றனர். டாக்டர் டி.பி.பார்கவா அழைத்துவரப்பட்டார். காந்தியைப் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து 10 நிமிடங்கள் ஆகின்றன என்கிறார்.
- எங்கெங்கும் அழுகைக் குரல்கள். “மகாத்மா காந்தி வாழ்க” என்ற கோஷம் எங்கெங்கும் கேட்கிறது. சிறிது நேரத்திலெல்லாம் நேரு, படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் என்று தலைவர்கள் அங்கே வந்துசேர்கிறார்கள். எல்லோரும் கதிகலங்கிப்போய் காந்தியின் உயிரற்ற உடலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தீர்க்கதரிசனமான வார்த்தைகள்
- காந்தியின் மரணத்தை வானொலி மூலம் நாட்டுக்கு அறிவிக்க வேண்டிய கடமை நேருவுக்கு. “நம் வாழ்க்கையிலிருந்து அந்த ஒளி போய்விட்டது” என்று ஆரம்பித்த நேரு, “நான் சொல்வது தவறு.
- ஏனெனில், அந்த ஒளி சாதாரண ஒளியல்ல. இவ்வளவு நாட்களாக நம் நாட்டில் வெளிச்சம் வீசிக்கொண்டிருந்த அந்த ஒளி இன்னும் பல ஆண்டுகளுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஒளிவீசும். உலகம் அதைக் காணும், அது எண்ணற்ற இதயங்களுக்கு ஆறுதல் தரும்” என்று தன் உரையைத் தொடர்கிறார்.
- எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள்! இந்தியாவின் உயிர் அதன் பன்மைத்தன்மையிலும் சமத்துவத்திலும் சகோதரத்துவத்திலும்தான் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவே உயிர்விட்டவர் காந்தி. அவர் இறந்த பிறகும் இந்தியாவின் ஒளியாகத் தொடர்கிறார்.
- அவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து வந்த மாதங்களில் இனக் கலவரங்கள் பெரிதும் நின்றுபோயின. சில பத்தாண்டுகளுக்காவது இந்தியாவில் பெரிய அளவில் இனக் கலவரங்கள் ஏற்படாமல்போனதற்கு காந்தியின் படுகொலை முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.
- டெல்லியில் யமுனையின் கரையோரத்தில் காந்தியின் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அவரது மூன்றாவது மகன் ராம்தாஸ், காந்தி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு எரியூட்டினார்.
- காந்தியின் சாம்பலும் எலும்புகளும் சேகரிக்கப்பட்டு, அவரது விருப்பப்படியே நதிகளிலும் கடல்களிலும் கரைக்கப்பட்டது. ஆனால், இந்தியர்களின் மனதில் அதற்கும் முன்னரே இரண்டறக் கலந்திருந்தார் காந்தி. அங்கே அவரை எந்தத் தோட்டாவாலும் அணுக முடியாது.
நன்றி: இந்து தமிழ் திசை (25-09-2019)