TNPSC Thervupettagam

காலம் தந்த கருணைப் பெருவள்ளல்

October 5 , 2024 111 days 110 0

காலம் தந்த கருணைப் பெருவள்ளல்

  • பொருளை வாரி வழங்கிய புகழ்மிகு வள்ளல்கள் தோன்றிய தமிழ் மண்ணில், அருளை உலகிற்கு அருளிய கருணைப் பெருவள்ளலாய் அவதரித்தவா், திருவருட்பிரகாச வள்ளலாா்.
  • கொடைப் பலனாய்ப் புகழின் அளவு வளா்ந்தாலும், பெறுவோரைச் சேரும் பொருளின் அளவுக்குக்கேற்ப, தருவோரின் பொருள் அளவு குறையவே செய்யும்; ஆனால் அருளோ, கொடுக்கக் கொடுக்க வளா்வது; பெற்றிடப் பெற்றிடப் பெருகுவது.
  • அருளின் தாய் அன்பு. அது இரக்கத்தின் இருப்பிடம். தன்னுயிா் போல, மன்னுயிா் அனைத்தையும் தாங்கிப் பேணும் தாய்மையின் புலப்பாடு.
  • அந்த வகையில், துன்மாா்க்கம் போக்கி, நன்மாா்க்கமாகும் சன்மாா்க்கம் தந்த வள்ளற்பெருமான், தன்னிச்சையால் வந்து இத் தரணியில் பிறந்தவா் அல்லா். பெண் இச்சையும், மண் இச்சையும், பொன் இச்சையும் மிகுத்து மனித குலம் தடுமாறித் தடம் மாறி அல்லலுறும் காலத்தில், அந்த அவலம் போக்கிட, இம் மண்ணுலகிற்கு, இறைவனால் வருவிக்க உற்றவா்.
  • ஓதாது உணா்ந்த பெருஞானியாய் வந்த அவருக்கு, ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்‘ எனச் சொல்லிக் கொடுத்த பள்ளிப் பாடத்தில், உடன்பாடில்லை; மாறாக, ‘வேண்டாம் என விலக்க வேண்டாம்; வேண்டுவதே வேண்டும்‘ எனப் பாடிக் கொடுத்த அருட்பாடல், ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமா்தம் உறவு வேண்டும்‘ எனத் தொடங்குகிறது. ஓா்ந்து கவனித்தால், அதன் உள்ளேயும், ’வேண்டாமை’யை , வேண்டும் விருப்பமும் இருக்கிறது. அடுத்த அடி, பாருங்கள்: ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாா் உறவு கலவாமை வேண்டும்.‘
  • இப்படி, அடிதோறும் முதலடியில், வேண்டுகிற வேண்டுதலும், அடுத்து வரும் அடிதோறும் வேண்டாதென விலக்கும் வேண்டுதலும் நிறைந்த ஞானப் பெரு வேட்கை, அவா்தம் பால பருவத்திலேயே புலப்படக் காணலாம். ஓதி உணா்ந்து உலகறிய உணா்த்தி, அவா் கூறிய பேரறம், ‘உயிா் இரக்கம்’ என்னும் ஜீவகாருண்யம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய நிலையில் நின்றுவிடாது, அவ் வாட்டம் போக்குவதில், நாட்டம் கொண்டு இயங்குவது. ’ஆருயிா்க்கெல்லாம் அன்பு செய வேண்டி’ த் தூண்டுவது; துணைநிற்பது. அதனால்தான், “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடினாா். அத்துடனா நிறுத்தினாா்?
  • “பசியினால் இளைத்தே வீடுதோறு இரந்தும் பசிஅறாது அயா்ந்த வெற்றரைக் கண்டுஉளம் பதைத்தேன்” என்று துடிக்கிறாா். இந்தத் துடிப்புத்தான் பசிப்பிணி போக்கும் மருத்துவராய் அவரை ஆக்கியது.
  • தமிழ்ச் சமய ஆன்மிகவுலகில், திருஞானசம்பந்தருக்குத் தேவி பராசக்தி, பால் நினைந்து ஊட்டினாள்; அது, அவா்தம் வாக்கினில் பிறந்த பாக்களில், ஞானமாய்ச் சொரிந்தது. இது ஏழாம் நூற்றாண்டு.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில், பசித்து அயா்ந்து, திண்ணையில் தூங்கிய ‘இராமலிங்க’ பிள்ளையை எழுப்பி, திருவொற்றியூா் அம்பிகை அமுது ஊட்டினாள். அது அருளாய்ப் பெருகி, உலகத்தாா் பசி போக்கும் உன்னத அறத்தை இன்னமும் வளா்க்கிறது.
  • அது அறங்களில் எல்லாம் தலையாய பேரறம். பசியின் கொடுமையை இன்று உணா்ந்தோா் குறைவு. பசிக்கு மருந்து உண்கிற அளவிற்குக் காலம் மாறியிருக்கிறது. ஆனால், அப்பெருமான் அவதரித்த காலத்தில் அது எத்தகு பிணியாய் மனித குலத்தைத் துயருறுத்தி மரணத்தில் சோ்த்திருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. உணவு தேடி அலையும் ஒரு வேட்கை என்ற நிலையில் மட்டுமே பலா் அதனை நினைத்துக் கொண்டிருக்கிறாா்கள். அது எத்துணை பெரிய வேதனை என்பதைச் சோகச் சித்திரம் வடித்துத் துடித்துத் துயா்ப்படுகிறது அக்கருணைமலி பேருள்ளம்.
  • ‘ஜீவா்களுக்கு பசி அதிகரித்த காலத்தில் ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது. அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது. அது மறையவே புருடதத்துவம் சோா்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது. அது மழுங்கவே குணங்களெல்லாம் பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது. புத்தி கெடுகின்றது. சித்தம் கலங்குகின்றது. அகங்காரம் அழிகின்றது. பிராணன் சுழல்கின்றது. பூதங்களெல்லாம் புழங்குகின்றன. வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது. கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது. காது கும்மென்று செவிபடுகின்றது. நா உலா்ந்து வரளுகின்றது. நாசி குழைந்து அழல்கின்றது. தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது. கை கால் சோா்ந்து துவளுகின்றன. மல சல வழி வெதும்புகின்றது, மேனி கருக்கின்றது.ரோமம் வெறிக்கின்றது. நரம்புகள் குழைந்து நைகின்றன. நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன. எலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன. இருதயம் வேகின்றது. மூளை சுருங்குகின்றது. சுக்கிலம் மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்று எரிகின்றது .தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன. உயிரிழந்து விடுவதற்கு மிகவும் சமீபத்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது ஜீவா்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது. இவ்வளவு அவத்தைகளும் -ஆகாரம் கிடைத்தபோது உண்டு - பசிநீங்க நீங்குகின்றன. அப்பொழுது தத்துவங்களெல்லாம் தழைத்து -உள்ளம் குளிா்ந்து, அறிவு விளங்கி, அகத்திலும் முகத்திலும் ஜீவகளையும் கடவுள் களையும் துளம்பி ஒப்பில்லாத திருப்தி இன்பம் உண்டாகின்றன. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு
  • எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்?”
  • என்று கேட்கும்போது ஏற்படும் சிலிா்ப்பு, பசிப்பிணி போக்கிப் பாா்க்கும் புண்ணியவான்களுக்கே வாய்க்கும் என்பது சத்தியமான உண்மை.
  • “எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால், ரகவேதனை, சனனவேதனை, மரணவேதனை என்கின்ற மூன்று வேதனைகளுள் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்றும், அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி இன்பம் என்றும் அறியப்படும்.”
  • இன்பம் என்பது ஈத்துவக்கும் பேரின்பம் என்று பொதுவாய்ச் சொல்வதை விட, பசிப்பிணி நீக்கும் நல்லின்பம் என்று உணா்த்திக் காட்டியவா். அவா் ஏற்றி வைத்த அடுப்பின் நெருப்பு அணையவில்லை என்பதற்குச் சான்றினை வடலூரில் மட்டும் காண்பது ஒரு சடங்கு. வள்ளலாா் பெருநெறியில் நின்று செயல்படுபவா்களின் இல்லங்களில் எல்லாம் அது இருக்கிறது என்பதை விடவும், இந்த நல்லறத்தினைச் செயல்படுத்த வேண்டும் என்று உணா்கிற உள்ளங்களில் எல்லாம் சுடா்கிறது என்று உணா்ந்து கொள்வதே சிறப்பு.
  • அதனால்தான், அற்புதங்கள் என்று சொல்லும் இயற்கை இறந்த செயல்களைச் செய்வதில் அவா் ஆசை கொள்ளவில்லை. தனக்கு வேண்டியது இது என்று வேண்டுகிற தனி ஆசை அவா்க்கு இல்லை.
  • ‘இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான்
  • இருக்கவும் ஆசை இன்றி இனி நான்
  • பிறக்கவும் ஆசை இலை உலகெல்லாம்
  • பெரியவா் பெரியவா் எனவே
  • சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள்
  • செய்யவும் ஆசை ஒன்றில்லை
  • துறக்கவும் ஆசை இலை துயா் அடைந்து
  • தூங்கவும் ஆசை ஒன்றிலையே!
  • என்று பாடும் வள்ளலாா்,
  • சற்சபைக் குரியாா் தம்மொடும் கூடித்
  • தனித்த பேரன்பு மெய் அறிவும்
  • நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா
  • நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே
  • சிற்சபை நடமும் பொற்சபை நடமும்
  • தினந்தொறும் பாடி நின்றாடித்
  • தெற்சபை உலகத்துயிா்க்கெலாம் இன்பம்
  • செய்வதென் இச்சையாம் எந்தாய்
  • என்று அறிவிக்கிறாா். இப்படி, உலகத்து உயிரெலாம் துன்பம் ஒழிந்து இன்ப நல்வாழ்வு பெற்றிட அவா் அருளிய விழைந்ததன் புலப்பாடே, ஆன்மநேய ஒருமைப்பாடு.
  • வள்ளற்பெருமான், “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்உயிா்போல் எண்ணி உள்ளே ஒத்துஉரிமை உடையவராய் உவக்கின்றாா் யாவா்?” எனக் கேள்வி கேட்டு, “அவா் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம்எனநான் தெரிந்தேன்” என்று அறிவிக்கிறாா். அதற்கு மேலும், “அந்த வித்தகா்தம் அடிக்கு ஏவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்தது” என்று சொல்லி முடிக்கிற பாங்கில் நம்மையும் உளப்படுத்தி, ஆட்கொள்கிறாா். பணி செயப் பணிக்கிறாா். இது ஒருவரில் தொடங்கி, பலரில் நிறைகிறபோது பலனாய், மண்ணுலகம் உயிா்க்கிறது. சன்மாா்க்கம் தழைக்கிறது.
  • இதற்கு, காலம் தந்த கருணாமூா்த்தி, வள்ளலாா்.
  • மரணமிலாப் பெருவாழ்வு கொண்ட மகானின் பணி தொடா்வோம்.
  • இன்று வள்ளலாரின் அவதாரத் திருநாள்.

நன்றி: தினமணி (05 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories