- மணிப்பூரில் மெய்தேய் - குக்கி சமூகங்களுக்கு இடையிலான மோதலால் விளைந்த வன்முறை, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்வது வேதனைக்குரியது. பெண்கள்மீது நிகழ்த்தப் பட்ட பாலியல் குற்றங்களும் பல நாட்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
- மணிப்பூரில் சமவெளியில் வாழும் மெய்தேய் சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு, அம்மாநிலத்தின் மலைவாழ்ச் சமூகமான குக்கி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
- இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மே 3அன்று தொடங்கிய மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்; வீடுகளை இழந்துள்ளனர். மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூருக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின்னரும் அமைதி முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
- இந்நிலையில், மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காணொளி கடந்த வாரம் வெளியாகி, ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்தப் பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
- அவரின் தந்தையும் சகோதரரும் கும்பல் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மே 4 அன்று நிகழ்ந்த இந்தக் கொடூரச் சம்பவம், மணிப்பூரில் இணைய சேவை முடக்கி வைக்கப் பட்டிருந்ததன் காரணமாக இவ்வளவு தாமதமாக வெளியாகியுள்ளது.
- இந்தக் காணொளி வெளியானதும் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுகையில் இதைக் கடுமையாகக் கண்டித்திருப்பதோடு இதில் தொடர்புடைய யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப மாட்டார்கள் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
- இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆறு பேரை மணிப்பூர் காவல் துறை கைது செய்துள்ளது. வன்முறையில் ஈடுபட சாத்தியம் உள்ளவர்கள் என 13,000 பேர் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். ஆனால், பிரச்சினை அண்டை மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. மிஸோரமில் வாழும் மெய்தேய் சமூகத்தினருக்குத் தலைமறைவு அமைப்பினால் விடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாக அவர்கள் மணிப்பூருக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
- மணிப்பூரில் மெய்தேய்-குக்கி சமூகங்களுக்கு இடையிலான மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொடர் வன்முறைகளுக்கான காரணிகள் கண்டறியப்பட்டு, அவை களையப்பட வேண்டும். மெய்தேய்-குக்கி ஆகிய இரண்டு தரப்பினருக்கும் வன்முறையில் பங்கிருக்கிறது.
- என்றாலும், மாநில அரசும் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் பீரேன் சிங்கும் குக்கி சமூகத்தினரின் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். குக்கி சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களே அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பிவருகின்றனர். முதல்வரை மாற்ற வேண்டும்; ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்னும் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
- இந்தப் பின்னணியில், அனைத்து சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதன் நன்மைகளை ‘இரட்டை இன்ஜின் அரசாங்கம்’ என்னும் பெயரில் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக முதன்மையாக முன்னிறுத்துகிறது.
- மணிப்பூரில் தொடரும் வன்முறை அந்தப் பிரச்சாரத்துக்கு முற்றிலும் முரணானது என்பதை அக்கட்சி உணர வேண்டும். எனவே, மத்தியிலும் மணிப்பூரிலும் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசாங்கங்கள், இனியும் காலம்தாழ்த்தாமல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; மணிப்பூர் காப்பாற்றப்பட வேண்டும்!
நன்றி: தி இந்து (25 – 07 – 2023)