- கோவை சரக காவல் துறைத் துணைத் தலைவர் (டிஐஜி) விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது வேதனைக்குரிய நிகழ்வு. மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் காவலர்களின் அழுத்தம் நிறைந்த பணிச் சூழல், வாழ்க்கை முறை ஆகியவற்றை அவருடைய அகால மரணம் மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது.
- 2009 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார், 2023 ஜனவரியில் கோவை சரக டிஐஜி-ஆக நியமிக்கப் பட்டார். இந்நிலையில், ஜூலை 7 அன்று அதிகாலை நடைப்பயிற்சியை முடித்து விட்டுத் திரும்பியவர், தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலரிடமிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்திருக்கிறார்.
- விஜயகுமாருக்குப் பணிசார்ந்த அழுத்தமோ குடும்பம் சார்ந்த பிரச்சினைகளோ இல்லை என்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மருத்துவக் காரணங்களாலேயே அவர் அந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் காவல் துறைக் கூடுதல் தலைமை இயக்குநர் ஏ.அருண் தெரிவித்திருக்கிறார்.
- இதற்கிடையே, கடந்த வாரம் சென்னையில் ஆயுதம் தாங்கிய ரிசர்வ் படை பிரிவைச் சேர்ந்த காவலர் அருண்குமார் (27) தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 2018இல் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கின் விசாரணையில் ஈடுபட்டிருந்த திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சையானது.
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் (165) காவல் துறை தற்கொலைகள் நிகழ்வதாக, மத்திய உள்துறை அமைச்சகம் 2016இல் வெளியிட்ட தரவு கூறுகிறது. தற்கொலைக்கு, தனிப்பட்ட பிரச்சினைகள் உள்பட பல காரணங்கள் இருக்க முடியும் என்றாலும், பொதுவாகக் காவல் துறையின் உயரதிகாரிகள் தொடங்கி கடைநிலைக் காவலர்கள் வரை பல்வேறு வகையான அழுத்தங்களுடன் பணியாற்றுவதை மறுத்துவிட முடியாது.
- காவல் துறையைச் சேர்ந்தவர்களின் பணிசார்ந்த அழுத்தத்தைக் கையாள்வதற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. ஆனால், நீண்ட நேரப் பணி, எந்த நேரத்தில் அழைக்கப்பட்டாலும் பணிக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம், உள்ளிட்ட பணிச் சூழல்களை மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
- குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதிலும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை நிரூபிப்பதிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்குக் காவல் துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகளே முழுப் பழியைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர்கள் சில நேரம் விசாரணை தொடர்பான விதிகளை மீற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்காகக் கெட்ட பெயரையும் சில நேரம் வழக்கு விசாரணையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
- 2021இல் தமிழகக் காவல் துறைத் தலைவராக சைலேந்திரபாபு பொறுப்பேற்றபோது, அனைத்துக் காவலர்களுக்கும் வாரம் ஒரு நாள் விடுமுறை, பிறந்தநாள் திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நாள்களில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்கான விடுப்பு ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அது முழுமையாக நடைமுறைப் படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
- இதைத் தாண்டி காவல் துறையினரின் பணிச் சூழலை இலகுவாக்குவது, அவர்கள் தமது உளவியல் பிரச்சினைகளைத் துறைக்குள்ளேயே மனம்விட்டுப் பேசி தீர்வுகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குவது, தேவைப்படும் நேரத்தில் மனநல ஆலோசனை, சிகிச்சை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்வது, மனநலப் பயிற்சி நடைமுறைகளை மேம்படுத்துவது, தேவைகளை நிறைவேற்றுவது எனக் காவல் துறைக்குள் பலகட்ட சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அரசு இதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 07 – 2023)