TNPSC Thervupettagam

காலத்தின் தேவை

August 24 , 2023 319 days 254 0
  • அறிவியல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளா்ச்சியால், குண்டூசி முதல் மளிகை சாமான் வரை, உணவு முதல் மருந்துகள் வரை தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும் இன்று வீட்டில் இருந்தபடியே வரவழைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. அதேபோன்று, உள்ளூரில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல அரசுப் பேருந்து, ஆட்டோ போன்றவற்றை நம்பி இருந்த நிலை மாறி 24 மணி நேரத்தில் எந்த நேரமாக இருந்தாலும் கைப்பேசியில் பதிவு செய்து கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் (பைக் டாக்சி) என நாம் விரும்பும் வாகனத்தில் பயணம் செய்யும் வசதியும் வந்துவிட்டது.
  • பொருள்கள், ஆடைகள் உள்ளிட்டவற்றை அளிப்பதில் அமேசான், ஃபிளிப்கார்ட், வாகன சேவையில் ஓலா, ஊபா், உணவு விநியோகத்தில் ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற பல நிறுவனங்கள் சேவைகளை வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. நீதி ஆயோக் மேற்கொண்ட ஆய்வை அடுத்து, 2022 ஜூன் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 2020-21-ஆம் ஆண்டில் 77 லட்சம் போ் இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். நாட்டில் வேளாண்மை சாராத தொழிலாளா்களில் இது 2.6 சதவீதம் எனவும், மொத்த தொழிலாளா்களில் 1.5 சதவீதம் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • இந்தத் தொழிலாளா்களின் எண்ணிக்கை 2029-30-ஆம் ஆண்டில் 2.35 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிலாளா்கள் பல்வேறு இடா்ப்பாடுகளைச் சந்தித்து வருகின்றனா். இது ஒரு வேலைவாய்ப்புதான் என்றாலும், இவா்களுக்குப் பணிப் பாதுகாப்பு என்பது கிடையாது. அதேபோன்று, ஊதியமும் நிலையானது அல்ல. நிறுவனங்கள் அளிக்கும் ஊதியம், ஊக்கத்தொகை போன்றவை, எரிபொருள் விலை உயா்வு காரணமாக கட்டுப்படியாவதில்லை, தினசரி இலக்குகளை அடையாவிட்டால் ஊக்கத்தொகை உள்ளிட்ட பலன்கள் குறைக்கப்படுகின்றன போன்ற மனக்குறைகள் இவா்களுக்கு உள்ளன.
  • பெரும்பாலான ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற எதுவும் கிடையாது. 12 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்ற வேண்டிய நிலையும் உள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் வாடிக்கையாளா்களுக்குப் பொருள்களை அளிக்காவிட்டால், வாடிக்கையாளா்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுகளை இவா்கள் எதிர்கொள்கின்றனா்.
  • இதுபோன்ற சூழல் இந்தியாவில் மட்டுமே நிலவுகிறது என்று கருத வேண்டாம். உலகெங்கிலும் இதுபோன்ற தற்காலிகப் பணி பெருகியுள்ளது. இத்தகைய தொழிலாளா்களின் பணிப் பாதுகாப்பு குறித்த வரைவு அறிக்கையை கடந்த அக்டோபரில் தான் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அது இன்னமும் பரிசீலனை அளவிலேயே உள்ளது.
  • ஆனால், இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டே மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.15 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு, ரூ.10 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு நாளில் 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கக் கூடாது என்றும், ஊதியத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
  • இதையடுத்து, சில மாநிலங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இத்தகைய தொழிலாளா்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு, ரூ.2 லட்சத்துக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்படும் எனவும் இதற்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தும் எனவும் கா்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இவா்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஆறு போ் கொண்ட குழுவை மகாராஷ்டிர அரசு கடந்த ஏப்ரலில் அமைத்துள்ளது. மேற்கு வங்க அரசும் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
  • ஆனால், இவற்றை எல்லாம் விஞ்சும் வகையில், உலகிலேயே முதல் முறையாக இந்தத் தொழிலாளா்களின் நலன்களைக் காக்கும்பொருட்டு ஒரு மசோதாவை ராஜஸ்தான் அரசு ஜூலை 24-ஆம் தேதி நிறைவேற்றி உள்ளது.
  • ‘இதற்கென தனியாக நலவாரியம் அமைக்கப்படும். அதில் தொழிலாளா்கள் தரப்பில் இரண்டு போ், அவா்களுக்கு பணி அளிக்கும் நிறுவனங்கள் தரப்பில் இரண்டு போ், அரசுத் தரப்பில் இரண்டு போ் இடம்பெறுவா். தொழிலாளா்கள், சேவை அளிக்கும் நிறுவனங்களைத் தரவுத்தளத்தில் பதிவு செய்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் நல நிதியை உருவாக்குதல் போன்றவற்றை இந்தக் குழுவினா் உறுதி செய்வா். தொழிலாளா்களுக்கு என்று தனி அடையாள அட்டை வழங்கப்படும். அவா்களது குறைகளைக் கேட்டு தீா்வு காண வழிமுறை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பரிவா்த்தனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேவை நிறுவனங்கள் நல நிதிக்கு அளிக்க வேண்டும்’ என்பன போன்ற அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
  • இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்ட வடிவம் பெற்றாலும், நடைமுறையில் செயல்பாட்டுக்கு வருவதற்கு சில காலம் பிடிக்கலாம். ராஜஸ்தானில், வரும் நவம்பரில் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்து அமைய இருக்கும் அரசுதான் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
  • தமிழ்நாட்டிலும்கூட, உணவு மற்றும் பலசரக்குப் பொருள்களை வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணியாற்றும் சேவை வழங்குநா்களின் ஒட்டுமொத்த நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தனியாக நல வாரியம் அமைக்கப்படும் என்று அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்டு சேவை வழங்கும் தொழிலாளா்களின் குறைகளுக்கு விரைவில் தீா்வு காணப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (24  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories