TNPSC Thervupettagam

கார்லோ கின்ஸ்பெர்க்: நுண்வரலாறு என்கிற அறிதல் முறை

September 11 , 2023 481 days 353 0
  • கார்லோ கின்ஸ்பெர்க் (பி.1939) இத்தாலி நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், வரலாற்றுக் கோட்பாட்டாளர். இத்தாலிபோலாக்னா பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில்லாஸ் ஏஞ்செலஸ் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியவர். இவர் அறிமுகப்படுத்திய அறிதல் முறை, நுண்வரலாறு (Microhistory) எனப்படுவது. இவரது மிகவும் புகழ்பெற்ற நூலான ‘Cheese and Worms: The Cosmos of a Sixteenth Century Miller’ (1980) இந்த முறையியலின் சிறந்த முன்னோடியாக விளங்குகிறது. கொலம்பியா பல்கலைக்கழத்தில் இவரது உரையைக் கேட்கவும், அதன் பிறகு உரையாடவும் கிடைத்த வாய்ப்பு எனக்கு ஓர் இனிய அனுபவமாக அமைந்தது.
  • எல்லா மானுடச் சமூகங்களுமே ஏதோ ஒரு விதத்தில் தங்கள் கடந்த காலத்தைப் பதிவுசெய்து வந்துள்ளன. கதைப்பாடல்களாக, கற்பனை கலந்த காவியங்களாகப் பல்வேறு விதங்களில் தாங்கள் அறிந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்துள்ளன. அப்போதெல்லாம் எழுதுதல் என்பது சாத்தியமாக இருந்தாலும், எதில் எழுதுவது, அதை எப்படிப் பத்திரப்படுத்தி வைப்பது என்பது சவால்தான் என்பதால், பெரும்பாலும் பாடல்களாக, கவிதையாகச் சொல்லி மனனம் செய்து கூறிவிடுவது வசதி. சுவடிகளில் எழுதுவது, அவற்றைத் தொடர்ந்து பிரதி எடுப்பது என்பன போன்ற முறைகளும் ஓரளவு பின்பற்றப்பட்டன.
  • அச்சு இயந்திரம் பொ.. (கி.பி.) 1436-55 காலகட்டத்தில் கூட்டன்பர்க்கால் உருவாக்கப்பட்ட பிறகுதான், எழுதியவற்றை அச்சடித்து நூல்களாக்கி வாசிக்கவும், பாதுகாக்கவும் வசதி ஏற்பட்டது. நிறைய பிரதிகளை அச்சடிக்க முடியும் என்பதால் நிறைய எழுதவும், அதை நிறையப் பேர் வாசிக்கவும் வசதி ஏற்பட்டது. இதுதான் நவீன வரலாற்று எழுதியலுக்கு முக்கியக் கால்கோளாக இருந்தது. உரைநடை எழுத்தில் வரலாறு எழுதுவது தொடங்கியவுடன், பெருநோக்கு வரலாறு அல்லது மையநீரோட்ட வரலாறு என்பது பேரரசுகள் உருவானது, சிதைந்தது ஆகியவற்றைக் குறித்த தகவல்களைத் திரட்டிப் பதிவுசெய்வதில் கவனம் குவித்தது. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் வேகமெடுத்த வரலாற்று எழுதியல், இருபதாம் நூற்றாண்டில் வரலாறு என்பதை முக்கிய அறிவுத் துறையாக நிறுவியது.
  • சென்ற கட்டுரையில் நாம் விவாதித்த டிரியோ (Michel-Rolph Trouillot: ‘Silencing the Past: Power and Production of History’) எழுப்பிய கேள்விகளைப் போல மைய நீரோட்ட வரலாற்று எழுதியலில் பலவிதமான விடுபடல்களும், குறைபாடுகளும் இருந்தன. அதையொட்டியே 20ஆம் நூற்றாண்டில் பல்வேறு மாற்று அறிதல் முறைகளும், விமர்சனங்களும், தத்துவப் பார்வைகளும் வரலாற்று எழுதியல் களத்தில் உருவாகின. அவற்றில் ஒன்றுதான் நுண்வரலாற்று அறிதல் முறை.

பாலாடைக்கட்டியும் புழுக்களும்

  • இத்தாலியின் வடகிழக்கு எல்லையோர மாவட்டமான ஃபிரியூலியில் 1532இல் பிறந்தவர் மெனோக்கியோ. இவர் சில மாவு மில்களை நடத்திவந்ததுடன், தச்சு வேலை போன்ற உதிரித் தொழில்களையும் செய்துவந்துள்ளார். கத்தோலிக்க நம்பிக்கைகளை இழிவுசெய்வதாக, எதிர்த்துப் பிரசாரம் செய்வதாக இவர் மீது பொ.. 1583இல் கத்தோலிக்க சமயக் குற்ற விசாரணை மன்றத்திடம் (இன்க்விசிஷன் – inquisition) புகார் கொடுக்கப்பட்டது. வேளாண் சமூகத்தைச் சேர்ந்த ஓர் எளிய மனிதர் குறித்த வழக்கின் ஆவணங்களை எந்த வரலாற்று ஆசிரியர் பொருள்படுத்துவார் என்பது ஒரு கேள்வி.
  • கார்லோ கின்ஸ்பெர்க் தற்செயலாகவே இந்த வழக்கைக் கண்ணுறுகிறார். அவர் ஃபிரியூலியில் அதே காலகட்டத்தில் இருந்த ஒரு ரகசிய மதக் குழுவின், சூனியக்காரிகள் எனப்பட்டவர்களின் நடவடிக்கைகள், அவர்கள் மீதான சமயக் குற்ற விசாரணை குறித்தே ஆராயச் செல்கிறார். ஆனால், மெனோக்கியோ கூறிய ஒரு கருத்து அவர் கவனத்தை ஈர்க்கிறது. அது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பது குறித்தது. பிரபஞ்சம் தொடக்கத்தில் வடிவமற்ற குழப்பமான கலவையாக (chaos) இருந்தது என்றும், பாலாடைக்கட்டி அழுகும்போது புழுக்கள் தோன்றுவதைப் போல அந்தக் கலவையிலிருந்து கடவுளும், தேவதைகளும், மனிதர்களும் தோன்றினார்கள் என்பதே அந்தக் கருத்து. கத்தோலிக்க நம்பிக்கையின்படி கடவுள்தானே அனைத்து உலகங்களையும், மனிதர்களையும் படைத்தார். பிறகு, ஏன் இந்த எளிய கத்தோலிக்கக் கிறிஸ்துவர் இப்படிச் சொல்ல வேண்டும் என்பதே கேள்வி.
  • மெனோக்கியோவின் நீண்ட வழக்கு விசாரணை ஆவணங்கள், தீர்ப்பு உள்ளிட்டவை சமயக் குற்ற விசாரணை மன்றத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததால், அவற்றின் அடிப்படையில் மெனோக்கியோவின் சிந்தனைகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை ஆராய்கிறார் கின்ஸ்பெர்க். அநாமதேயமான அந்த மாவுமில்காரரின் சிந்தனையோட்டம் மிகவும் சுவாரசியமான கோட்டுச்சித்திரமாக அதில் உருவாகிறது. உதாரணமாக, அவர் எந்தெந்த நூல்களைப் படித்தார் என்பதற்கான ஒரு குறிப்பு கிடைக்கிறது. மெனோக்கியோ பத்துப் பதினோரு புத்தகங்களை வாசித்துள்ளார் என்பதுடன், அவற்றை அவருக்கே உரிய விதத்தில் உள்வாங்கி இருப்பதையும், அவற்றால் தூண்டப்பட்டு அவராகவே சிந்தித்திருப்பதையும் விவரிக்கிறார் கின்ஸ்பெர்க். புனித குரானின் இத்தாலிய மொழியாக்கத்தைக்கூட அவர் படித்திருக்கலாம் என்று தெரிகிறது.
  • கத்தோலிக்கர்களின் ஆதார நம்பிக்கைகள் பலவற்றைக் கேள்வி கேட்டதும், அக்கம்பக்கத்தில் பலரிடம் கேலி பேசியதும்தான் மெனோக்கியோ மீதான குற்றங்கள். கடவுள் ஆதிப் பெருங்குழப்பத்திலிருந்து தோன்றினார் என்பது, கிறிஸ்து கடவுளாயிருந்தால் ஏன் சிலுவையில் அறையப்பட ஒப்புக்கொள்கிறார் என்பது, கன்னி மேரிக்குப் பிறந்தவரா அவர் என்று கேட்பது என்பன போன்ற பல மத எதிர்ப்பு (heresy) சிந்தனைகளைப் பரப்பியதற்குச் சாட்சிகள் கிடைக்கின்றன. இதை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள். மூன்றாண்டுகள் சிறையில் இருந்தார். பிறகு, தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சியதால் விடுவிக்கப்பட்டார். ஆனால், 15 ஆண்டுகள் கழித்து 67 வயதில் மீண்டும் இதேபோல மதஎதிர்ப்புக் கருத்துக்களைப் பேசுகிறார் என்பதை அறிந்து கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. உண்மையில், அவர் சுதந்திரச் சிந்தனையாளராக இருந்தும் அதற்கு அனுமதி இல்லாததால், அதற்கான சமூக அந்தஸ்து இல்லாத எளியவராக இருப்பதால் குற்றவாளியானார்.
  • மிகப்பெரிய வரலாற்று அசைவுகளின் அடியிலுள்ள மெனோக்கியோ என்ற எளிய மனிதரின் வாழ்க்கையின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ள நமக்கு நுண்வரலாற்று நோக்கு வேண்டும் என்பதே இந்த நூல் உணர்த்தும் செய்தி.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories