காமிக்ஸ் உலகத்துக்குள் உலா
- தனியார் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் இல்லாத காலக்கட்டத்தில் அந்த இடத்தில் இருந்தவை காமிக்ஸ் நாவல்களே. வாசிப்புப் படிக்கட்டில் ‘இரும்புக்கை மாயாவி’யைக் கடக்காத ஒரு தலைமுறை இருக்கவே முடியாது. காலமாற்றத்தால் தொலைந்து போன அந்த காமிக்ஸ்களைத் தேடி ஆராய்ந்துவருபவர் கிங் விஸ்வா. 10 ஆயிரம் காமிக்ஸ் (சிறார் இலக்கியம் உள்பட) நூல்களைத் தேடிச் சேகரித்துள்ளார். காமிக்ஸ் உலகம் பற்றிய அவரது 5 நூல்கள் இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி யாவரும் பதிப்பகம் (அரங்கு எண்: 15, 16) வெளியிட்டுள்ளது.
- ஜப்பானின் மங்கா காமிக்ஸ் பற்றிய விஸ்வாவின் ‘ஜப்பானிய மங்கா காமிக்ஸ் - அறிமுகமும் ஆளுமைகளும்’ நூல் உலக அளவில் மங்கா காமிக்ஸ் அதிகமாகப் படிக்கப்படுவதற்கான காரணத்தை விளக்குகிறது. மங்கா காமிக்ஸ் நாம் படிக்கும் முறைக்கு நேரெதிராக வடிவமைக்கப்படுகிறது. வாசிப்பில் அது ஏற்படுத்தும் சூட்சுமத்தை நூல் திறந்து காட்டுகிறது.
- சிறந்த மங்கா காமிக்ஸ்களையும் விஸ்வா இந்த நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார். 18 ஆண்டுகளாக தமிழ் காமிக்ஸ் கலையை ஆவணப்படுத்துவதற்காக இவர் மேற்கொண்ட முயற்சியை ‘சித்திரமும் சரித்திரமும்’ என்கிற நூலில் விஸ்வா ஆவணப்படுத்தியுள்ளார். காமிக்ஸ் நாவல், கிராஃபிக் நாவல் ஆகிய இருவகையின் வேறுபாடுகள் பற்றி ‘கிராஃபிக் நாவல் - அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள்’ என்கிற நூலில் விஸ்வா விவரித்துள்ளார்.
- கிராஃபிக் நாவல்களை அணுகுவதற்கான வழிமுறைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன. கிராஃபிக் நாவல் ஆளுமைகளின் பின்னணிகளை விவரிப்பதன் வழி கிராஃபிக் நாவல்களுக்கான திறப்பை விஸ்வா இந்த நூல் வழி காண்பிக்கிறார். வெளிநாட்டு கிராஃபிக் நாவல்களே கொண்டாடப்படும் சூழலில், இந்திய கிராஃபிக்ஸ் நாவல்கள் பற்றிய அறிமுகத்தை ‘தலைசிறந்த இந்திய கிராஃபிக் நாவல்கள்’ நூல் நமக்கு அளிக்கிறது. நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படுவதை ஒட்டி ஒரிஜித் சிங் எழுதிய ‘எ ரிவர் ஆஃப் ஸ்டோரீஸ்’ (A River of Stories) நூலை இந்தியாவின் முதல் கிராபிக் நாவல் என விஸ்வா இந்த நூல் வழி முன்னிறுத்துகிறார்.
- இத்துடன் கடந்த பத்தாண்டுகளில் வெளியான சிறந்த 25 கிராஃபிக் நாவல்களை இந்த நூல் அறிமுகப்படுத்திவைக்கிறது. உலக அளவில் பிரசித்திபெற்ற பதினேழு கிராஃபிக் நாவல்களைப் பற்றி ‘தலைசிறந்த கிராஃபிக் நாவல்கள்’ நூல் எடுத்தியம்புகிறது. இவற்றில் பெரும்பாலானவை சமகால கிராஃபிக் நாவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு படமும் உருவான பின்னணியுடன் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)