- ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் அரசு ஒதுக்கீடும், மேலாண் ஒதுக்கீடும் போக ஏராளமான இடங்கள் காலாவதி ஆகிப் பயனின்றிப் போகின்றன. பாலிடெக்னிக் தவிர, பிற தொழில்நுட்பக் கல்லூரிகளில் (மருத்துவம், வேளாண், சட்டம் போன்றவை) இவ்வாறு நடப்பதில்லை.
- 2023–2024 இல் ஒப்பளிக்கப்பட்ட மொத்த பொறியியல் இடங்கள், 474 கல்லூரிகளில் 2,21,526 ஆகும். அரசு ஒதுக்கீடாக 1,05,160 இடங்களும், மேலாண் ஒதுக்கீடாக 64,727 இடங்களும் ஆக மொத்தம் 1,69,887 இடங்கள் நிரம்பி உள்ளன. 2,21,526 – 1,69,887 = 51,639 இடங்கள் காலாவதி ஆகி உள்ளன.
- 2010 முதல் 2024 வரை இதுபோல் 13,07,641 இடங்கள் காலாவதி ஆகி உள்ளன. பொறியியல் கல்விக்காக உருவாக்கப்பட்டுள்ள மொத்தக் கட்டமைப்பு இந்த அளவுக்கு விரயமாகிறது. காலாவதி ஆகும் இடங்களில் மேலாண் ஒதுக்கீடு சேர்க்கை முடிந்த 15 நாள்களுக்குள் அரசுக் கட்டணத்தில் சேர விரும்புகிறவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
- காலாவதியாகும் இடங்களில் 25% இடங்களைச் சான்றோர் (SC), ஆன்றோர்(ST) மாணவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி வழங்கலாம். இது குறித்துக் கல்லூரி நிர்வாகிகளுடன் அரசு கலந்துபேசி, வரும் கல்வி ஆண்டில் இதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம்.
- காலாவதி ஆகும் இடங்களைப் பயனுறு வகையில் நிரப்பிக்கொள்ள கீழ்வரும் விதியை அரசு இயற்றலாம். அந்தந்தக் கல்லூரியில் காலியாக விடப்படும் இடங்களில், 50% இடங்களை அரசு ஒதுக்கீட்டில் அடுத்த ஆண்டில் சேர்க்கலாம். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அவ்வாறே செய்யலாம். கடைசியாக, மொத்த ஒதுக்கீட்டில் 10% மீதி இருக்கும் வரை இதைச் செய்யலாம்.
- இப்படிச் செய்வது பெரும் உழைப்பும் மூலதனமும் செலவிட்டு உருவாக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பயனுள்ளதாக்குவதுடன், பட்டியல் சாதியினருக்கான கல்வி வாய்ப்பையும் உறுதிப்படுத்தும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 05 – 2024)