TNPSC Thervupettagam

காலநிலைப் பேரிடரின் நிஜக் குற்றவாளிகள்

July 2 , 2023 504 days 328 0
  • முதலாளித்துவம் என்கிற பொருளியல் முறை பற்றிய விமர்சனபூர்வ ஆய்வும் மார்க்சியத்தின் தொடக்க கால அடித்தளங்களில் ஒன்றுமான ‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’, இப்படித் தொடங்குகிறது: ‘இது நாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே’ ஆகும்.

வர்க்கமும் வரலாறும்

  • 18, 19ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் எதிர்விளைவுகளையும் முதலாளித்துவம் கொண்டுவரும் சிக்கல்களையும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தவர் கார்ல் மார்க்ஸ் (Karl Marx, 1818-1883). முதலாளித்துவத்தின் நீடித்தச் சிக்கல்களிலிருந்து சமூகத்தை விடுவித்து, ‘இந்த உலகை மாற்றுவது எப்படி’ என்பது குறித்த ஆழமான விசாரணையில் ஈடுபட்டிருந்த மார்க்ஸ், அதற்கான வழிகளைக் கண்டறியும் முனைப்பில் தன்னுடைய நண்பர் பிரெடரிக் எங்கெல்ஸுடன் (Friedrich Engels, 1820-1895) இணைந்து எழுதிய பல ஆக்கங்களில் ஒன்றுதான், ‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’ (1848). அந்த அறிக்கை, மனித குல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாக முன்வைக்கிறது.
  • நவீன சமூகத்தின் பொருளியல் அடித்தளம், பொருள் உற்பத்தி முறையை (mode of production) அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்கிறார் மார்க்ஸ். இந்தப் பொருளுற்பத்தி முறையானது இரண்டு அங்கங்களால் இயங்குகிறது: ஒன்று, உற்பத்திச் சக்திகள் (forces of production); இரண்டு, உற்பத்தி உறவுகள் (relations of production). உற்பத்திச் சக்திகளில் கருவிகள், பட்டறைகள், இயற்கை வழங்கியிருக்கும் உற்பத்திக் காரணிகள், தொழிலாளர்களின் செயல்திறன்கள், புழக்கத்திலுள்ள தொழில்நுட்பங்கள் போன்ற அனைத்தும் அடங்கும். உற்பத்தி உறவுகள் என்பவை மக்களிடையே உற்பத்தியின்போது ஏற்படும் சமூகத் தொடர்புகளைக் குறிக்கிறது. பொருளுற்பத்தி முறையின் மிக முக்கியமான பண்புக்கூறு அதன் உற்பத்தி உறவுகளே. அந்த உற்பத்தி உறவுகள், சமுதாயத்தில் வர்க்கப் பேதங்களாக உருவெடுக்கின்றன.
  • மனித குல வரலாற்றில் முதலாளித்துவத்தை ஒரு படிக்கல்லாகவே மார்க்ஸ் பார்த்தார்; முதலாளித்துவத்தின் அளப்பரிய உற்பத்தித் திறனை அவர் வியந்தார். ஆனால், முதலாளித்துவம் வந்த பிறகுதான் தொழிலாளர்களையும் அவர்களின் உற்பத்திக் காரணி களையும் பிரித்து, உற்பத்திக் காரணிகளை முதலீடாகச் (Capital) சொந்தம் கொண்டாடும் ஒரு வர்க்கம், உழைப்பை மட்டும் விற்றுப் பிழைக்கும் தொழிலாளி வர்க்கம் என இரண்டு பிரிவுகள் தோன்றியதாக மார்க்ஸ் அவதானித்தார் (எஸ்.நீலகண்டன்).
  • வர்க்கங்களிடையே எழும் போராட்டங்களே வரலாற்றை இயக்கும் உந்துவிசை என்கிற அடிப்படையில், ‘இது நாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறுதான்,’ என மார்க்ஸும் எங்கெல்ஸும் வரையறுத்தனர்.

காலநிலை மாற்றத்துக்கு யார் காரணம்?

  • இந்த 21ஆம் நூற்றாண்டு, காலநிலை மாற்றத்தின் காலகட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புதைபடிவ எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளியல் முறையால், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், புவியில் மனித குலத்தையும் உள்ளடக்கிய உயிர் வாழ்வுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. காலநிலை மாற்றத்துக்குக் காரணம் மனிதர்கள்தாம் என்றாலும், அதற்கு ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் குற்றம்சாட்ட முடியுமா என்பது கேள்வி.
  • ஏனென்றால், முதலாளித்துவப் பொருளியல் முறையால் மிகப் பெரிய பலன்களைப் பெற்றவர்களான, உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறுபான்மையினரே காலநிலை மாற்றத்துக்கான முதன்மைப் பங்களிப்பாளர்கள் எனச் சமீபத்தில் வெளியான, ‘Climate Inequality Report 2023’ (https://bit.ly/CIR23) என்கிற அறிக்கை கூறுகிறது.
  • கரியமில வாயு உமிழ்வில் 48%, உலகளாவிய வருமானப் பகிர்வின் முதல் 10 சதவீதத்தினரான 80 கோடி மக்களால் ஏற்படுகிறது; வருமானப் பகிர்வில் முதல் ஒரு சதவீதத்தில் உள்ளவர்கள் மட்டுமே மொத்த உமிழ்வில் 17% வரை ‘பங்களிக்கின்றனர்’. நாடுகள் வெளியிட்ட உமிழ்வு, உலகளாவிய நிலையில் எப்போதும் சமமின்றியே தொடர்ந்துவந்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் மக்கள்தொகையின் அளவு குறைவாக இருந்தபோதிலும், வரலாற்று ரீதியாக – 1850 தொடங்கி – ஒட்டுமொத்தப் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வில் பாதியளவுக்கு அவை பங்களித்திருக்கின்றன.
  • 1988 தொடங்கி இன்றுவரையிலான பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வில் 71 சதவீதத்துக்கு, சுமார் 100 பெருநிறுவனங்கள் மட்டுமே காரணம் என மற்றோர் ஆய்வு கண்டறிந்துள்ளது. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய உமிழ்வில் சரிபாதி, 1988க்குப் பிறகுதான் ஏற்பட்டிருக்கிறது என்பது கவனத்துக்குரியது. மேலும், 2015இல் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கையானது [Extreme Carbon Inequality (https://bit.ly/OXFAM15)], உலகளாவிய உமிழ்வில் 50 சதவீதத்தினருக்கு, சமூகத்தின் உச்சியிலுள்ள 10% பேர் காரணமாக உள்ளனர். அதே வேளை, அடித்தளத்திலுள்ள 50% மக்களின் உமிழ்வுப் பங்களிப்பு வெறும் 10%தான்.
  • பெருஞ்செல்வந்தர்களுக்கான வரி விதிப்பை அதிகரித்தல், புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை வெட்டுதல் ஆகியவற்றைப் பரிந்துரைக்கும் இது போன்ற அறிக்கைகள், அதிலிருந்து பெறப்படும் நிதியைக் காலநிலைத் தகவமைப்பு (climate adaptation) நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனக் கோருகின்றன.

தொடரும் வர்க்கப் போராட்டம்

  • இந்தப் பின்னணியில்தான், புவியியல் பேராசிரியரான மேத்யூ டி.ஹூபர் எழுதிய ‘Climate Change as Class War: Building Socialism on a Warming Planet’ (2022) நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. காலநிலை அரசியல் (Climate politics) என்பது ‘காலநிலை நீதி’யில் கவனம் குவிப்பதாக இருக்க வேண்டும்; காலநிலை மாற்றம் பெரு நிறுவனங்களாலும் பெருஞ்செல்வந்தர்களாலும் ஏற்படும் பிரச்சினை என்பதைச் சமரசமின்றி வரையறுப்பதில், காலநிலை நீதியின் அரசியல் வேரூன்றியுள்ளது என்கிறார் ஹூபர். முதலாளிகள் (capitalists), நிர்வாகம் உள்ளிட்ட பிற துறையினர் (professionals), உழைப்பாளிகள் (working-class) என மூன்று பிரிவுகளின் வழி இன்றைய வர்க்கங்களின் நிலையை ஆராயும் ஹூபர், காலநிலைப் போராட்டத்தின் மையம் உழைக்கும் வர்க்கம்தான் என்கிறார். வர்க்கம் குறித்த புதிய மார்க்சிய அணுகுமுறையும் ‘சூழலியல்’ அணுகுமுறையும் தேவை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
  • இந்தக் குறிப்பிட்ட அதிகாரப் போராட்டம் என்பது பொருளுற்பத்தியின் உரிமை-கட்டுப்பாட்டு சார்ந்த உறவுகளின் மீதான வர்க்கப் போராட்டமாகும்; இது இயற்கை, காலநிலை ஆகியவற்றுடனான நமது சமூக-சுற்றுச்சூழல் உறவுக்கு அடிகோலுகிறது’ என்பதை நூலின் மைய வாதமாக ஹூபர் முன்வைக்கிறார்.
  • புதைபடிவ எரிபொருளைக் கொண்டு இயங்கிய முதலாளித்துவ வண்டி, வளர்ச்சி என்கிற இலக்குக்கு எல்லாரையும் அழைத்துவந்துவிடவில்லை. முதலாளித்துவம் உருப்பெற்று வளர்ந்த காலம்தொட்டே, அதன் உபவிளைவாகச் சமூக ஏற்றத்தாழ்வு இருந்துவருகிறது. 21ஆம் நூற்றாண்டில் வர்க்கம் என்பது பல்வேறு தளங்களில் பரவலாகி சிக்கல் அதிகரித்த ஒன்றாகப் பரிணமித்திருக்கும் நிலையில், காலநிலைப் பிரச்சினையும் அத்துடன் இணைந்திருக்கிறது; அந்த வகையில் 21ஆம் நூற்றாண்டும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே தொடர்கிறது.

நன்றி: தி இந்து (02 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories