TNPSC Thervupettagam

காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் கடமை காவல் துறைக்கு இல்லையா?

August 27 , 2024 139 days 139 0

காலநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் கடமை காவல் துறைக்கு இல்லையா?

  • சமீப ஆண்டு​களாகக் காலநிலை மாற்றத்தால் நடந்தேறிக்​கொண்​டிருக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளைப் பூவுலகு எதிர்​கொண்டு வருகிறது. ‘வரலாறு காணாத’ என்கிற சொற்றொடருடன் சேர்த்தே, அந்நிகழ்வுகள் செய்திகளாகப் பரவலாக நம்மை வந்தடைகின்றன.
  • காலநிலை மாற்றத்தை மட்டுப்​படுத்து​வதற்​கும், அதன் பாதிப்புகளை எதிர்​கொள்​வதற்கும் தகவமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்​ளப்​பட்டு வந்தா​லும், இன்னும் அவை பேரிடர் மேலாண்மை என்கிற குறுகிய கண்ணோட்​டத்​துடனேயே பெரும்​பாலும் புரிந்​து​கொள்​ளப்​படு​கின்றன. ஆனால், அதையும் தாண்டி, பிற துறைகளும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்​கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்​தப்பட வேண்டியது அவசியம். அவற்றில் காவல் துறையும் ஒன்று.

மாற்றத்​துக்கான தேவை:

  • பொதுவாகவே காவல் பணியின் அடிப்படை, குற்றங்​களைத் தடுத்து, சட்டம் - ஒழுங்கைப் பேணி, சமூக நலனை நிலைநாட்டுவதே. ஆனால், அதன் பணிகளில் இயற்கை நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், குறிப்பாக காலநிலை மாற்றம் பற்றிய உரையாடல்கள் இல்லை என்றே சொல்லலாம்.
  • உதாரணத்​துக்கு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மட்டுப்​படுத்​துதல், அவை தொடர்பான தகவமைத்தல் நடவடிக்கை​களில் காவல் துறையின் நேரடிப் பங்கு என்ன? குறிப்பாக, சுற்றுச்​சூழலுக்கு எதிராக நடைபெறும் குற்றங்​களைத் தடுப்​ப​தற்கும் குறைப்​ப​தற்கும் அவர்களின் நடவடிக்கைகள் என்ன? சமூகத்தில் இப்படியான கேள்விகள் எழுப்​பப்​படு​வ​தில்லை.
  • மாறாக, காலநிலை மாற்றத்தால் பேரிடர் ஒன்று நடந்து முடிந்த பிறகு, மக்களைக் காப்பாற்று​வதுதான் காவல் துறையின் முக்கியப் பணியாக பெரும்​பாலும் இருக்​கிறது. மறுபுறம், சுற்றுச்​சூழல் பாதுகாப்புச் செயல்​பாட்​டாளர்களை முடக்குவது, அவர்களின் அறப்போராட்​டங்​களைத் தடுப்பது என்கிற வகையில்தான் காவல் துறை செயல்​பட்டு​வரு​கிறது.
  • அந்த வகையில் அத்துறையின் எண்ணம், செயல்​பாடு, செயல் திறன் ஆகியவை எவ்வாறு காலநிலை மாற்றம் தொடர்​புடைய முன்னெடுப்பு​களுக்கு உதவலாம் என்கிற விவாதம் இன்றியமை​யாதது. அவ்விவாதங்களே காலநிலை அவசரநிலைக்கு ஏற்பக் காவல் துறை தகவமைத்​துக்​கொள்ள வழிவகுக்​கும்.

சமூகப் பிரச்சினை:

  • மீட்பு - நிவாரணப் பணிகளைத் தாண்டி, காவல் பணிகள் சார்ந்து காலநிலை மாற்றம் கொண்டுவர இருக்கும் அபாயங்​களும் சவால்​களும் பலதரப்​பட்டவை. அவற்றை எதிர்​கொள்ளக் காவல் துறை தயாராக வேண்டும். ஏனெனில், காலநிலை மாற்றம் வெறும் சுற்றுச்​சூழல் பிரச்சினை மட்டும் அல்ல; அது ஒரு சமூகப் பிரச்​சினை.
  • காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் பல லட்சம் மக்களின் உயிருக்​கும், உடைமைக்​கும், வாழ்வா​தா​ரத்​துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்​தும். அவற்றோடு நில்லாமல், தீவிர வானிலை நிகழ்வு​களால் வறட்சி, நிலம், காற்று / நீர் மாசுபாடு, தண்ணீர் / உணவுப் பற்றாக்குறை ஆகியவை ஏற்படும். இதன் தாக்கங்கள் மக்கள் குற்றச்​செயல்​களில் ஈடுபடவும் வாய்ப்பாக அமையும்.
  • மேலும், தீவிரவாத அமைப்பு​களின் பாதிப்​புக்கு உள்ளான மக்களை அரசுக்கு எதிரான செயல்​களுக்கும் பயன்படுத்​தக்​கூடிய சாத்தி​யங்​களும் உருவாகும். காலநிலை மாற்றத்​துக்​கும், பல்வேறு காரணங்​களுக்காக மனிதர்கள் கடத்தப்​படு​வதற்கும் தொடர்​பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்​கின்றன.
  • அந்த இடர்ப்​பாடுகள், மக்கள் அதிகமாக உள்நாட்டுக்​குள்ளும் வெளிநாடு​களுக்கும் இடம்பெயர்​வதற்கான சாத்தி​யத்தை அதிகரிக்​கின்றன. மனிதர்​களுக்கு மட்டுமல்​லாது, சுற்றுச்​சூழலுக்கும் காட்டு​யிர்​களுக்கும் கடல்வாழ் உயிரினங்​களுக்கும் பாதிப்பை ஏற்படுத்து​வதோடு, அவற்றுக்கு எதிரான குற்றங்​களும்கூட அதிகரிக்​கும். சட்டத்​துக்குப் புறம்​பாகக் கனிமம், தாதுக்கள் உள்பட மற்ற இயற்கை வளங்களும் சூறையாடப்​படும்.
  • இது சட்டம் - ஒழுங்கு நிலைமையில் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்​தும். அந்த வகையில், இவை யாவும் கற்பனையான பிரச்​சினைகள் என்று நினைத்துக் கடந்துவிட வேண்டாம்; நம் உடனடி கவனத்தைக் கோரும் நேரடி உண்மைகள்.

மாற்றத்​துக்கு என்ன வழி?

  • காலநிலை மாற்ற நிகழ்வு​களால் வரவிருக்கும் இத்தகைய சமூக இன்னல்​களினால் காவல் பணி மேலும் கடினமாகும். எனவே, காவல் ​துறையின் நிர்வாகக் கட்டமைப்பில் காலநிலை மாற்றம் தொடர்​புடைய தகவமைப்பு மாற்றங்களை மேற்கொள்வது முக்கியம்.
  • அந்த வகையில் ஆராய்ச்சி சார்ந்து பல பரிந்​துரைகள் கொடுக்​கப்​பட்​டாலும், அத்தகைய முன்னெடுப்பு​களுக்கு எதிர்ப்பும் ஒத்துழைப்​பின்​மையும் உருவாகலாம். கடந்த 50 ஆண்டு​களில் காவல் துறையில் ஏற்பட்ட குறைந்த அளவிலான நிர்வாக மாற்றங்களே இதற்குச் சான்று!
  • காலநிலை மாற்றத்தின் எதிர்​பாராத தீவிர வானிலை நிகழ்வு​களைக் கையாண்டு, குறுகிய காலத்தில் ஏறக்குறையப் பழைய நிலைக்கு எவ்வாறு மீண்டெழுகிறோமோ அதுவே மீள்தன்மை. தனிநபர் மீள்திறன் என்பது பல நேரம் சமூகப் பொருளா​தாரக் காரணிகளை அடிப்​படை​யாகக் கொண்டது.
  • ஆனால், அரசின் கட்டமைப்பான காவல் நிர்வாகத்தின் மீட்சி என்பது பன்முகத்​தன்​மை​ உடையது. ஓர் எதிர்​பாராத நிகழ்வை எதிர்​நோக்கி, ஆராய்ந்து, அதற்குத் தேவையான அடிப்​படைக் கட்டமைப்பை வலுப்​படுத்தி, அதன் உதவியால் மீள்வது. காலநிலை மாற்றத்தால் வரவிருக்கும் ஆபத்து - சவால்கள் குறித்த குறைவான புரிதல், போதுமான தயார்நிலை இன்மை, பயிற்​சி​யின்மை, பிற துறைகளுடன் ஒருங்​கிணைந்து பணியாற்றும் திறன் குறைவு ஆகியவை இதில் நேரடிச் சவால்களாக இருக்​கின்றன.
  • பொதுவாக, காவல் துறை, அதன் துணை அமைப்பான தீயணைப்பு - மீட்புத் துறை, பேரிடர் மீட்புப் படை ஆகியவை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை எப்படிக் கையாள்வது என்கிற திறனைப் பெற்றிருந்​தா​லும், காலநிலை மாற்றத்தை எதிர்​கொள்ள அத்திறன் மட்டுமே போதாது.
  • எனவேதான் காவல் நிர்வாகத்தைக் காலநிலை மீள்தன்​மைமிக்கதாக மாற்றுவது இன்றியமை​யாததாகிறது. அந்த வகையில், பயிற்சி - அன்றாடச் செயல்​பாடு​களில் காலநிலை மாற்றம் குறித்த புரிதலை (Climate Literacy) உருவாக்குவது மிகவும் அவசியம்.

சுற்றுச்​சூழல் பாதுகாப்பு

  • குற்ற​வியல் ஆராய்ச்​சி​யாளர்​களுடன் இணைந்து செயலாற்​றக்​கூடிய கட்டமைப்பை உருவாக்​குதல், இடர் மதிப்பீடு - திட்ட​மிடல், கருவிகள், உள்கட்​டமைப்பு வசதிகளை மேம்படுத்​துதல், எதிர்​பாராததை எதிர்​நோக்கும் திறனை வளர்த்தல், மக்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்கு​வித்தல் ஆகியன இது சார்ந்து முதன்​மை​யானவை.
  • கூடவே, காலநிலை மாற்றம் தொடர்​புடைய சட்ட நடைமுறைகளை உருவாக்கி வலுப்​படுத்துவது, சமூகக் காவல் பணியை ஊக்கு​விப்பது, பிற அரசுத் துறைகளுடன் காவல் துறை இணைந்து செயலாற்ற, நிலையான இயக்க முறையை (Standard Operating Procedure) வடிவமைப்பதும் அவசிய​மாகிறது.
  • அந்த வகையில், பன்னாட்டுக் குற்றப் புலனாய்வு அமைப்பும் (INTERPOL), போதைப்​பொருள் - குற்றத்​துக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பும் (UNODC) பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்​துக்கு இயைந்த இத்தகைய தகவமைப்புகளால், காவல் நிர்வாகத்தை மீள்தன்மை மிக்கதாக மாற்று​வதற்குச் சாத்தி​யக்​கூறுகள் இருந்தா​லும், இத்தகைய புதுமைகளை உடனடி​யாகச் செயல்​படுத்துவது கடினம்​தான்.
  • இப்​படியான ​மாற்​றங்களை எளிமைப்​படுத்தச் சமூக நலனைக் ​காப்​பதும், இயற்​கைப் பாது​காப்பும் ஒரு நாண​யத்​தின் இரண்டு பக்​கங்கள்​ என்கிற எண்​ணத்​தைக் ​காவல் துறை பெறுவது அவசியம். அதை நோக்கிய உறு​தியான நட​வடிக்கைகளை எடுக்க வேண்​டியது அரசின் கடமை!

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories