TNPSC Thervupettagam

காலிஸ்தான் பதற்றம்

July 10 , 2023 557 days 354 0
  • பஞ்சாப் அரசியல் களத்தில் செல்வாக்கை இழந்துவரும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர், வெளிநாடுகளில் முன்பைவிட ஆழமாக வேரூன்ற முயன்றுவருவதும் இந்தியாவுக்கு எதிரான வன்முறை சார்ந்த பரப்புரையில் தீவிரம் காட்டிவருவதும் மிகுந்த கவலை அளிக்கின்றன.
  • கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசித்துவரும் சீக்கியர்கள் மத்தியில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் தீவிரமாக இயங்கிவருகிறார்கள். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் இணைந்து, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது எனச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர், வெளிநாடுகளில் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களைச் சேதப் படுத்துவது, அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்துவது என அத்து மீறுகின்றனர்.
  • இதன் அடுத்த கட்டமாக, கனடாவின் பிராம்ப்டன் நகரில் கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ நிகழ்வின் 39ஆவது நினைவு நாள் பேரணியில், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைக் கொண்டாடும் பதாகைகள் இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, ‘காலிஸ்தானி டைகர் ஃபோர்ஸ்’ அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இந்தியத் தூதரக அதிகாரிகள் இருப்பதாக காலிஸ்தான் இயக்கத்தினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
  • தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் வகையில், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா, டொரன்டோவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அபூர்வா ஸ்ரீவாஸ்தவ், வான்கூவரில் உள்ள தூதரக அதிகாரி மணீஷ் ஆகியோரின் படங்களுடன், ‘இவர்கள் நிஜ்ஜரைக் கொன்றவர்களின் முகங்கள்' எனும் வாசகம் அச்சிடப்பட்ட பதாகையை ஏந்திப் பேரணி நடத்தியது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இதற்கிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் தூதரகக் கட்டிடத்துக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் தீவைத்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக அங்கு தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடவே, ஜூலை 8 (சனிக்கிழமை) அன்று காலிஸ்தான் இயக்கத்தினர் பிரிட்டன், கனடாவில் நடத்திய ‘காலிஸ்தான் சுதந்திரப் பேரணி’ இந்தப் பதற்றத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.
  • சம்பந்தப்பட்ட நாடுகளிடம் தனது கண்டனத்தை இந்தியா வலுவாகப் பதிவுசெய்திருக்கிறது. பயங்கரவாதத்தை மென்மையாகக் கையாளப் போவதில்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிவருகிறார். அதேவேளையில், கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் காலிஸ்தான் இயக்கத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்புவதற்குக் கருத்துச் சுதந்திரம் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் இந்தியா கண்டிப்புடன் தெரிவித்திருக்கிறது.
  • காலிஸ்தான் இயக்கத்தினரின் செயல்பாடுகள் தங்கள் மீதான நம்பகத்தன்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாக, வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எந்த நாட்டிலும் காலிஸ்தான் ஆதரவாளர்களை வளரவிடுவது, இந்தியாவுக்கு மட்டுமல்ல.. அந்தந்த நாடுகளுக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறார்.
  • வியன்னா ஒப்பந்தப்படி வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது சம்பந்தப்பட்ட நாட்டின் கடமை என்றும் இந்தியா நினைவூட்டியிருக்கிறது. இந்நிலையில், காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை. இவ்விஷயத்தில் இந்தியாவின் குரல் உலக அரங்கில் வலுவாக ஒலிப்பது அவசியம்!

நன்றி: தி இந்து (10 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories