TNPSC Thervupettagam

காலநிலை நெருக்கடிக்குக் காரணம் தனி மனிதர்களா?

February 11 , 2025 2 hrs 0 min 10 0

காலநிலை நெருக்கடிக்குக் காரணம் தனி மனிதர்களா?

  • காலநிலை நெருக்கடி நம் காலத்தின் மிக முக்கிய சவால்களில் ஒன்று. எனவே, இதன் தாக்கங்கள் அதிகரிப்பதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றிய ஆழமான விவாதம் அவசியமாகிறது. மனிதச் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படும் இந்தக் காலக்கட்டத்துக்கு நிலவியல் (Geological) அடிப்படையில் ‘மனித ஆதிக்க யுகம்’ (Anthropocene) என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர். சுமார் 12,000 ஆண்டுகளாக நிலவி வந்த ‘ஹோலசீன்’ (Holocene) என்கிற வெப்பநிலை யுகத்தைக் கடந்து, மனித குலம் அடுத்த யுகத்தில் அடியெடுத்து வைப்பதை இது உணர்த்துகிறது.
  • அறி​வியலர்​களின் கூற்றுப்படி மனித ஆதிக்க யுகம் என்ற வரையறை பெரும்​பாலும் புதைபடிவ எரிபொருள் பயன்​பாட்​டால் ஏற்படும் அதிகக் கரிம உமிழ்வை அடிப்​படை​யாகக் கொண்டே கட்டமைக்​கப்​படு​கிறது. ‘மனித ஆதிக்க யுகம்’ என்கிற சொல், நிலவியல் காலக்​கட்​டத்​தைக் குறிக்​கும் வகையில் பரவலாகப் பயன்​படுத்​தப்​பட்​டாலும், இந்தச் சொல் சுற்றுச்​சூழல் சீரழி​வைத் தூண்​டும் முதலா​ளித்துவப் பொருளாதார அமைப்பு​களைப் பொறுப்​புக்கு உள்ளாக்கு​வதைத் தவிர்க்​கிறது எனப் பல அறிஞர்கள் வாதிடு​கின்​றனர்.
  • எனவே அதற்கு மாற்​றாக, அவர்கள் ‘மூலதன ஆதிக்க யுகம்’ (Capitalocene) என்கிற சொல்​லைப் பயன்​படுத்தி, காலநிலை நெருக்​கடியை உருவாக்கு​வ​தில் முதலா​ளித்து​வத்​தின் பங்களிப்​பைச் சுட்​டிக்​காட்டு​கிறார்​கள். காலநிலை மாற்​றம், சுற்றுச்​சூழல் பாது​காப்பு ஆகிய​வற்​றைக் குறித்த விவாதங்​களைப் புரிந்​து​கொள்ள இந்த மாறு​பட்ட கருத்​தாக்​கங்கள் அவசி​ய​மாகின்றன.

முதலா​ளித்து​வத்​தின் பங்கு:

  • முதலா​ளித்துவம் ஒரு பொருளாதார அமைப்பு என்ற வகையில், தொடர்ச்​சியான நுகர்​வுக்கு நம்மைப் பழக்​கப்​படுத்​தி​யிருப்​பதாக ஆய்வுகள் தெரிவிக்​கின்றன. இதனால் பெரும்​பாலும், லாபத்​தைப் பெருக்​கும் நோக்​கில் சுற்றுச்​சூழல் அக்கறை இல்லாமல் இயற்கை வளங்​களைத் தொழில் துறைகள் சுரண்​டிக்​கொள்ளப் பல நாடுகள் அனும​திக்கின்றன.
  • இது, தெற்​குலக நாடு​களின் (Global South) வளத்தை, வடக்​குலக நாடுகள் (Global North) பயன்​படுத்​திக்​கொள்ள வழிவகை செய்​கிறது. இதனால், அதீதப் பொருளாதார மேம்​பாடு அடைந்த வடக்​குலக நாடு​கள், உலக மக்கள்​தொகை​யில் தோராயமாக 25% மட்டுமே கொண்​டிருந்​தா​லும், 1850ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 79% கரிம வெளி​யீட்டுக்​குக் காரண​மாகி​யுள்ளன. இந்தக் கரிம வெளி​யீட்​டின் முக்கிய ஆதாரங்கள் புதைபடிவ எரிசக்​திப் பயன்​பாடே ஆகும்.
  • தற்போது கடைப்​பிடிக்​கப்​பட்டு​வரும் பொருளா​தாரக் கொள்​கைகள் தொடரும்​பட்​சத்​தில், 2100ஆம் ஆண்டுக்​குள் புவி​யின் சராசரி வெப்​பநிலை சுமார் 2.7ஂC அதிகரிக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இது இன்னும் தீவிரமான காலநிலை நெருக்​கடிகளுக்கு வழிவகுக்​கும். தொடர்ச்​சியாக மறுசுழற்சி, நீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு போன்ற தனிமனித முன்னெடுப்பு​கள்​தான் காலநிலை மாற்​றத்தை மட்டுப்​படுத்த உதவும் என்ற எண்ணத்தை முதலா​ளித்துவ அமைப்புகள் மக்கள் மத்தி​யில் விதைத்​துள்ளதாக ‘மூலதன ஆதிக்க யுகம்’ என்கிற கூற்றை முன்​மொழி​யும் ஆராய்ச்​சி​யாளர்கள் தெரிவிக்​கிறார்​கள்.

வரலாற்றுப் பார்வை:

  • வரலாற்றுரீ​தி​யாகப் பார்க்​கும்​போது, காலனிய ஆட்சி முறை​யும் அதன் பின் ஏற்பட்ட தொழில்​மய​மாதலும்​தான் தற்போதைய காலநிலை நெருக்​கடிகளுக்கான வேர்கள் என்பதை உணர முடி​யும். ஐரோப்​பியர்கள் புதிய நிலப்​பரப்பு​களுக்​குச் சென்​ற​போது, அங்குள்ள பூர்​வகுடிகளை நாகரி​கமற்​றவர்கள் எனக் கூறினர். அவர்களை ‘நாகரி​கப்​படுத்து​வ​தாக​வும்’, அவர்​களின் நிலங்களை ‘வளப்​படுத்து​வ​தாக​வும்’ சொல்லி அடக்​கு​முறை மூலம் அவர்​களின் நிலப்​பரப்பு​களைக் கைப்​பற்றி​னார்​கள்.
  • முதலா​ளித்துவம் எப்போதும் மூலதனத்​தைப் பெருக்​கிக்​கொள்ளவே முனைப்​புக் காட்டும். முதலா​ளித்துவக் கோட்​பாட்​டால் மலிவானது என வரையறுக்​கப்​பட்ட இயற்கை வளங்​களை​யும் மனித உழைப்​பை​யும் கட்டற்ற வகையில் பயன்​படுத்​தித் தன் மூலதனத்​தைப் பன்மடங்காக அது அதிகரித்​துக்​கொண்டே வந்துள்ளது. இது ஏதோ 18ஆம் நூற்​றாண்​டில் ஏற்பட்ட தொழிற்​புரட்​சி​யால் மட்டும் நிகழ்ந்​த​தாகத் தவறாக எண்ண வேண்​டாம். 1492ஆம் ஆண்டு பஹாமஸ் எனத் தற்போது அறியப்​படும் கரீபியன் நிலப்​பரப்பை கிறிஸ்​டோபர் கொலம்பஸ் வந்தடைந்​த​தில் இருந்​து​தான் ஐரோப்​பியர்கள் இயற்​கை​யைச் சுரண்டத் தொடங்​கி​னார்கள் என்பது வரலாறு.
  • இது பூர்​வகுடிகளைத் தலைமுறை​களைத் தாண்டிய மனித அடிமைத்​தனத்​துக்​குத் தள்ளியதுடன், இயற்கை வளங்​களைத் தீவிர​மாகப் பயன்​படுத்தி லாபத்​தைக் குவிக்​கும் செயலாக​வும் மாறியது. எனவே, தொழிற்​புரட்​சியை மட்டுமே காலநிலை மாற்​றத்​துக்​குக் காரண​மாகக் கொள்வது வரலாற்​றைக் குறுகிய கண்கொண்டு பார்ப்​ப​தற்​குச் சமம். அப்படிக் குறுக்​கப்​பட்ட கண்ணோட்​டம்​தான் ‘மனித ஆதிக்க யுகம்’ என்கிற சொல்லாடல் உருவாவதற்கு அடிப்​படை. புதைபடிவ எரிசக்​தி​யால் தூண்​டப்​பட்ட தொழிற்​புரட்சி புவி​யின் நிலையை மோசமாக்​கி​னாலும், அதற்கு முந்தைய காலனிய மனப்​பான்​மை​யைக் கேள்விக்கு உள்படுத்த வேண்​டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்​களின் வலியுறுத்​தல்.

ஆழமான விசாரணை:

  • ‘மனித ஆதிக்க யுகம்’ அல்லது ‘மூலதன ஆதிக்க யுகம்’ என்கிற பார்​வையே காலநிலை நெருக்​கடியை நாம் எவ்வாறு கையாளப்​போகிறோம் என்ப​தற்கு அடிப்​படை. இது நம் பொருளா​தாரக் கட்டமைப்பை விமர்​சனப் பார்​வை​யில் மறுபரிசீலனை செய்​வதற்கு வழிவகுக்​கிறது. காலநிலை மாற்​றத்தை மட்டுப்​படுத்து​வதற்​கும், அது சார்ந்த தகவமைப்பு நடவடிக்கை​களில் தனிமனிதச் செயல்​களைக் கடந்து, அமைப்பு​ரீ​தியிலான மாற்​றத்தை மேற்​கொள்​வதற்​கும் இந்தக் கோட்​பாட்டு விவாதம் இன்றியமை​யாத​தாகிறது.
  • இவ்வாறான அமைப்பு​ரீ​தியிலான மாற்​றங்​களுக்​குப் பொருளாதார வல்லமை படைத்த வடக்​குலக நாடுகள் காலம் தாழ்த்துவது வழக்​க​மாகி​விட்​டது; ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஐக்கிய நாடு​களின் காலநிலை மாற்ற மாநாட்டு நிகழ்வு​களின் தேய்ந்​துபோன தன்மை இதற்கு ஓர் எடுத்​துக்​காட்டு. அந்த வகையில் ‘மனித ஆதிக்க ​யுகம்’ என்​ப​தைத் தவிர்த்து, ‘மூலதன ஆ​திக்க ​யுகம்’ என்கிற பரி​மாணத்​தில் அணுகுவது ​காலநிலை நெருக்​கடிக்கு ​யார் பொறுப்பு என்ற தெளிவான புரிதலுக்கு வழி​வகுக்​கிறது. இது சுற்றுச்​சூழல் சீரழிவை நிகழ்த்​தும் குறிப்​பிட்ட பொருளா​தார அமைப்பு​களின் மீது உரிய கவனத்​தைத்​ திருப்​புகிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories