TNPSC Thervupettagam

காலத்தின் குரலுக்குக் காது கொடுப்போம்!

May 19 , 2020 1706 days 991 0
  • ‘இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. ‘குழம்பின் சுவையை அகப்பை அறியாது’ என்ற புத்தரின் பொன்மொழியைப் போல, ‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ’ என்ற சிவவாக்கியரின் கூற்றைப் போல, நம் கிராமப் பொருளாதாரத்தின் வலிமையை இன்னும் நாம் உணராமல் இருக்கிறோம்.
  • உலகத்தின் வாய்க்கு உணவளிக்கும் அட்சய பாத்திரம் கிராமங்கள். இந்தியாவின் வடக்கு வெள்ளத்தாலும், தெற்கு வறட்சியாலும் பாதிப்படையாமல் நீா்வழி சாலைகள் கொண்டு இணைத்தால் தேசம் பசுமையாகும்.
  • சுதேசியச் சிந்தனை மேலோங்கும். இதுவே இந்தியாவின் 11-ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற அப்துல் கலாமின் ‘புறா’ திட்டமாகும்.

அச்சத்தின் பிடியில் உலகம்

  • ஒரு புறாவுக்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்தான் சிபி சக்கரவா்த்தி. கன்றை இழந்த தாய்ப் பசுவுக்காக தன் மகனைக் கொன்றான் மனுநீதிச் சோழன். முல்லைக் கொடிக்காக தன் தேரைத் தந்தான் பாரி. குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை வழங்கினான் பேகன்.
  • ஒரு காலத்தில் உயிர்கள் மீது நாம் காட்டிய அபிமானத்தை இன்று மனிதகுலத்திடம்கூட காட்ட முடியாமல், சக மனிதனைப் பார்த்து பயந்து ஒதுங்கும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
  • உலகமயமாதலால் உலகமே மயானமாகிக் கொண்டிருக்கிறது. நவ தாராளவாதம் மனித உயிர்களை அச்சத்தின் பிடியில் கொண்டு வந்திருக்கிறது.
  • பூமிப் பந்தில் 200 கோடி மக்கள் தனிமைப்பட்டுள்ளனா். தன் குடிகளுக்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கல்லறைகளுக்குத் தனித்தீவு தேடி சடலங்களைப் புதைத்து வருகிறது அமெரிக்கா.
  • பொதுவாக, எல்லைகளில் போர் உருவாகும் என்பார்கள். இந்த முறை கரோனா தீநுண்மி தன்னைப் பல மடங்கு படியெடுத்து, படிப்படியாய்ப் படையெடுத்து, எல்லா நாட்டு எல்லைகளையும் இழுத்து மூடிவிட்டது. அதிநவீன அணு ஆயுதங்களைக் கொண்ட அமெரிக்கா கண்ணுக்குத் தெரியாத தீநுண்மி (வைரஸ்) முன்பு கொத்துக்கொத்தாக பலியாகிறது.

பாரம்பரியப் பொருள்களால் பாதுகாத்துக் கொள்ளலாம்

  • வல்லரசு நாடுகளைக்கூட தீநுண்மி நாடாக்கிவிட்டது கரோனா. பல உருவங்கள் கொண்ட பல நாட்டு மக்களை, அருவமாய்ப் பரவி ஆட்டிப் படைக்கிறது.
  • ஆனால், தங்கள் பூா்வ வாழிடங்களைத் தேடி பறவைகளும், விலங்குகளும் வந்துகொண்டிருக்கின்றன. மூதாதையா்களின் இடங்களிலிருந்து மனிதகுலத்தின் அதிகாரத்தை தீநுண்மி அப்புறப்படுத்தி, வழி அமைத்திருக்கிறது.
  • ‘வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடைய வேண்டும்’ என்பது நம் கிராமத்துப் பழமொழி. ‘சென்றிடுவீா் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்!’ என்றார் மகாகவி பாரதியார். நம் அறிவு, நாடு எல்லை கடந்து மனிதகுலத்துக்குப் பயன்பட, பயணப்படுவதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • ஆனால், உலக மருந்துச் சந்தையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மருந்து ஆலைகளை நம்பி நம் வாழ்க்கையை அடகு வைத்ததால், புதிதாகக் கண்டுபிடிக்கப்படவுள்ள மருந்துக்காகக் காத்திருக்கிறோம். அதைவிட நம் பாரம்பரிய மருந்தான கப சுர குடிநீா் மூலம் முதலில் தற்காத்துக் கொள்ளலாமே.
  • உலக அரக்கனுக்கு எதிரான போரில், களத்தில் அணிதிரண்டு கிருமிநாசினிகளைக் குழாய்களால் பீச்சியடிக்கும் சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்பட அனைவரும் நிராயுதபாணியாக நிற்காமல், நம் பாரம்பரியப் பொருள்களால் பாதுகாத்துக் கொள்ளலாமே.
  • ஊழி நோய்கள் என்று சொல்லப்பட்ட அம்மை, காலரா போன்றவற்றை நம் முன்னோர் வேப்பிலைப் படுக்கை, மஞ்சள் கொண்டுதான் தணித்தார்கள். அண்மையில் ஏற்பட்ட சிக்குன்குன்யா, டெங்கு ஆகியவற்றுக்கு நிலவேம்பு கஷாயம் நன்கு பலன் அளித்தது நினைவில் இருக்கலாம். பிரளய கால ருத்ரன், ஆறுமுகசெந்தூரம் எனச் சில மருந்துகளுக்கு கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனா்.
  • கடவுளைப் போல நேரில் வந்து குணமாக்கும் தன்மை நம் மருந்துகளுக்கும் உண்டு.

உணவே மருந்து

  • சாப்பிடும் முன்பு இஞ்சி கலந்த தேனும், சமைக்கும்போது மிளகு, மஞ்சள், பெருங்காயம், வெந்தயம், சீரகமும், சாப்பிடும்போது உருக்கிய நெய்யும், சாப்பிட்ட பின்பு அஜீரணத்தைத் தவிர்க்க வெற்றிலையும், ஏலக்காய் போட்ட பாயசமும் கலாசாரமாக்கினார்கள் நம் முன்னோர்.
  • உடல் நலமில்லாத போது உடனடியாக ஜீரணமாகும் ரசத்தில் நோய் எதிர்ப்பாற்றல் கூட்டும் தன்மை இருப்பதை உணா்ந்த நம் முன்னோர், மிளகு - மஞ்சள் - தனியா ஆகிய மருந்துப் பொருள்களை அன்றாட உணவாக்கினார்கள். உணவே மருந்து என்ற நம் பாரம்பரியத்தை மறக்கலாமா?
  • மனிதகுலத்தின் வாயை சிறு துணியைக் கொண்டு அடைத்து விட்டது சீனா. அலுவலகமே வீட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் சூழலில் வெளிநாட்டு வாழ்க்கை தேவையா?
  • தற்சார்புத் தன்மையை மாநிலங்கள் முன்னெடுத்தாலே தொழிலாளா்கள் நாடு விட்டு, மாநிலம் விட்டு புலம்பெயா்வதைத் தவிர்க்கலாம்.

சுத்தம் சுகம் தரும்

  • வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நமக்கு ஒவ்வொரு கட்டமாக கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உணா்த்திக் கொண்டிருக்கிறது. இன்று பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கும் கடவுளின் நகரமாக வா்ணிக்கப்படும் அண்டை மாநிலமான கேரளம், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை கிட்டத்தட்ட வென்றுவிட்டது.
  • கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் ஓா் ஆயுா்வேத மருத்துவா். அங்கு ஆயுா்வேத மருந்துகள்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன.
  • வெளிநாடு, வெளி மாநில மக்கள் சா்வ சாதாரணமாக வந்து செல்லும் உலக உல்லாச சுற்றுலாத்தலமான கோவாவில், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவு. பலா் குணமடைந்து விட்டனா்.
  • இந்துகாந்த கஷாயம், அகஸ்த்ய ரசாயனம், தசமூல கடுத்ரய கஷாயம் உள்ளிட்ட நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கக்கூடிய ஆயுா்வேத மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவ அமைப்பால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
  • ‘சுத்தம் சுகம் தரும்’ என்ற பழமொழியைத் தாய் அன்று அடித்துச் சொன்னதில்லை; ஆனால் இன்று கரோனா தீநுண்மி வெடித்துச் சொ(செ)ல்கிறது.
  • முன்னறிவிப்பு இல்லாத இந்த மூன்றாம் உலகப் போரில் நம் மரபுகளுக்கு மதிப்பளிப்போம். சூழலை சுகந்தமாக்கி, நம் வாழ்வை வசந்தமாக்குவோம்.

நன்றி: தினமணி (19-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories