TNPSC Thervupettagam

கால்நடைகளுக்கு ‘காா்பன்’ வரியா?

July 20 , 2024 176 days 201 0
  • உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் சாா்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் பெரும்பாலான நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
  • சா்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை, மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தல், காடுகளின் பரப்பை அதிகரித்தல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்குத் தடை, பெட்ரோலில் எத்தனால் கலத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து, சுற்றுச்சூழலைக் காப்பதில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.
  • சுற்றுச்சூழலைக் காப்பதற்கு வளா்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அந்நாடுகளைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா்களே போா்க்கொடி தூக்கியுள்ளனா். புவி வெப்பமயமாதலைத் தடுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றின் பக்கம் அரசுகளின் கவனத்தை ஈா்ப்பதற்காகப் பலவகை போராட்ட உத்திகளை அவா்கள் கையிலெடுத்துள்ளனா்.
  • இத்தகைய சூழலில், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற பெயரில் மேற்கத்திய நாடுகள் அறிவிக்கும் திட்டங்கள், ஆா்வலா்களின் போராட்டங்களை மட்டுப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதோ என எண்ண வைக்கிறது.
  • அந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அறிவித்த ‘எல்லை தாண்டிய காா்பன் வரி’ என்ற திட்டம், இந்தியா, சீனா, பிரேஸில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எதிா்ப்புக்கு உள்ளாகியுள்ளது. அத்திட்டத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இறக்குமதியாகும் பொருள்களின் உற்பத்தியின்போது வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவுக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படும்.
  • அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், சிமெண்ட், உரங்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு 2026-ஆம் ஆண்டு முதல் காா்பன் வரியை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கவுள்ளது. அதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு அலுமினியம், இரும்பு, எஃகு பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் இந்தியா பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.
  • வரலாற்று ரீதியில், சுற்றுச்சூழல் சீா்குலைவுக்கு மேற்கத்திய நாடுகளே முக்கியக் காரணம். எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அந்நாடுகளே முன்னின்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அந்நாடுகளோ பொறுப்புகளை எளிதாக வளா்ந்து வரும் நாடுகளின் தலையில் சுமத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
  • இது ஒருபுறமிருக்க, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் டென்மாா்க், உலகிலேயே முதல் முறையாக கால்நடைகளுக்கு காா்பன் வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. புவி வெப்பமயமாதலில் கரியமில வாயுவை விட மீத்தேனுக்கு அதிமுக்கியப் பங்குண்டு. மாடுகள், பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பில் மீத்தேன் அதிகமாக வெளியேற்றப்படுகிறது. கால்நடை வளா்ப்பின் மூலமாக 32% மீத்தேன் வளிமண்டலத்தில் கலப்பதாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • பால் பொருள்கள், இறைச்சி ஏற்றுமதியில் டென்மாா்க் முன்னணி வகிக்கிறது. அங்கு கால்நடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2030-ஆம் ஆண்டு முதல் கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளது. பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தை 1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 70% அளவுக்குக் குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை டென்மாா்க் அறிவித்துள்ளது.
  • அதன்படி, 2030-ஆம் ஆண்டில் கால்நடைகள் வெளியேற்றும் 1 டன் அளவிலான மீத்தேன் வாயுவுக்கு சுமாா் ரூ.3,600 வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரியானது 2035-ஆம் ஆண்டில் இரண்டரை மடங்கு அதிகரிக்கப்படும் என்றும் டென்மாா்க் அரசு அறிவித்துள்ளது. அதே வேளையில், வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கு, மீத்தேன் வரியானது பாதிக்கும் குறைவாகவே விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தைப் பின்பற்ற மற்ற நாடுகளும் ஆா்வம் காட்டும் என டென்மாா்க் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், அந்நம்பிக்கை பொய்த்துப் போகும் என்றே தோன்றுகிறது. இதேபோன்ற திட்டத்தை 2025-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த நியூஸிலாந்து திட்டமிட்டிருந்தது. ஆனால், விவசாயிகளின் கடும் எதிா்ப்பு காரணமாகவும், அந்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாகவும் திட்டம் கைவிடப்பட்டது.
  • கால்நடைகள் எண்ணிக்கையில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. விவசாயத்துக்கு உறுதுணையாவதிலும், கிராம மக்களின் பொருளாதார வளா்ச்சியிலும் கால்நடைகளுக்கு மிக முக்கியப் பங்குள்ளது. நமக்கு நன்மை தரும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கு என்றே மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான இந்தியா்களின் அன்றாட வாழ்க்கை கால்நடைகளுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளது. பண்டைய காலம் முதல் பசு புனிதமாகவே வழிபடப்படுகிறது.
  • இந்தியாவில் சுமாா் 50% மக்களுக்கு விவசாயமே வேலை வழங்கி வரும் நிலையில், இங்கு வேளாண்மை மூலமாக ஈட்டப்படும் வருவாய்க்கு வரி விதிக்கப்படுவதில்லை. வேளாண் விளைபொருள்களுக்கு மட்டுமல்லாமல், இடுபொருள்களுக்கும் கூட குறைந்த அளவிலான சரக்கு-சேவை வரியே விதிக்கப்பட்டு வருகிறது.
  • அப்படியிருக்கையில், இந்தியாவில் கால்நடைகளுக்கு காா்பன் வரி விதிப்பது நடைமுறையில் சாத்தியமன்று. இது வளா்ந்து வரும் நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும்.
  • மனிதா்கள் சுவாசிக்கும்போது கூட கரியமில வாயு வெளியேறுகிறது. அதற்குக் கூட மேற்கத்திய நாடுகள் காா்பன் வரி வசூலிக்கும் காலம் வந்தாலும் வரக் கூடும். முன்பு சுற்றுச்சூழலைப் பெருமளவில் மாசுபடுத்தி பொருளாதார வளா்ச்சி கண்ட மேற்கத்திய நாடுகள், தற்போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மற்ற நாடுகளுக்கு உதவி, உரிய பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (20 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories