TNPSC Thervupettagam

காலநிலை, மனிதர்கள், அப்புறம் உரிமைகள்!

April 13 , 2024 274 days 277 0
  • வரலாற்றில் ஒவ்வொன்றும் இரண்டு முறை நிகழ்கின்றன: முதல் முறை சோகமாகவும் இரண்டாம் முறை கேலிக்கூத்தாகவும் - என்பதாக கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, வரலாறு முதல் முறை சோகமாகவும் இரண்டாம் முறை மேலதிக சோகத்துடனும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
  • மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள், மீளமைக்க முடியாத தாக்கத்தைப் புவிக்கோளத்தின் எல்லா நிலைகளிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் மனிதர்களுடன் மற்ற உயிரினங்களும் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டிருக்கின்றன.
  • காலனிய அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், காலநிலை மாற்றத்தின் பின்னணியில் இருத்தலியல் சார்ந்த அச்சம் மேற்குலகைப் பீடித்திருக்கிறது; காலனியத்துக்கு ஆட்பட்டிருந்த மக்களுக்கோ பேரழிவு என்பது ஏற்கெனவே நடந்துமுடிந்த ஒன்று. அதாவது தங்கள் இருப்பு கேள்விக்கு உள்ளாகிறது என்கிற நிலையிலேயே மேற்குலகம் பதற்றம் கொள்கிறது என்கிற நாவலாசிரியர் அமிதாவ் கோஷின் இந்தக் கருத்து, காலநிலை மாற்றத்தின் காலத்தில் மனித உரிமைகள் சார்ந்து மேலெழுந்துவரும் சொல்லாடலில் வைத்துப் பரிசீலிக்கத்தக்கது.
  • மனித உரிமைகள் இன்று: பொ.ஆ. (கி.பி.) 12ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தே ‘இயற்கை(யாக உள்ள) உரிமைகள்’ என்கிற பெயரில் மனித உரிமைகளின் தன்மை பற்றி தத்துவவியலாளர்கள் விவாதித்து வரலாயினர். வரலாற்றின் போக்கில், தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில், மனித உரிமை என்பதற்கான வரையறை ஒவ்வொரு காலகட்டத்திலும் மேம்பட்டு வந்திருக்கிறது.
  • வரலாறு முழுவதும் அநீதிக்கு, பாகுபாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட இடைவிடாத போராட்டங்களால் உரிமைகள் நிலைபெற்றுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்வின் மேம்பாட்டுக்கும் அதன் மாண்பை உறுதிசெய்வதற்குமான ஏற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • உரிமைகளை எவரும் யாருக்கும் வழங்க முடியாது. ஆனால், அடிப்படை உரிமைகளானவை சட்டம் நமக்கு வழங்கியவை என்பதே பொதுவான புரிதல். இந்திய அரசமைப்புச் சட்டமானது மனிதர்களுக்கு அடிப்படையாக உள்ளவற்றையே உரிமைகள் என அங்கீகரித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்திலிருந்து உள்வாங்கப் பட்டவை.
  • சித்திரவதையிலிருந்து விடுதலை, தனி மனிதச் சுதந்திரம், உயிர் வாழும் உரிமை, கருத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, அரசியல் உரிமை, குடும்பமாக மாறும் உரிமை என உரிமையின் பல பரிமாணங்களை இப்பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. இதன் உள்ளடக்கம், ‘சுதந்திரம் மனிதர்களுக்கானது. அதை எவரும், எப்போதும், எதன் பொருட்டும் பறிக்க முடியாது. உலகின் எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனுமே பிறக்கிறார்கள்’ என்கிறது.
  • இரண்டாம் உலகப் போரில் மக்கள், போர் வீரர்கள் எனக் கோடிக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். உலகச் சமூகத்துக்கு நிகழ்ந்த அந்தப் பேரழிவுக்குப் பின்னர் உலகில் மனிதப் படுகொலைகள், சக மனிதனைக் கண்ணியமின்றி நடத்தும் அவலங்கள், பாகுபாடுகள், அநீதிகள் போன்றவற்றைத் தடுக்க ‘உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம்’ (Universal Declaration of Human Rights), 1948 டிசம்பர் 10 அன்று ஐ.நா.
  • அவையில் முன்வைக்கப்பட்டது. அதாவது மனிதர்களால் சக மனிதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இத்தகைய கொடுமைகள் எதிர்காலத்தில் ஒருபோதும் நிகழக் கூடாது என ‘மனித உரிமை’க்கான பிரகடனம் அறைகூவல் விடுத்தது. மனித குலம் அதற்குச் செவிமடுக்கவில்லை என்பதன் சமீபத்திய உதாரணம், 6 மாதங்களைத் தாண்டியும் காசாவின் மீது தொடரும் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள்.
  • காலநிலை நீதி: ஒரு துண்டு நிலப்பகுதியில் இரண்டு வெவ்வேறு இனக்குழுக்கள் இணக்கமாக வாழ்வது 21ஆம் நூற்றாண்டிலும் பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தொடர்வது, மனித குலம் ஒட்டுமொத்தமாகத் தோல்வியடைந் திருப்பதையே காட்டுகிறது. பல நூறு இனக்குழுக்களாக மனிதர்கள் இந்தப் பூவுலகில் வாழ்ந்து வருகிறோம்; இருப்பதோ ஒரே ஒரு பூவுலகு.
  • இங்குதான் காலநிலை மாற்றம் காட்சிக்குள் வருகிறது. உலக மக்கள் அனைவருக்கும் சமூக நீதி இன்னும் முழுமையாக உறுதிசெய்யப் பட்டிருக்காத நிலையில், சூழலியல் நீதியையும் உள்ளடக்கிய சமூக நீதி என்பது மனித உரிமைகள் சார்ந்த சொல்லாடலில் மேலெழுந்திருக்கிறது.
  • இந்தப் பின்னணியில், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வோர் இந்தியரின் அடிப்படை உரிமை - மனித உரிமை என உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது (ஏப்ரல் 6) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னகர்வு; அதே போல், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை மட்டுப்படுத்துவதில் சுவிட்சர்லாந்தின் நடவடிக்கைகள் பலவீனமாக இருந்ததால் சுவிஸ் நாட்டின் முதிய பெண்களின் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அங்கீகரித்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (EctHR) தீர்ப்பு வழங்கியிருப்பது (ஏப்ரல் 9) உலகம் முழுவதும் காலநிலைச் செயற்பாட்டாளர்களுக்கு மிகுந்த ஊக்கமளித்திருக்கிறது.
  • மனிதர்களுக்கு மட்டுமான உரிமைகள்: புவியில் மனித வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே காலநிலை இயற்கையாக மாறிவந்திருக்கிறது; காலநிலை மாற்றம் என்பது புவியின் இயக்கத்தில் ஓர் அங்கம். ஆனால், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் புவிக்கோளத்துக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் அழிவை ஏற்படுத்துவது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கும் ஏற்பாடும்கூட, மனித மையப் பார்வைக்கே வழிவகுக்கிறது.
  • தொழிற்புரட்சியின் காரணமாகப் புதைபடிவ எரிபொருள்களின் கட்டுமீறிய பயன்பாடு, புவியின் வளிமண்டலத்தில் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களைச் சேர்த்து புவி வெப்பமாதலுக்கு வழிவகுத்தது. கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவதே காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கு முதன்மையான வழி என்பது பொதுவான புரிதல் (Carbon Tunnel Vision).
  • எனினும் உயிர்ப்பன்மை இழப்பு, காட்டுயிர் இழப்பு, உயிரினங்கள் அற்றுப்போதல் (Extinction), நச்சுக் கழிவுகளின் பரவல், கட்டுமீறிய நுகர்வு, கட்டுமீறிய ‘வளர்ச்சி’, மண் நஞ்சாதல், விலங்குவழித் தொற்றுகள் (Zoonotic Disease), காடழிப்பு, தண்ணீர் மாசு, காற்று மாசு, நன்னீர்ப் பற்றாக்குறை, வாழிட இழப்பு எனக் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் நீள்கின்றன.
  • காலநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணம் மனிதச் செயல்பாடுகள் என்பதை அங்கீகரிக் காமல், அதன் பாதிப்புகளில் இருந்து மட்டும் பாதுகாத்துக்கொள்வதற்கு உரிமை கோருவது கேலிக்கூத்தானது. அந்த வகையில், கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற இன்னொரு கூற்றுடன் இத்தொடரை நிறைவுசெய்வது பொருத்தமாக இருக்கும்: ‘It is impossible to persue this nonsense any further.’ (Grundrisse: Notebook VII).

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories