- காலநிலை மாற்றம் அடிப்படையில் ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினைதான். என்றாலும், அது முதன்மையாக ஓர் அரசியல் பிரச்சினையாக நாளுக்கு நாள் தீவிரம் பெற்றுவருகிறது. மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட இன்றைய காலநிலை மாற்றம், பூவுலகில் மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் (non human beings) இருப்புக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது; உயிரினங்கள் அதிவேகமாக அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன.
- புவி வெப்பமாதல், எல் நினோ போன்ற காலநிலை சார்ந்த நிகழ்வுகளால் உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மனித குல வரலாற்றில், 2023 ஜூலை மாதம் மிக அதிக வெப்பம் நிலவிய மாதமாகப் பதிவாகியிருப்பதாகக் காலநிலை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
- இந்தப் பின்னணியில், புவி வெப்பமாதலின் (global warming) யுகம் முடிந்து, ‘புவி கொதிக்கும்’ (global boiling) காலகட்டம் தொடங்கியிருப்பதாக, ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் பேசியுள்ளார்.
- திரும்பிச் செல்லமுடியாத அளவுக்குத் தீவிரமடைந்துவரும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து பூவுலகைக்காப்பாற்றுவதற்கு, சமரசமற்ற அரசியல்கடப்பாடு தேவை என்பதை அறிவிய லாளர்களும் செயல்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
- ஆனால், அரசியல்வாதிகளும் கொள்கை வகுப்பாளர்களும் தங்களுக்கு என்ன ‘தேவை’ என்பதில் ‘தெளிவாக’ இருக்கின்றனர் என்பதையே, அவர்கள் ‘முன்னுரிமை’ அளிக்கும் விஷயங்கள் துலக்கப்படுத்துகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, தகித்துக் கொண்டிருக்கும் அதன் இன்றைய அரசியல் சூழ்நிலையின் (political climate) பின்னணியில், காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்கள் வெப்பத்தை அதிகரித்து, ‘கொதிநிலை’யைக் கூட்டிவிடும் என்றே தோன்றுகிறது.
- உலக மக்கள்தொகையில் 81% அளவுக்கு (அல்லது 650 கோடி பேர்), ஜூலை மாதம் நிலவிய கடுமையான வெப்பத்தை - குறைந்தபட்சம் ஒரு நாளாவது - எதிர்கொண்டனர் என ‘கிளைமெட் சென்ட்ரல்’ என்கிற அமைப்பு கண்டறிந்துள்ளது. மக்கள்தொகையில் சீனாவை இந்தியா விஞ்சி விட்டதாக நம்பப்படும் நிலையில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர் கொண்டிருக்கும் மிகப் பெரிய எண்ணிகையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது.
- காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த உதவும் விதமாக, ஐநூறு கிகா வாட்ஸ் அளவிலான புதுப்பிக்கத் தக்க ஆற்றல் திறன் பத்து ஆண்டுகளில் நிறுவப்படும் என இந்தியா உறுதியளித்திருக்கிறது. அதன்படி, இந்தியாவின் கரியமில வாயு உமிழ்வு, 2005ஆம் ஆண்டின் அளவுடன் ஒப்பிடுகையில் 45% வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆனால், இத்தகைய பேரளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு மரபு சார்ந்த ஆற்றல்களே பெருமளவு அடிப்படையாக அமைகின்றன. அந்த வகையில், சமூகப் படிநிலையில் கீழே நிறுத்தப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகளைவிட உயர்/ மேட்டுக்குடிகளின் விருப்பங்களும் தேவைகளும் முதன்மைப் படுத்தப்படுகின்றன (உஷா அலெக்ஸாண்டர், ‘தி கேரவன்’: ஜூன் 2023).
- காலநிலை மாற்றம் சார்ந்த மட்டுப்படுத்துதல், தகவமைத்தல் நடவடிக்கைகளை முன்னிறுத்தி, ‘காலநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்ட’த்தை (NAPCC) 2008ஆம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது. இதற்குப் பொருந்திவரும் வகையில், மாநிலங்களும் தங்களுக்கான ‘காலநிலை மாற்றம் சார்ந்த மாநில செயல் திட்ட’ங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், செயல்திட்டங்களை உருவாக்குவதற்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை.
- இதனால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை முதன்மையாக எதிர்கொண்டிருக்கும் பெண்கள், ஏழைகள் உள்ளிட்ட பிரிவினரை அப்பாதிப்புகளிலிருந்து காப்பாற்றுவது சார்ந்த அம்சங்கள் பெரும்பாலான நகர/ மாநில செயல் திட்டங்களில் இடம்பெறவில்லை; சாதியின் பெயரால் ஒடுக்கப்படும் சமூகத்தினர், காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்தும் இந்தச் செயல் திட்டங்கள் பெரிதாகப் பேசவில்லை. இந்தியாவில் இன்றும் தொடரும் சாதியக் கொடுமைகளின் பின்னணியில், முதன்மைக் கவனம் கோரும் பிரச்சினையாக இது உள்ளது.
- இந்தியாவில் தனிநபர் ஒருவரின் கரிம உமிழ்வு, ஆண்டுக்குச் சராசரியாக 1.9 டன்; இது ஆண்டுக்கு 4.9 டன் என்கிற உலக சராசரியைவிட வெகு குறைவு. ஆனால், இந்தியச் செல்வந்தர்களின் கரிம உமிழ்வின் அளவோ, ஏழைகளின் அளவைவிட ஏழு மடங்கு அதிகமாக உள்ளது. மேலடுக்கின் முதல் 10% இடத்திலுள்ள இந்தியப் பெருஞ்செல்வந்தர்களின் உமிழ்வு, உலக சராசரி அளவுக்கு நெருக்கமாக, ஆண்டுக்கு ஐந்து டன் என்கிற அளவில் நீடிக்கிறது.
- இந்நிலையில், நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளின் அடிப்படையில் அல்லாமல், கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்த உலகளாவிய உடன்படிக்கைகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்குகளின் அடிப்படையில் காலநிலை மாற்றம் சார்ந்த மத்திய அரசின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாகச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
- பெருந்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் போன்ற அம்சங்கள் உள்நாட்டுக்குள் காலனி ஆதிக்கம் போன்ற சூழலை உருவாக்கியிருப்பதாகச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். இதற்கு வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா ஒரு சமீபத்திய உதாரணம்.
- இந்தியாவின் காடுகளைப் பாதுகாப்பதற்காக 1980இல் இயற்றப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டம், காட்டு வளங்களைத் தொழில் நிறுவனங்களும் காடுகளில் வாழும் சமூகங்களும் தமது பயன்பாட்டுக்காக எடுப்பதை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு அதிகாரமளிக்கிறது. இச்சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, ‘வனம்’ என மத்திய அரசு அங்கீகரித்த பகுதிகளுக்கு மட்டுமே இனி வனப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும்.
- நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்களால் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன. இந்நிலையில், காட்டுப் பகுதிக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு எளிதாக அனுமதித்தல், காட்டுப் பகுதிகள் மீது பழங்குடியினர் கொண்டுள்ள உரிமைகளைப் பெருமளவு பறித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கும் என செயல் பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- வறுமை, பாலினம், சாதி, பிற அமைப்புசார்ந்த ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு நிலைகளிலிருந்து காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தனிநபர் ஒருவரை எட்டுகின்றன. கோவிட்-19 போன்ற சுகாதார நெருக்கடியை உலக நாடுகள் எப்படி எதிர்கொண்டன என்பது சமீபத்திய வரலாறு. காலநிலை மாற்றத்தின் தீவிரம் இப்போது பரவலாக வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
- பருவமழையின் தன்மையில் மாறுபாடு, தீவிரம் பெற்றுவரும் புயல்கள் என இந்தியாவிலும் அது வினைபுரியத் தொடங்கியிருக்கிறது. எனவே, அரசியல் ‘வெப்பத்தில்’ குளிர்காயாமல், காலநிலை மாற்றத்தின் காலத்தில், அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்வதற்கு இந்திய அரசியல்வாதிகளின் ‘முன்னுரிமை’கள் கவனம் திரும்பியாக வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 08 – 2023)