TNPSC Thervupettagam

காற்று மாசு எச்சரிக்கை தில்லிக்கு மட்டுமல்ல! பட்டாசுகளும் பயிர்க்கழிவுகளுமே காரணமுமல்ல

November 13 , 2023 425 days 269 0
  • தில்லியில் காற்று மாசு எதிர்பாராத அளவுக்கு மோசமடைந்துள்ளது. இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் தில்லியில் காற்றின் தரம் எப்போதும் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது.
  • கடந்த சில நாள்களாக அங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) 450 புள்ளிகளுக்கும் மேல் கடந்து 'கடுமை' (Severe) பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது (இடையே ஒரு நாள் பெய்த மழையால் சற்று ஆறுதல்). தில்லி மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
  • தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, கழிவுகள் எரிக்கப்படுதல், வாகனப் பயன்பாட்டின் பெருக்கம், கட்டுமானப் பணிகள், காற்றின் திசை மாறுபாடு உள்ளிட்டவை காற்று மாசுக்கு முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.
  • காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் தில்லி அரசும் பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமானப் பணிகள் நிறுத்தம், பதிவெண் அடிப்படையில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு என மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • தில்லியில் வாகனங்களின் பெருக்கம் அதிகம் இருந்தாலும் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் அதிகம் எரிக்கப்படுவதுதான் தில்லி காற்று மாசுக்கு முக்கியக் காரணம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
  • அதிலும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிர்க் கழிவுகள் அதிகம் எரிக்கப்படுவதால் தில்லியில் இந்த மாதங்களில் காற்று மாசு அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
  • சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமே இவ்வாறு கூறியதுடன், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

காற்று மாசைக் குறைக்கத் தெளிக்கப்படும் தண்ணீர்

  • ஆனால், உண்மையில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது மட்டுமே தில்லி மாசுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது.
  • தில்லியில் வாகனப் பெருக்கம் அதிகரித்துள்ளதும் மக்கள் குப்பைகளை, கழிவுகளை ஆங்காங்கே எரிப்பதும் காரணம்தான் என நிபுணர்களே கூறுகின்றனர். மேலும் குப்பைகளின் மீது சிகரெட் அல்லது தீக்குச்சிகளை எறிவதனால் தீப்பற்றி எரிவதனால் காற்று மாசுபடுவதும் தில்லியில் அதிகம் நடக்கிறது.
  • ஏனெனில், தில்லியில் கடந்த 10 மாதங்களில் குப்பைகளை எரித்தல் தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு 2,400 போன் அழைப்புகள் வந்துள்ளன. கடந்த அக்டோபரில் மட்டும் 457 அழைப்புகள், நவ. 1 ஆம் தேதி மட்டும் 29 அழைப்புகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய தில்லி நிலைமைக்குக் குப்பைகளை எரிக்கும் மக்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் அலட்சியம்தான் முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சென்னையில்

  • சென்னையைப் பொருத்தவரை காற்றின் தரக் குறியீடு கிட்டத்தட்ட 100 என்ற அளவில் உள்ளது.  சென்னையில் கும்மிடிப்பூண்டி, இந்தியாவில் மாசடைந்த 10 நகரங்களில் ஒன்றாக உள்ளது.
  • ஆனால், கடந்த அக்டோபர் மாத இறுதியில் சென்னையின் ஒருசில பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக காற்றின் தரக் குறியீடு 100 ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் 195, பெருங்குடி 164 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் காற்றின் தரம் மோசமானதற்கு காரணங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
  • நடப்பு ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் துறையால் வெளியிடப்பட்ட 'சுத்தமான காற்று நகரம்' என்ற ஆய்வு அறிக்கையின்படி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 47 நகரங்களில் சென்னை 39 ஆவது இடத்தில் உள்ளது. மதுரை 46 ஆவது இடத்தில் உள்ளது.
  • இதுபோல மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் காற்று மாசு அதிகரித்துதான் காணப்படுகிறது.

பாதிப்புகள்

  • காற்று மாசினால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நெஞ்சு வலி, மூளை பக்கவாதம், மூட்டு வலி உள்ளிட்ட இதர மோசமான பாதிப்புகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • காற்று மாசுபாட்டுக்கும் புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கு பல சான்றுகள் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இணை பேராசிரியர் பியூஷ் ரஞ்சன், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
  • சில மோசமான நிலைமைகள், கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
  • காற்று மாசு அதிகம் இருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு மூளை மற்றும் இதயத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படாவிட்டால் அனைத்து வயதினரிடமும் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • காற்றின் தரக் குறியீடு 400-க்கு மேல் இருக்கும்பட்சத்தில் அந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
  • சமீபத்தில் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காற்று மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும் காற்று மாசினால் வட இந்தியாவில் ஒரு மனிதன் சராசரியாக 9-10 ஆண்டு ஆயுள்காலத்தை இழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு நோய்

  • காற்று மாசால் சுவாசப் பிரச்னைகள் மட்டுமின்றி, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலும் சமீபத்திய ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
  • 2010-17 வரை தில்லி மற்றும் சென்னையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மாசுத் துகள்கள் (பிஎம்) 2.5 அளவு அதிகரிக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் என்பது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தலைமுடியின் இழையைவிட 30 மடங்கு மெல்லிய பிஎம் 2.5 துகள்களில் சல்பேட்டுகள், நைட்ரேட்டுகள், கன உலோகங்கள் மற்றும் கார்பன் போன்றவை இருக்கும். இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் கொழுப்பு செல்களில் தங்கி வீக்கத்தை ஏற்படுத்தி இறுதியாக இதயத் தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது இந்த ஆய்வு.
  • ஆய்வின்படி, தில்லியில் ஆண்டுக்கு பி.எம். 2.5 அளவு சராசரியாக 82-100μg/m3 ஆகவும், சென்னையில் 30-40μg/m3 ஆகவும் உள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வரம்பு 5μg/m3 மட்டுமே. இதன்படி பி.எம். 2.5 அளவு நகரங்களில் பன்மடங்கு அதிகமாக உள்ளது.
  • நகரங்களில் உள்ளவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு சுற்றுச்சூழல் ஒரு முக்கிய காரணம் என்று கூறும் ஆய்வாளர்கள், சாதாரணமாகவே இந்த பி.எம். 2.5 துகள்கள் மூச்சின் வழியாக உள்ளிழுக்கப்படும்போது ஆரோக்கியமான உடலில் உள்ள உறுப்புகளிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

எச்சரிக்கை!  

  • விழா நாள்களில் குறிப்பாக தீபாவளி பண்டிகை நாள்களில் நகரங்களில் காற்று மாசு சற்று அதிகமாக இருக்கும். ஆனால், ஒட்டுமொத்த காற்று மாசுக்கு பட்டாசுகள் மட்டும் காரணமல்ல. கடந்த அக்டோபர் மாதம் சென்னையின் பல்வேறு பகுதியில் காற்றின் தரக் குறியீடு அதிகமானதற்குக் காரணங்கள் ஏதும் தெரியவில்லை.
  • சுற்றுச்சூழல் கருதி பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றமும் பெரும்பாலான மாநிலங்களும் அறிவுறுத்தி உள்ளன. நகரங்களில் குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. எனவே பட்டாசுகள் மட்டும் சுற்றுச்சூழல் மாசுக்கு காரணமாகாது என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
  • 'தில்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு அண்டை மாநிலங்களும் காரணம். எனவே, தில்லி அரசால் மட்டும் இதனை தடுத்துவிட முடியாது' என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அதன்படியே, நகரங்களில் ஏற்படும் காற்று மாசுக்கு சுற்றியிருக்கும் பகுதிகளும் காரணம்தான்.
  • அதுபோல, காற்று மாசைக் கட்டுப்படுத்துவது என்பது ஒருவரால் முடியாது, இது அனைவரின் கடமை. தனிப்பட்ட ஒவ்வொருவரும் இதுகுறித்த விழிப்புணர்வுடன் செயல்பட்டும் மத்திய, மாநில அரசுகளும் மோசமான சூழ்நிலை வந்தபின்னர் அதுகுறித்து யோசிக்காமல், வருவதற்கு முன்னால் தொடர்ச்சியான நடவடிக்கைகளை பின்பற்றினால் மட்டுமே எதிர்காலத்தில் இதன் கூடுதல் பாதிப்பை ஓரளவு குறைக்க முடியும்.
  • ஏனெனில், வாகனங்கள் பயன்பாடு என்பது இன்று அத்தியாவசியமாகிவிட்டது. ஆனால், பொதுவெளியில் குப்பைகளை எரிப்பது போன்ற பொறுப்பற்ற செயல்களை மக்கள் தவிர்க்கலாம்.
  • தில்லி நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் உள்ள மற்ற நகர  மக்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.
  • மேலும் தற்போதைய நிலவரப்படி, காற்றின் தரக்குறியீடு 50-க்கு மேல் உள்ள நகரங்களில் உள்ள மக்கள் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காற்று மாசிலிருந்து தங்களை காத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நன்றி: தினமணி (13 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories