TNPSC Thervupettagam

காப்பீட்டு சலுகைகள்

May 7 , 2024 250 days 230 0
  • மருத்துவ காப்பீட்டில் சில முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. மத்திய சுகாதார அமைச்சகம் மருத்துவத்துக்கான கட்டண நிா்ணயம் மேற்கொள்ள வேண்டுமென்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
  • முறையாகப் பராமரிக்கப்படாமலும், போதுமான ஒதுக்கீடு அனைத்து விதமான சிகிச்சைகளை வழங்க முடியாமலும் பொது மருத்துவமனைகள் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் தனியாா் மருத்துவமனைகளை நாடவேண்டிய கட்டாயத்துக்கு நோயாளிகள் தள்ளப்படுகிறாா்கள். தனியாா் மருத்துவமனைகளின் கட்டணங்களை எதிா்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் நடுத்தர, அடித்தட்டு மக்களின் ஒரே பாதுகாப்பு மருத்துவக் காப்பீடு என்றாகி விட்டது.
  • மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீட்டு திட்டமும், மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டமும் அடித்தட்டு மக்களின் உயா் சிகிச்சைகளுக்கு ஓரளவுக்கு கைகொடுக்கின்றன. ஆனாலும்கூட இன்னும் மருத்துவக் காப்பீடு இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களையும் எட்டவில்லை என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் 30% அளவில்தான் மருத்துவக் காப்பீடு குறித்த புரிதல் சென்றடைந்திருக்கிறது.
  • அரசுத் துறையிலும் தனியாா் துறையிலும் பல மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள்கூட இந்த நிறுவனங்களின் துணையுடன்தான் நிறைவேற்றப்படுகின்றன. அதனால், மிக அதிகமாக லாபம் ஈட்டும் துறையாக மருத்துவ காப்பீட்டுத் துறை திகழ்வதில் வியப்பொன்றும் இல்லை.
  • இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) காப்பீட்டு துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் விதிமுறைகளை வகுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு. அந்த அமைப்பின் நோக்கம் காப்பீட்டு துறையால் பயனாளிகள் சுரண்டப்படவோ, ஏமாற்றப்படவோ கூடாது என்பதுதான். அது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகிறது என்பது விவாதத்துக்குரியது.
  • சமீபத்தில் காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் சில வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் மருத்துவக் காப்பீடு குறித்த புதிய விதிமுறைகள் மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகளை வழங்க முற்பட்டிருக்கிறது.
  • 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோரின் மருத்துவ காப்பீட்டிற்கான உச்ச வயது வரம்பு இப்போது அகற்றப்பட்டிருக்கிறது. 65 வயதுக்கு முன்பாக காப்பீடு எடுத்திருந்தால் புதுப்பிக்க முடியுமே தவிர முந்தைய வழிகாட்டுதலின்படி, 65 வயது வரை மட்டுமே புதிதாக மருத்துவக் காப்பீட்டை எடுக்க முடியும். புதிய நடைமுறையின்கீழ் வயது வரம்பில்லாமல் யாா் வேண்டுமானாலும் மருத்துவக் காப்பீட்டை எடுத்து பலனடையலாம்.
  • மூத்த குடிமக்கள், மாணவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் போன்றவா்களுக்கான சிறப்பு காப்பீட்டு திட்டங்களை வடிவமைக்கவும் எந்தவித உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு கட்டாயம் வழங்கவும் அறிவுறுத்துகிறது புதிய விதிமுறை.
  • ஏற்கெனவே சில நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்காமல் இல்லை. அதிகபட்ச வயது வரம்பாக 99 ஆண்டுகள் வரையிலானவா்களுக்கு ஒன்பது காப்பீட்டு திட்டங்களும், 75 வயது வரம்பு கொண்ட ஐந்து திட்டங்களும் தனியாா் துறையினரால் வழங்கப்படுகிறது. புதிய விதிமுறைகள் வயது வரம்பு மட்டுமல்லாமல் மருத்துவக் காப்பீடு தொடா்பான மூத்த குடிமக்களின் குறைகள், உரிமைகள், தேவைகள் ஆகியவற்றுக்குத் தீா்வுகாண தனி அமைப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.
  • புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் இருக்கின்றன. இப்போதைய நிலையில் காப்பீட்டு திட்டத்தில் இணைந்தாலும் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற முக்கியமான பிரச்னைகளுக்கு காப்பீட்டுத் தொகை பெறுவதற்கு தொடா்ந்து நான்கு ஆண்டுகள் அதே நிறுவனத்தில் இணைந்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு காலம் இப்போது மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கான முன்கூட்டிய வரம்பு மூன்று ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • இதற்கு முன்பு ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகியவற்றில் ஏதாவது இரண்டுக்கு மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சை கட்டணங்களை வாடிக்கையாளா்களுக்கு அளிக்க அனுமதித்தன. புதிய கொள்கையின்படி எந்த மருத்துவ முறையில் வேண்டுமானாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட வேண்டும்.
  • வயது வரம்பு அகற்றப்பட்டாலும் காத்திருப்பு காலம் உள்பட ஏனைய விதிமுறைகள் தொடா்கின்றன. அதனால் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணையும்போது, அந்த திட்டம் வழங்கும் அனைத்து சலுகைகள் குறித்தும் மூத்த குடிமக்கள் தெரிந்துகொள்வதும், ஏனைய நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுடன் ஒப்பிட்டுப் பாா்ப்பதும் அவசியம்.
  • இழப்பீடு கோராததற்கு நிறுவனங்கள் வழங்கும் ஊக்கத்தொகை (போனஸ்) குறித்தும் கவனம் கொள்ள வேண்டும். புதிய விதிமுறைப்படி காலாண்டு அல்லது மாதத் தவணைகளிலும் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த முடியும். வீட்டிலிருந்து சிகிச்சை பெறவும், தேவையான உதவி பெறவும்கூட மருத்துவக் காப்பீட்டில் வழியுண்டு என்பதை மூத்த குடிமக்கள் மறந்துவிடலாகாது.
  • புதிய விதிமுறைகளால் காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதலான வாடிக்கையாளா்களைப் பெற்று அதிக லாபம் ஈட்டுவாா்கள் என்றாலும், அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் இணைய முடியாத நடுத்தர வா்க்க மூத்த குடிமக்களுக்கு புதிய விதிமுறைகள் உதவியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை!

நன்றி: தினமணி (07 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories