- இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருந்தாலும், அதன் விளைவும் தாக்கமும் ஒட்டுமொத்த உலகுக்குமானதாக இருந்தது. போரினால் ஏற்பட்ட பேரழிவு, மனிதனின் இருப்பு குறித்த ஆதாரக் கேள்வியை வலுவாக எழுப்பியது; இருத்தலியல் [Existentialism] சார்ந்த விசாரணைகள் தத்துவத் துறையில் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட்டன. மனிதனால் விளைந்த பேரழிவு, வரலாற்றில் மனிதகுலத்தை எங்கே அழைத்து வந்திருக்கிறது என்கிற கேள்விக்கு விடைதேடும் நிர்ப்பந்தம் கலைஞர்களுக்கு ஏற்பட்டது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட கலை-இலக்கியத் துறை, அதன் எல்லையை விரித்துச் சென்றது.
- இரண்டாம் உலகப் போரில் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, இத்தாலி. போரின் சிதிலங்களிலிருந்து மீண்டெழவும் நாட்டை மறுகட்டமைத்துப் ‘பொருளாதார அதிசயத்தை (‘Economic miracle’) நிகழ்த்தவும் பெட்ரோகெமிக்கல் துறையிடம் இத்தாலி தன்னை ஒப்படைத்தது.
- வடக்கு இத்தாலியின் போ பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்ட மீத்தேன் வாயு உள்ளிட்ட இயற்கை வளங்களைத் துரப்பணம் செய்யும் நோக்கில், ஈஎன்ஐ (ENI) என்கிற நிறுவனம் 1953இல் தொடங்கப்பட்டது. அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஒரு தொழில் சாம்ராஜ்யமாகப் பரிணமித்த ஈஎன்ஐ, அதன் செயல்பாடுகள் மூலம் இத்தாலிக்குப் புதுமுகத்தைக் கொடுத்தது.
- கடற்கழிப் (Creek) பகுதியான ரவென்னாவிலும் (Ravenna) அப்பகுதியைச் சுற்றிலும் அமைந்த SAROM, ANIC போன்ற பெட்ரோகெமிக்கல் ஆலைகள், அப்பகுதியின் நிலத்தையும் வாழ்வையும் ஒட்டுமொத்தமாக திருத்தியமைத்தன; அந்தக் கடற்கழிப் பகுதி கழிவுத் தொட்டியானது.
- பாழ்நிலமாகிவிட்ட ரவென்னாவில், நவீன உலகுடன் பொருந்த முடியாமல், அந்நியமாதலால் [Alienation] உளவியல் நெருக்கடியில் வீழும் ஒரு பெண்ணைப் பற்றி 1964இல் வெளியான ‘Red Desert’ [Il deserto rosso] என்கிற இத்தாலியத் திரைப்படம், திகைக்க வைக்கும் துல்லியத்துடன் சமகாலத்தின் பிரதிபலிப்பாகப் பொருந்தி நிற்கிறது.
- உலக சினிமாவின் தனித்துவமிக்க இயக்குநரான இத்தாலியைச் சேர்ந்த மிகலாஞ்சலோ ஆண்டனியோனி [1912-2007] இயக்கியுள்ள இப்படம், திரைத் தொழில்நுட்பம் சார்ந்தும் முன்னோடிப் படங்களில் ஒன்றாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது.
- ரவென்னாவின் பிரம்மாண்டமான பெட்ரோகெமிக்கல் ஆலையை நிர்வகிக்கும் உகோவின் மனைவி கிலியானாவின் (மோனிகா விட்டி), இருத்தலியல் நெருக்கடியே இப்படத்தின் மையம். தொழில்மயமாதலால் நவீனமாகிவரும் உலகைத் தகவமைத்துக்கொள்ளத் தவறும் மனிதர்களின் உளவியலை, மோனிகாவின் அசாத்தியமான நடிப்பின் மூலம் ஆண்டனியோனி ஆராய்ந்திருக்கிறார். ‘கதையில் சுற்றுச்சூழல் பிரச்சினை வலுவாக இருக்கிறது; கதாபாத்திரங்களின் மனநெருக்கடிகள் [அவர்கள் வாழும்] சுற்றுச்சூழலில் இருந்து நேரடியாகத் தோன்றியவைதான்’ என்கிறார் ஆண்டனியோனி.
- அழகிய பைன் மரத் தொகுப்புகளும் இயற்கை நிலப்பகுதிகளும் நிறைத்திருந்த ரவென்னாவின் கிராமப்புறங்கள், தொழிற்சாலையின் வருகையால் நிகழ்ந்த கொடும் மாற்றங்களால் அழிந்துபோனது ஆண்டனியோனியிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- ஆனால், தொழில்மயத்தைக் கண்டிப்பதற்காக இப்படத்தைத் தான் எடுக்கவில்லை என்று சொல்லும் அவர். “‘ரெட் டெசர்ட்’ முதன்மையாக இருத்தலியல் சிக்கலைப் பேசுகிறது. அக்காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்து யாரும் பேசவில்லை” என்று பிற்காலத்தில் வழங்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
- படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை தொழில்மய உலகின் விளைவுகளை அப்பட்டமாகவும், அதுகொண்டுவரும் உளவியல் நெருக்கடிகளைக் கிலியானா வழியே துல்லியமாகவும் ஆண்டனியோனி பதிவுசெய்துள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் தாக்கம் முதலில் பெண்களிடமே வெளிப்படுகிறது என்கிற உண்மையின் பின்னணியில், இப்படத்தின் மையக் கதாபாத்திரம் பெண்ணாக அமைந்தது தற்செயல் என்று கருத இடமில்லை.
- காட்டுத்தீ, வெப்ப அலைகள் போன்ற காலநிலை மாற்றத்தின் நிகழ்வுகளால் ஏற்படும் ‘காலநிலைப் பதற்றம்’ [Climate anxiety], காலநிலை மாற்றத்தால் திரும்பிச் செல்லமுடியாத மாற்றத்தை அடையும் வாழிடம் சார்ந்த ‘சொலாஸ்டால்ஜியா’ [Solastalgia] என்கிற உணர்வுநிலை போன்ற இத்துறையின் சமீபத்திய சொல்லாடல்களுக்கான துல்லியமான உதாரணங்கள் இப்படத்தில் நிறைந்திருக்கின்றன.
- காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் தீவிரமடைந்துவரும் இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்வதில் கலைஞர்களின் கடப்பாடு என்ன என்கிற கேள்வி, அது குறித்த விவாதங்களில் மேலெழுந்துவருகிறது. சுற்றுச்சூழல் அக்கறையை உலகளவில் கவனம்பெறச் செய்த இரண்டு முக்கிய நிகழ்வுகளான புவி நாள் (1970), ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மாநாடு (1972) ஆகியவற்றுக்கு வெகு முன்பாகவே சுற்றுச்சூழல் அழிவை அப்பட்டமாகப் பதிவுசெய்த ‘ரெட் டெசர்ட்’, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பொதுச் சமூகத்திடம் கொண்டுசெல்வதில் கலைத் துறையின் இன்றியமையாத பங்கை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலும்கூட எண்ணூரில் கடற்கழிஇருந்ததாகச் சொல்லுவார்கள்!
நன்றி: தி இந்து (10 – 06 – 2023)