- புதிய வாய்ப்புகளின் தொடக்கமாக இருக்கட்டும்! கடந்த வாரம் புதன் அன்று கார்ட்டோசாட்-3 செயற்கைக் கோளையும், அமெரிக்காவின் 13 சிறிய செயற்கைக்கோள் களையும் இஸ்ரோ நிறுவனம் ஏவியிருப்பது இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்ப மைல்கல்லாகும்.
- கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் ஒளிப்படத்தைப் பொறுத்தவரை 25 செமீ துல்லியத்தை எட்டியிருக்கிறது. உலகின் சிறந்த ராணுவ செயற்கைக்கோள்களின் துல்லியம் 10 செமீ எனும்போது, கார்ட்டோசாட்-3-ன் சாதனையை நம்மால் உணர முடியும். வணிகரீதியில் கிடைக்கக்கூடிய செயற்கைக்கோள் ஒளிப்படங்களின் துல்லியம் 25-30 செமீ என்பதையும் ஒப்பிட்டுப்பார்க் கலாம்.
கார்ட்டோசாட்-3
- வணிகரீதியிலான செயற்கைக்கோளாக கார்ட்டோசாட்-3 ஏராளமான பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது. ராணுவரீதியில் உளவு பார்ப்பது இதன் பயன்பாடுகளுள் ஒன்று. இதற்கு முன்பு அனுப்பப்பட்ட கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் 65 செமீ ஒளிப்படத் துல்லியத்தைக் கொண்டிருந்தது.
- அதன் உதவியால்தான் 2016-ல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் 2015-ல் மணிப்பூர்-மியான்மர் எல்லையிலும் துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
- அரசைப் பொறுத்தவரை சாலைக் கட்டுமானங்கள், கடற்கரை மணல் அரிப்பு, காடுகள் பராமரிப்பு, கடல்களில் ஏற்படும் மாற்றம், உள்கட்டுமான வளர்ச்சி போன்றவற்றுக்கு கார்ட்டோசாட்-3-ன் ஒளிப்படத் துல்லியம் உதவிபுரியும்.
- செயற்கைக்கோள்களை ஏவுவதென்பது இந்தியாவில் காட்சிக்கு விருந்தாகும் அதே நேரத்தில், வணிகத் துறையிலும் வருமானத்தை ஈட்டுவதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உதவினால்தான் அவை பயனுள்ளவையாக இருக்க முடியும்.
- ஒரு மீட்டருக்கும் குறைவான துல்லியம் உள்ள செயற்கைக்கோள் ஒளிப்படங்களைப் பெறுவதில் இந்தியாவில் கட்டுப்பாடுகள் உள்ளன.
- இஸ்ரோவின் ஏவுகலங்களில் இந்திய தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை அனுப்புவதைப் பொறுத்தவரை இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். இஸ்ரோ சமீபத்தில் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டெட் (என்எஸ்ஐஎல்) என்ற பொதுத் துறை நிறுவனத்தை ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்குப் போட்டியாக உருவாக்கியுள்ளது. ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தைப் போலவே இதுவும் விண்வெளித் துறை தொடர்பான தயாரிப்புகளையும் செயற்கைக்கோள் மேம்பாட்டு ஒப்பந்தங்களையும் வணிகரீதியில் மேற்கொள்வதற்கானது.
வெளிநாட்டு செயற்கைக்கோள்கள்
- கார்ட்டோசாட்-3 உடன் சேர்த்து, அமெரிக்காவின் 13 செயற்கைக் கோள்களை ஏவியது, என்எஸ்ஐஎல் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால், ஆண்ட்ரிக்ஸைப் போல அதிகாரத் தரப்பு முட்டுக்கட்டைகளால் என்எஸ்ஐஎல்லுக்கு எந்தத் தேக்கமும் நேர்ந்துவிடக் கூடாது.
- கார்ட்டோசாட்-3ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் புதுமையான மின்னணுச் சாதனங்கள் தனியார் துறையுடன் இஸ்ரோ சேர்ந்து அதிநவீனத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
- சிறிய மற்றும் நடுத்தர அளவு செயற்கைக்கோள்களை ஏவுவது இஸ்ரோவின் தனித்திறன். இந்நிலையில், கார்ட்டோசாட்-3-ல் இருக்கும் தொழில்நுட்பத்தை உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை இஸ்ரோ கண்டறிய வேண்டும். மேலும், செயற்கைக்கோள் மேம்பாட்டுத் திட்டங்கள் இஸ்ரோவுக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் கிடைக்கவும் வழிவகுக்க வேண்டும்.
- இந்தியாவின் தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றாக இஸ்ரோவின் சாதனைகள் உறுதியாக விளங்கும் அதே நேரத்தில், உள்நாட்டு வணிகத்துக்கு அது பங்களிப்பு செய்வதற்கு இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும். அதற்கு கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோளை ஏவியது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (02-12-2019)