- ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களில் பலருக்கு தொடர்ந்து தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறு தவணையை தொடர்ந்து செலுத்த முடியாமல் போனவர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி தொகை காப்பீட்டு நிறுவனங்களில் முடங்கி விடுகின்றன.
- இதில் வெகுசிலர் மட்டுமே பாலிசியை சரண்டர் செய்து செலுத்திய தவணையில் சிறு பகுதியை திரும்பப் பெறுகின்றனர். மிகவும் குறைவாக உள்ள சரண்டர் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பாலிசிதாரர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அண்மையில் வெளிவந்துள்ள இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) சரண்டர் மதிப்பு தொடர்பான அறிவிப்பு காப்பீட்டு நிறுவனங் களுக்கு மகிழ்ச்சியையும் பாலிசிதாரர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
சரண்டர் மதிப்பு என்றால் என்ன?
- ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து தவணைத் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத நிலையில், அவருக்கு ஆயுள் காப்பீடு கிடைக்காமல் போகும். இதனிடையே, தவணையை தவறவிட்டவர்களுக்கு உரிய அபராதத்துடன் நிலுவை தவணையை செலுத்தி காப்பீட்டை புதுப்பித்துக்கொள்ள அவ்வப்போது வாய்ப்பு வழங்கப்படுவது உண்டு.
- புதுப்பித்துக்கொள்ள விருப்பம் இல்லை யென்றால், காப்பிட்டை சரண்டர் செய்து கணக்கை முடித்துக்கொள்ள முடியும். அவ்வாறு ஆயுள் காப்பீட்டை உரிய காலத்துக்கு முன்பே சரண்டர் செய்தால், காப்பீட்டு நிறுவனம் பிடித்தம் போக திருப்பி அளிக்கும் தொகை தான் சரண்டர் மதிப்பு.
சரண்டர் மதிப்பின் அளவீடுகள்
- காப்பீடு எடுத்த முதல் ஆண்டிலேயே சரண்டர் செய்தால் எந்த ஒரு தொகையும் திரும்ப கிடைக்காது. பாலிசிதாரர் செலுத்திய மொத்த தவணையும் அவருக்கு நஷ்டமே. இரண்டாம் ஆண்டில் பாலிசியை சரண்டர் செய்தால் செலுத்திய தவணைத் தொகையில் 30% மூன்றாம் ஆண்டில் 35% திரும்ப கிடைக்கும். 4 முதல் 7 ஆண்டு வரையில் உள்ள காலத்தில் சரண்டர் செய்தால் 50% திரும்ப கிடைக்கும்.
- கடைசி இரண்டு ஆண்டுகளில் சரண்டர் செய்தால் 90% திரும்ப கிடைக்கும்.சிங்கிள் பிரீமியம் காப்பீடுகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்தால் சரண்டர் மதிப்பு 75 சதவீதமாகவும், பாலிசி காலத்தின் கடைசி 2 ஆண்டுகளில் சரண்டர் செய்தால் 90 சதவீதமாகவும் இருக்கும். 2021-22 ஆண்டில் ரூ.1.29 லட்சம் கோடி அளவுக்கு ஆயுள் காப்பீடுகள் சரண்டர் செய்யப்பட்டன. ஆனால் 2022-23 ம் ஆண்டில் இது 25.62% அதிகரித்து ரூ.1.98 லட்சம் கோடியாக இருந்தது. இதனால் பாலிசிதாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம்.
- இந்நிலையில், சரண்டர் மதிப்பை உயர்த்த வேண்டும் என பாலிசிதாரர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, டிசம்பர் 2023-ல் இதுதொடர்பாக காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் ஒரு வரைவு அறிக்கையை தயாரித்தது. அதில் சரண்டர் மதிப்பை எப்படி கணக்கிட வேண்டும் என்ற சில ஆலோசனைகளை முன்வைத்திருந்தது. இதில் பாலிசிதாரர்களுக்கு இப்போது கிடைப்பதைவிட கூடுதலாக சரண்டர் மதிப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
- உதாரணமாக, ஒருவர் ரூ.1லட்சம் வருடாந்திர தவணை கொண்ட காப்பீடை எடுத்து, 2 ஆண்டு தவணை செலுத்திய பிறகு சரண்டர் செய்தால் இப்போதைய நிலவரப்படி ரூ.60 ஆயிரம் கிடைக்கும். ஆனால் ஐஆர்டிஏஐ-யின் புதிய வரைவின்படி ரூ.1.65 லட்சம் கிடைத்திருக்கும். இதுவே 5 ஆண்டுக்கு பிறகு சரண்டர் செய்தால் இப்போதைய நிலவரப்படி ரூ.2.5 லட்சம் கிடைக்கும். ஆனால், புதிய வரைவின்படி ரூ.3.75 லட்சம் கிடைத்திருக்கும்.
- ஐஆர்டிஏஐ-யின் இந்த வரைவு அறிக்கை காப்பீட்டு நிறுவனங்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என ஐஆர்டிஏஐ அறிவித்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக ஒழுங்கு முறை ஆணையம் பின்வாங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
பாலிசிதாரர்கள் என்ன செய்யலாம்?
- அதேநேரம் சரண்டர் மதிப்பை அதிகரிக்க ஐஆர்டிஏஐ உத்தரவிடும் என்ற பாலிசிதாரர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. சரி, சாமானிய மக்கள் எதுபோன்ற முன்னெடுப்புகளை செயல் படுத்தலாம்? முதலாவதாக சேமிப்பு என்பது வேறு காப்பீடு என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காப்பீடுகளை சேமிப்பின் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.
- இந்த புரிதல் ஏற்பட்டால் காப்பீட்டை டெர்ம் இன்சூரன்ஸாக எடுப்பதின் அவசியம் புரியும். டெர்ம் இன்சூரன்ஸில் குறைந்த ப்ரீமியத்தில் அதிக அளவு காப்பீடு கிடைக்கும். ஆனால் இதற்கு முதிர்வுத் தொகை என்று ஒன்றும் கிடையாது. காப்பீடு எடுத்தவர் மரணம் அடைந்தால் வாரிசுகளுக்கு காப்பீடு தொகை கிடைக்கும்.
- இரண்டாவதாக எந்த காப்பீட்டையும் முழுவதும் புரிந்துகொண்டு எடுங்கள். ஒருவேளை தவறாக காப்பீட்டை எடுத்துவிட்டால் அதை 15 அல்லது 30 நாட்களுக்குள் ரத்து செய்து முழு தொகையும் திரும்ப பெறமுடியும். மூன்றாவதாக உங்களால் தொடர்ந்து காப்பீடு தவணை செலுத்த முடியாத நிலையில், சரண்டர் செய்யாமல் காப்பீட்டின் முதிர்வு தேதி வரைகாத்திருந்து செலுத்தப்பட்ட தவணைத் தொகையை (Paid up value) முழுவதுமாக பெறமுடியும்.
- இதற்கான தனியான கணக்கீடு உண்டு. நான்காவதாக சரண்டர் மதிப்பின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனத்திலோ அல்லது வங்கியிலோ கடன் வாங்க முடியும். உங்களுக்கு உள்ள நிதி பிரச்சினை தற்காலிகமானால் இதை தவணை செலுத்த பயன் படுத்தலாம். முக்கியமாக காப்பீடு தவணை செலுத்தவில்லை எனில் காப்பீடு இல்லாமல் போகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 04 – 2024)