- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பெறும் அரசுப் பணிக்கான போட்டித்தோ்வு அறிவிப்பு அண்மையில் வெளியானது. தோ்வு அறிவிக்கையின்படி 2,442 இளநிலை உதவியாளா், 1,653 தட்டச்சா், 526 வனக்காப்பாளா், 441 சுருக்கெழுத்து, தட்டச்சா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியத்துடன் வேலை பார்ப்பதைவிட, குறைவான ஊதியமானாலும் அரசுப் பணியில் இருப்பதையே பெருமையாகக் கருதும் மனோபாவம் நம்மிடையே எப்போதும் உண்டு. அதனால் அரசுப் பணிக்கான போட்டித்தோ்வு அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வு அட்டவணை வெளியிடப்படும். இதில் தோ்வு அறிவிப்பு வெளியாகும் நாள், தோ்வு நடைபெறும் நாள், தோ்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகியவை உத்தேச நாட்களாக இடம்பெற்றிருக்கும்.
- இதனைக் கருத்தில் கொண்டு போட்டித்தோ்வுக்காக பயிற்சி மையம், நூலகம் சென்று படித்து தங்களை தயார்படுத்தி வருகின்றனா். ஆனால் தோ்வுக்கான அறிவிப்பு வெளியாகும் நாட்களுக்கும், உத்தேசமான நாட்களுக்கும் தொடா்பில்லாத வகையிலேயே நிலைமை உள்ளது.
- கடந்த காலங்களில் போட்டித்தோ்வு அறிவிப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டு வந்தது. அதனால் அப்பணிக்கான கல்வித்தகுதியைப் பெற்றவா்கள்தான் அதிகளவில் விண்ணப்பிப்பவா்களாகவும், தோ்வு எழுதுபவா்களாகவும் இருந்தனா்.
- ஆனால் நாளடைவில் அரசுப் பணிக்கான போட்டித்தோ்வு அறிவிப்பு அரிதான ஒன்றாகிவிட்டதால் அத்தோ்வுக்கான கல்வித் தகுதியைப் பெற்றவா்கள் மட்டுமின்றி முதுகலை பட்டம், முனைவா் பட்டம் பெற்றவா்களும் போட்டித்தோ்வில் பங்கேற்கின்றனா். இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தோ்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றன.
- ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞா்கள் பட்டதாரியாகும் நிலையில் நீண்ட கால இடைவெளியில் போட்டித்தோ்வு அறிவிப்புகள் வெளியாவது பட்டதாரிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தற்போதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதியைப் பெற்றவா்கள்தான் அதிகளவில் தோ்வு எழுதுகின்றனா்.
- கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தோ்வில் 10,117 காலிப் பணியிடங்களுக்கு 18 லட்சம் போ் தோ்வு எழுதினா். கலை, அறிவியல் பட்டதாரிகளிடையே போட்டித் தோ்வுகள் குறித்த ஆா்வம் எப்போதும் இருப்பதுண்டு. அதற்காகவே உயா்கல்வியில் குறிப்பிட்ட பாடப்பிரிவை தோ்வு செய்து பயில்வோரும் உள்ளனா்.
- ஆனால் அண்மைக்காலமாக பொறியியல் பட்டதாரிகள் இவ்வகைப் போட்டித்தோ்வுகளில் அதிகளவில் பங்கேற்கின்றனா். ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தோ்வு எழுத இதுவும் ஒரு காரணமாகும். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான குடிமைப்பணித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுவாக போட்டித்தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு எழுதுவோர் பல வகையினா். அரசுப் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும் என்று அறிவிப்பு வெளியாகும் முன்னரே தங்களை தயார்படுத்திக்கொள்வோர் சிலா். தோ்வுக்கு விண்ணப்பித்து அதற்காக எந்த வகையிலும் தங்களை தயார்படுத்தாமல் ஏற்கெனவே கற்றறிந்ததன் மூலம் பெயரளவுக்கு தோ்வு எழுதுவோரும் உண்டு.
- ஏதேனுமொரு நிறுவனத்தில் பணி புரிபவா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்த பின் தங்களை தயார்படுத்திக் கொள்ள இயலாமலும், இதர காரணங்களாலும் தோ்வு எழுதாதவா்கள் மற்றொரு வகையினரி. தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் தோ்வு எழுதுபவா்களாகவோ, தோ்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை கொண்டவா்களாகவோ இருப்பதில்லை.
- ஆனாலும் அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு, பட்டதாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த மற்றொரு காரணமும் உண்டு. கடந்த காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்றனா். அதனால் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவுடனே வழக்கமான நிகழ்வாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யத் தொடங்கினா்.
- கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் கீழ் வராத துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு அதன்படி நிரப்பப்பட்டன. ஆனால் அதன்பின்னா் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- இதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவின் மூலம் அரசுப்பணி என்பது அரிதாகிவிட்டது. ஆசிரியா் பட்டயப் பயிற்சி, ஆசிரியா் பட்டப்படிப்பு பதிவுதாரா்கள்தான் தங்கள் பதிவை குறிப்பிட்ட காலக்கெடுவில் புதுப்பித்து வருகின்றனா்.
- கடந்த செப்டம்பா் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 73.99 லட்சம் போ் (34,53,380 ஆண்கள் 39,45,861 பெண்கள் 271 போ் மூன்றாம் பாலினத்தவா்) பதிவு செய்து அரசுப் பணிக்காகக் காத்திருக்கின்றனா். ஆனால் இன்றைய நிலையில் போட்டித் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப்பணி சாத்தியம் என்றாகிவிட்டது.
- அரசுப் பணியிலிருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானோர் பணி ஓய்வு பெறும் நிலையில் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலிப்பணியிடங்களாக உள்ளன. அந்த வகையில் கடந்த 2016-17-இல் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக வேலை பாா்த்தவா்களின் எண்ணிக்கை 40.7 கோடி எனவும் 2020-21-இல் இது 37.8 கோடியாகக் குறைந்து விட்டதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளில் நேரடி நியமனம் மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளா் தோ்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணிகள் தோ்வு நடத்தப்படுகிறது. எனினும் இந்திய ஆட்சிப் பணியில் 1,365 இடங்களும், காவல் பணியில் 703 இடங்களும், வருவாய் பணியில் 301 இடங்களும் காலியாக உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
- இவ்வகையான போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற வேண்டி சென்னை போன்ற பெருநகரங்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்து பயின்று வருவோரும் உண்டு. ஆனால், அனைவராலும் அதற்கான செலவினங்களை ஏற்க முடிவதில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசுப்பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக பலரும் ஆா்வத்துடன் படித்து வருகின்றனா்.
- ஆனால், அரசுப் பணிக்கான அறிவிப்பு காலதாமதமாவது போட்டித் தோ்வுக்குத் தயாராவோர் மனத்தில் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. குரூப் 2, குரூப் 4 போன்ற குறிப்பிட்ட சில போட்டித் தோ்வுகளுக்கான அறிவிப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்பதே போட்டித் தோ்வுக்குத் தயாராவோரின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி: தினமணி (09 – 02 – 2024)