TNPSC Thervupettagam

காற்று விதைத்தவன்

June 8 , 2024 219 days 266 0
  • மனித நடவடிக்கைகளினால் பூமியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிப் பேசும்போது இயல்பாகவே நம் மனத்தில் சில கேள்விகள் எழுகின்றன- மனிதனின் வரவுக்கு முன்னால் புவியின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதில்லையா? மனித இனம் தோன்றியிராவிடில் புவிக்கோள் அப்படியே இருந்திருக்குமா?
  • இல்லை. மாற்றம் அண்டத்தின் நியதியாக இருந்துவருகிறது. பெரு வெடிப்பின் காலம் தொடங்கி, பால்வெளி தோன்றி, 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியன் என்னும் சிறு விண்மீன் குடும்பத்தின் ஓர் உறுப்பாக புவிக்கோள் தோற்றம் கொண்டு, உயிர்களைத் தோற்றுவித்துப் பராமரிக்கும் அளவுக்குத் தணிந்து (300 கோடி ஆண்டுகள்), மனித இனம் தோன்றி, செயற்கை நுண்ணறிவைச் சாத்தியப் படுத்தியிருக்கும் இன்றைய காலம் வரை- உறைபனிக்காலம், கடும் வெப்பக்காலம் என்பதாக உலகின் காலநிலை பல யுகங்களாக மாறிமாறி வந்திருக்கிறது.

ஜுராசிக் பல்லிகள்:

  • டிவோனியன் காலவெளியில் உலகின் உயர்ந்த உயிரினங்களாகக் கோலோச்சியவை மீன்களே. ஜுராசிக் யுகத்தில் டைனசோர் உள்ளிட்ட ராட்சதப் பல்லிகள் புவியில் ஆதிக்கம் செலுத்தியிருந்தன. அவற்றோடு பறக்கும் பல்லிகளும் நீந்தும் பல்லிகளும் வாழ்ந்துள்ளன. ஜுராசிக் யுகத்தின் முடிவில் ராட்சதப் பல்லியினங்கள் ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறியப்பட்டன.
  • ராட்சதப் பல்லிகளின் மட்டுமீறிய பெருக்கமும், அதனால் நேர்ந்த உணவுப் பஞ்சமும், எதிர்பாராத தொல்லியல் நிகழ்வுகளும் அவற்றின் அழிவுக்குக் காரணமாகியிருக்கலாம் என்கிறார்கள். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கற்கள் புவியில் மோதியதே அத்தொல்லியல் நிகழ்வு என்றொரு கருத்தும் உண்டு.
  • இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது- உயிர்களினால் உலகத்தை அழிக்க முடியாது என்பதாகும்; உயிரினங்கள் எல்லை மீறும்போது பூமி அதைச் சமன் செய்துகொள்கிறது. பெருந்தொற்றுக் கொள்ளை நோய் களும், உணவுப் பஞ்சமும் பூமிக்குக் கையடக்கமான ஆயுதங்கள்.
  • மனிதன் ஏற்படுத்திவரும் காலநிலைப் பேரிடரால் பல்லுயிரினங்களும், கூடவே மனித இனமும் அழிவைச் சந்திக்கலாமே ஒழிய, அதன் பொருட்டு உலகம் ஒருபோதும் அழிவைச் சந்திக்கப் போவதில்லை. தொல்லியல் மாற்றங்கள் அவற்றுக்கே உரிய வேகத்தில் நிகழ்பவை; கடந்த 2000 ஆண்டுகளில் நிகழ்ந்திராத வேகத்தில் காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக் கின்றன.
  • தொழிற் புரட்சிக்குப் பிறகு, குறிப்பாகக் கடந்த 200 ஆண்டுகளில் அது மேலும் வேகமெடுத்துள்ளது. ‘கரிம நிகர் வளி’ உமிழ்வு அதிகரிப்பினால் வளிமண்டல வெப்பநிலை வேகமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. கடல் தோன்றிய காலத்திலிருந்து அதன் மட்டம் 25 மீட்டர் உயர்ந் திருக்கிறது.

கணிக்க முடியாத புயல்கள்:

  • சரி, பெருங்கடல்களின் இன்றைய நிலைக்கு வருவோம். அமேசான் காடுகளுக்கு அடுத்தபடியாக ஆய்வாளர்களால் புரிந்துகொள்ள முடியாத பகுதியாக வங்கக் கடல் மாறியிருக்கிறது. கடந்த இரண்டு பத்தாண்டு காலத்தில் வடகிழக்குப் பருவகாலப் புயல்கள் தொடர்ந்து உருவாவதும், அப்புயல்கள் கணிப் பிற்கு அடங்காமல் போவதும் புதிராகவே உள்ளன.
  • தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தொடங்கி, வங்கக் கடல், அரபிக்கடல் கடந்து, காம்பே வளைகுடாவில் (குஜராத்) பலவீனமடைந்து, கரை கடந்த ஒக்கி புயல் (2018 நவம்பர்), 75 ஆண்டுகளில் முதல் முறையாக கணிக்க முடியாத புயல் என்கிறார், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உயரதிகாரி திருப்புகழ்.
  • அமெரிக்க நாடுகளில் ஐந்து நாள் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் பொதுவாக மூன்று நாள் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. ஒக்கி புயலைப் பொறுத்தவரை 18 மணி நேர எச்சரிக்கைதான் கொடுக்க முடிந்தது. நாகைக் கடற்கரையில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்ட கஜா புயல் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டக் கடற்கரைகளில் கரை கடந்தது. அதற்குப் பிந்தைய வருடங்களில் உருவான பல புயல்களும் கணிக்க முடியாமலிருந்தன.

கடலில் நன்னீர் வந்து சேரவில்லை:

  • பிரம்மபுத்திரா தொடங்கி, ஆறு முக்கியமான ஆறுகள் வங்கக் கடலுக்குக் கொணரும் நன்னீரின் அளவு வெப்பநிலையின் பருவச் சுழற்சியைத் தீர்மானிக்கும் முக்கியமான கூறாகஇருந்துள்ளது. கடலில் சேரும் நன்னீரானது, அதன் குறைவான அடர்த்திநிலை காரணமாக, மேல் மட்டத்தில் ஒரு திரவ அடுக்காக நீடித்து, கடலாழத்தின் வெப்பச் சலனங்களை இடைமறிக்கிறது.
  • ‘வங்கக் கடலில் சேரும் ஆறுகள் முன்புபோல் போதிய அளவு நன்னீரைக் கொணரவில்லை; அதன் காரணமாக, மேல்மட்ட நன்னீர்த் திரவ அடுக்கு பலவீனமடைந்துவிட்டது. வங்கக் கடல் புயல்களின் எண்ணிக்கை கூடியதற்கும், கணிப்பிற்கு அடங்காத அவற்றின் போக்குக்கும் இது முக்கியமான காரணம்’ என்கிறார் பருவநிலை ஆய்வாளர் வெங்கடேசன்.
  • ‘கடலின் மேலடுக்குகளில் இயல்பான வெப்பச் சுழற்சி தடைபடும் நிலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் மேலடுக்குச் சுழற்சியும் மாற்றமடை கின்றன’ என்பது அவர் கருத்து.

மரண மண்டலங்கள்:

  • கடலின் உயிர்ச் சூழலுக்கு ஆபத்தானவை வேதிமங்கள் மட்டுமல்ல; மிகையாகக் கொட்டப்படும் உயிர்ச்சத்துகளும்தான். வேதிமங்கள் கடற்பாசி களில் மட்டுமீறிய வளர்ச்சியைத் தூண்டி, கடலின் உயிர்வளி (ஆக்சிஜன்) இருப்பைக் காலிசெய்துவிடுகின்றன.
  • இதன் விளைவாகக் கடலில் மரணமண்டலங்கள் உருவாகிக் கொண்டிருக் கின்றன. திடீரென ஏற்படும் உயிர்வளி வீழ்ச்சி மீன்கூட்டங்களை மொத்தமாகக் கொன்றுவிடுகின்றன. இப்பகுதிகளில் உயிரினங்கள் காணாமல் போய்விடுகின்றன.
  • 2004இல் உலகக் கடல்களில் 146 மரண மண்டலங்கள் உருவாயின; 2009இல் இந்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்தது. மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் 22,500 ச.கி.மீ. கடற்பரப்பு மரண மண்டலமாகியுள்ளது. இந்தியமுற்றுரிமைப் பொருளாதார மண்டலத்துக்கு உள்பட்ட வங்காள விரிகுடாக் கடற்பகுதியில் 65,000 ச.கி.மீ. பரப்பு மரண மண்டலமாகக் கண்டறியப் பட்டுள்ளது.

நிலத்தில் சமவுரிமை:

  • இப்படிக் கடல்கள் பாதிக்கப் படுவதால் காலநிலைப் பிறழ்வு தீவிரமடையும். இந்தக் காலநிலைப் பிறழ் வினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நலிந்த பிரிவினர்; அந்தப் பட்டியலில் முதலிடத்தில் வருபவர்கள் பெண்கள். சமூகத்தின் பண்பாட்டு, அரசியல், பொருளாதாரக் கூறுகளினால் அவர்கள் ஏற்கெனவே பலவீனப் பட்டிருக்கிறார்கள்.
  • உதாரணமாக, நிலத்தின் மீதான உரிமை. பெண்களுக்கு நிலத்தில் சமவுரிமை சாத்தியமானால் ஆண்களைவிட அவர்களால் 20% அதிக உற்பத்தியைச் சாதிக்க முடியும் என்கிறது ஐ.நா. முகமை ஒன்றின் ஆய்வறிக்கை. அதனால் மற்றோர் ஆரோக்கியமான மாற்றமும் உண்டாகும். உலக அளவில் பசிப்பிணியில் வாடுவோர் 17% குறைந்துவிடுவர்.
  • நலிந்த பிரிவினர் காலநிலைப் பிறழ்வின் தாக்கத்தை எதிர்கொள் வதற்கு இசைவான உளநலனை உத்தரவாதம் செய்துகொள்வது அரசின்முன்னுரிமையாக இருக்க வேண்டும். காலநிலைப் பிறழ்வு தற்போது நிகழ்ந்துவரும் எதார்த்தம். ஓர் உலகப் போரை எதிர்கொள்வதற்கான அவ்வளவு தயாரிப்புகளும் தேவைப் படுகிற சமூக நெருக்கடிநிலை.

காலநிலை அரசியல்:

  • மக்களின் வருவாய் உயர உயர, ஆற்றல் நுகர்வும் கரிமவளி உமிழ்வும் அதிகரிக்கின்றன. பொருளாதார ரீதியாக மேல்தட்டுகளில் இருப்பவர்கள் வளங்களை, ஆற்றலை மிகையாக நுகர்கின்றனர்; பெருமளவு பசுங்குடில்வளிகளை உமிழ்வோரும் அத்தரப்பினரே.
  • பெருமுதலாளிய நிறுவனங்களும் அமெரிக்கா உள்ளிட்ட வட கோள நாடுகளும் மேல்தட்டில் உட்கார்ந்திருக்கின்றன. ஒரு கென்யக் குடிமகன் உமிழும் கரிம வளி சராசரி அமெரிக்கரைவிட 55 மடங்கு குறைவு. ஒரு சராசரி கென்யரைவிட ஊர்ப்புற இனக் குழுவான தாலமியன் உமிழ்வது மிகக்குறைவானது.
  • கரிமவளி உமிழ்வின் அதிகபட்ச பாதிப்புகளைப் பொருளாதார வலுவற்ற மிகப் பெரும்பான்மையான மக்கள்,தென் கோள நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால்,பழியைச் சுமப்பவர்களும் தண் டனையை அனுபவிப்பவர்களும் இந்தத் தரப்பினரே என்பது வேடிக்கையாய் இல்லையா?

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories