TNPSC Thervupettagam

காந்தியைப் பேசுதல்: காந்தியின் மூன்றாவது பேரியக்கம்!

August 28 , 2019 1972 days 994 0
  • “உங்களுக்கு மந்திரம் ஒன்றைத் தருகிறேன். அது சிறிய மந்திரம். அதை உங்கள் இதயத்தில் பதித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொரு மூச்சும் அதன் வெளிப்பாடாக இருக்கட்டும். ‘செய் அல்லது செத்துமடி’ என்பதுதான் அந்த மந்திரம். ஒன்று, நம் முயற்சியால் நாம் விடுதலை அடைய வேண்டும், அல்லது அந்த முயற்சியில் நாம் இறந்துபோக வேண்டும்” என்று கூறிவிட்டு, தன் முன்னால் இருப்பவர்களைப் பார்த்தார் காந்தி. எல்லோரும் மிகுந்த உத்வேகத்துடன், அடுத்து காந்தி என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  • இரண்டாம் உலகப் போரின் நடுப்பகுதி அது. ஏற்கெனவே, இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் போரில் இந்தியாவையும் பிரிட்டன் இணைத்துக்கொண்டது குறித்து காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகுந்த கோபமும் வருத்தமும் நிலவியது. இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தால் இரண்டாம் உலகப் போரில் பாசிஸ, நாஜிஸ சக்திகளுக்கு எதிராக பிரிட்டனுடன் தோள்கொடுப்போம் என்று 1939-முதல் மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் சொல்லிவந்ததற்கு பிரிட்டன் காதுகொடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் ஜப்பான் பர்மாவை ஆக்கிரமித்துக்கொண்டு, அடுத்ததாக இந்தியாவை நெருங்கும் நிலை. இந்த இக்கட்டான தருணத்தில் காங்கிரஸுடனும் ஏனைய தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு சர் ஸ்டாஃபோர்டு க்ரிப்ஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வருகிறது. தொழிலாளர் கட்சியைச் சார்ந்த க்ரிப்ஸ் இந்தியாவுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். ஆனால், அப்போதைய பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலோ இந்தியாவை இம்மியளவுகூட விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாதவர். மேலும், காந்தி மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தவர்.
டொமினியன் அந்தஸ்து
  • இந்தியாவுக்கு வந்த க்ரிப்ஸ் காந்தி, நேரு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் போன்றோரையும் ஏனைய தரப்புகளையும் சந்தித்துப் பேசினார். போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்பது க்ரிப்ஸ் பிரிட்டனிலிருந்து கொண்டுவந்த சமரசத் தீர்மானத்தின் அடிப்படை. டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் அரசுக்குக் கீழே இருந்துகொண்டு, தன்னாட்சி பெற்ற நிலை ஆகும். மேலும், போர் முடியும் வரை இந்தியாவை ராணுவரீதியாகவும், தார்மிகரீதியாகவும், வளங்கள்ரீதியாகவும் கட்டுப்படுத்தும் பொறுப்பு பிரிட்டனுடையது என்ற நிபந்தனை வேறு. இதற்கெல்லாம் காந்தியும் சரி, காங்கிரஸும் சரி இணங்கவில்லை. க்ரிப்ஸ் கொண்டுவந்த நிபந்தனைகளை ‘பின்தேதியிட்ட காசோலை’ என்று காந்தி வர்ணித்தார். இப்படியாக, க்ரிப்ஸுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
  • காந்திக்கு இதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. பிரிட்டனின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல் போனால் அது இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி போன்றவற்றுக்கு ஆதரவாகப் போய் முடிந்துவிடும். அதே நேரத்தில், இந்திய சுதந்திரத்தையும் பலிகடாவாக ஆக்கிவிட முடியாது. க்ரிப்ஸ் தன் நாடு திரும்பிய கொஞ்ச காலத்தில் விசாகப்பட்டினம், காக்கிநாடா துறைமுகங்களின் மேல் ஜப்பான் குண்டுவீசியது. பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பான் தாக்குதலை நடத்திய பிறகு, இரண்டாம் உலகப் போரில் இறங்கிய அமெரிக்காவும் பிரிட்டனுக்கு ஆதரவாகத் தனது துருப்புகளை இந்தியாவுக்கு அனுப்பியது. போரில் அமெரிக்கா ஒரு மத்தியஸ்தராக இருந்து சமரசம்செய்து போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று காந்தி விரும்பியிருந்தார். அவரது விருப்பத்துக்கு மாறாக அமெரிக்கா போரில் இறங்கியது மட்டுமல்லாமல், இந்தியாவுக்குள்ளும் வந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பானைத் தடுத்து நிறுத்த இது தவிர்க்க முடியாதது என்றாலும், இதுவும் ஒருவகையில் இந்தியா மீதான அத்துமீறலே என்று பெரும்பாலான இந்தியர்கள் கருதினார்கள்.
வெள்ளையனே வெளியேறு தீர்மானம்
  • ஜூலை 14-ல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தியாவை விட்டு ஆங்கிலேயர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. போர் தொடங்கியதிலிருந்து தார்மிகரீதியாக பிரிட்டனுக்கு ஆதரவாக இருந்தாலும், இந்தியாவை பிரிட்டன் அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறது; மென்மேலும் பிரிட்டன் இந்தியாவின் மீதான ஆதிக்கத்தை அதிகப்படுத்தியேவந்திருக்கிறது என்றும் தீர்மானம் சுட்டிக்காட்டியது. இந்தியாவை விட்டு பிரிட்டன் சுமுகமாக வெளியேறினால், பிரிட்டன் அணிசேர்ந்திருக்கும் நேசநாடுகளின் படைகள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வந்து ஜப்பானை எதிர்த்துப் போரிடலாம் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதற்குச் சம்மதிக்கவில்லையென்றால் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்பது அந்தத் தீர்மானம் விடுத்த எச்சரிக்கை.
  • இதையடுத்து, ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் கூடியது. ஜூலையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் திருத்தங்கள் செய்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம். காந்தி தன் எதிராளிக்கு உரிய மரியாதை கொடுப்பவராதலால் உள்ளபடி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற பெயரில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ‘க்விட் இந்தியா’ (Quit India) என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் மோனையுடன் மொழிபெயர்த்ததால் இப்படி நேர்ந்துவிட்டது. தமிழில் நாமும் நம் வசதிக்கேற்ப அப்படியே பயன்படுத்தி அதுவே நிலைபெற்றும்விட்டது.
என் கனவு
  • ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியபோதுதான் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற பிரபல வாசகத்தை காந்தி கூறினார். மேலும், “உலக வரலாற்றில் நம்முடைய ஜனநாயகப் போராட்டத்தைவிட அசலானது வேறு ஏதும் இருக்காது என்று நான் நம்புகிறேன். நான் சிறையில் இருக்கும்போது கார்லைல் எழுதிய ‘பிரெஞ்சுப் புரட்சி’ புத்தகத்தைப் படித்திருக்கிறேன். ரஷ்யப் புரட்சியைப் பற்றி பண்டிட் ஜவாஹர்லால் நேரு என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், இந்தப் புரட்சிகளெல்லாம் ஆயுதங்கள் ஏந்தியதால் நிகழ்ந்தவை என்பதால், அவை ஜனநாயக இலக்கை அடைவதில் தோல்வியடைந்துவிட்டன. நான் கனவு காணும் ஜனநாயகத்தில், அதாவது அகிம்சை வழியில் நிறுவப்பட்ட அந்த ஜனநாயகத்தில் எல்லோருக்கும் இடையில் சமத்துவம் நிலவும். ஒவ்வொருவரும் அவரவருடைய எஜமானர். அப்படிப்பட்ட ஒரு ஜனநாயகத்துக்கான போராட்டத்துக்குத்தான் நான் உங்களை வரவேற்கிறேன். இந்தக் கனவு நிறைவேறினால் போதும் இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து, தங்களை இந்தியர்கள் என்றே நினைத்து எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விடுதலைக்காகப் பாடுபடுவார்கள்” என்று காந்தி ஆற்றிய உரை ஆகஸ்ட் 8, 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தது. ஆனால், அடுத்த நாள் காலையில் காந்தி கைதுசெய்யப்பட்டார். காங்கிரஸின் அனைத்துத் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
  • காந்தி கலந்துகொள்ளவிருந்த ஒரு கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப்போவதாகக் கூறிய கஸ்தூர்பாவும் கைதுசெய்யப்பட்டார். ஒட்டுமொத்தத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் அகிம்சை வழியில் நடைபெறும் என்று அறிவித்திருந்தாலும் ஏராளமான இடங்களில் மக்கள் பொறுமை இழந்து வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததும் ஆங்கிலேய அரசின் இரும்புப்பிடி மேலும் இறுகியது. இந்தியாவில் காந்தி நடத்திய மூன்றாவது பெரிய இயக்கத்தை அதன் தொடக்கத்திலேயே ஆங்கிலேய அரசு நசுக்கப்பார்த்தாலும் அங்கங்கே மக்களின் கோபம் வெடித்துக்கொண்டுதான் இருந்தது.

நன்றி: இந்து தமிழ் திசை(28-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories