- வேலைக்குச் செல்லும் பெண்களின் அன்றாடப் பிரச்சினையாகவும் முதன்மைப் பிரச்சினையாகவும் இருப்பது சுகாதாரமான கழிப்பறை. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பெண் ஊழியர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான கழிப்பறையைக்கூடப் போதுமான எண்ணிக்கையில் அமைப்பதில்லை. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் நிலை இப்படியென்றால், போக்குவரத்துக் காவலர்களாகச் சாலையில் பணியாற்றும் பெண்களின் நிலை கவலைக்குரியது.
- சென்னை மாநகராட்சியில் மட்டும் 546 பெண் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இருக்கின்றனர். இவர்கள் இயற்கை உபாதையைக் கழிக்க முறைப்படுத்தப்பட்ட கழிப்பறைகள் இல்லாத நிலையில் பணி நேரத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். கொளுத்தும் வெயிலில் தாகம் எடுத்தால்கூடத் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டிய சூழல். போதுமான தண்ணீரைக் குடிக்காமலும் நீண்ட நேரத்துக்குச் சிறுநீர் கழிக்காமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் அவர்களது உடல்நலனைப் பாதிக்கிறது.
- இந்நிலையைத் தவிர்ப்பதற் காகவே சென்னையில் உள்ள ஐந்து முக்கியமான இடங்களில் பயோ-டாய்லெட் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பயோ-டாய்லெட் திட்டம் செயல்படுத்தப்படக் காரண மாக இருந்த போக்குவரத்துக் காவலர் பூவிழி, இது குறித்துப் பேசினார்.
- “போக்குவரத்துக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போது கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்றால் அருகில் ஏதேனும் உணவகமோ கடைகளோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். முக்கியமான இடங்கள் என்றால் நிச்சயமாக இருக்கும். ஆனால், கழிப்பறைக்குச் சென்று திரும்பும் அந்தச் சில நிமிடங்கள் போக்குவரத்தைக் கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். உடை மாற்றுவதற்குக்கூட இடம் இல்லை என்பதால் சீருடையின் மீதே இன்னொரு ஆடை அணிந்து வருவோம். பணி நேரம் தொடங்கும்போது சீருடையோடு பணியைத் தொடங்குவோம்” என்று சொல்லும் பூவிழி, மாதவிடாய்க் காலத்தில் பெண் காவலர்கள் மிகவும் சிரமத்தை அனுபவிப்பதாகச் சொன்னார்.
திட்டம் விரிவாக்கப்பட வேண்டும்
- “வெயில் காலத்தில் தாகத்துக்காகத் தண்ணீர் குடித்தால், சாலை பாதுகாப்புக்காக நாங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றிக் கழிப்பிடம் இல்லாதபோது சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தைப்படுவோம். ஒருமுறை பணியில் இருந்தபோது போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், எங்களது சிரமம் குறித்துக் கேட்டறிந்தார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டுச் சென்னைக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் பயோ-டாய்லெட் குறித்துப் பரிந்துரைத்தார்” என்கிறார் பூவிழி. போக்குவரத்துக் காவலர்களுக்கான பயோ-டாய்லெட்டை அரசு சாரா அமைப்பான சென்னை ரன்னர்ஸ் வடிவமைத்துள்ளது.
- சென்னையில் முதல்கட்டமாக மெரினா கடற்கரை அருகில் உள்ள உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை சந்திப்பு, விவேகானந்தர் இல்லம், பல்லவன் சந்திப்பு, ஆடம்ஸ் பாயின்ட் (நேப்பியர் பாலம்) ஆகிய இடங்களில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிப்பறைகளில் மின் விசிறி, முகம் பார்க்கும் கண்ணாடி, துணிகளை மாட்டும் வளையம், சோப் வைக்கும் ஸ்டாண்ட், குப்பைத் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப் பட்டுள்ளன.
- ஒரு முறை நீர் ஏற்றினால் பத்து நாள்களுக்குப் பயன்படுத்தும் வகையிலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யும் வகையிலும் பயோ டாய்லெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என்பதே பெண் போக்குவரத்துக் காவலர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 04 – 2024)