காவல் துறையிடம் கல்வித் துறை கருத்து கேட்கலாமா?
- பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்தக் காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது பல்லாண்டுகளாக உள்ள விதிமுறை. பள்ளிகளிலும் பள்ளி நிகழ்ச்சிகளிலும் பேசுவதற்கு ஒருவர் வரலாமா கூடாதா என்பதையும் காவல் துறைதான் முடிவு செய்யும் என்பது புதிய விதிமுறை. பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள ‘கல்விசார்/ கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்’ இதைத்தான் மறைமுகமாக உணர்த்துகின்றன.
புதிய நடைமுறைகள்:
- நீட், ஜேஇஇ முதலிய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிவிழாக்கள், சுற்றுலாக்கள், முகாம்கள் போன்றவற்றுக்காகப் பள்ளிக்குப் பேச வருபவர்களை அனுமதிப்பதற்கெனச் சில நெறிமுறைகள் நவம்பர் முதல் வாரத்தில் அனுப்பப்பட்டுள்ளன.
- அவற்றின்படி, கல்விசார் பணிகளுக்காகச் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டுவரும் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் குறித்த முதன்மைப் பட்டியல், மாநிலப் பள்ளிக் கல்வி இயக்குநரால் பராமரிக்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டுதலின்படி இதேபோல ஒரு பட்டியல் உருவாக்கப்படும். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைப்புகள், 15 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
- நிகழ்ச்சிகளில் பேசுவோரை முடிவு செய்வதற்காக மாநில அளவில் ஒரு குழுவும் மாவட்ட அளவில் ஒரு குழுவும் செயல்படும். மாநிலக் குழுவின் தலைவராகப் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் இருப்பார். மாவட்டக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்பட எட்டுப் பேர் இதன் உறுப்பினர்கள். பட்டியலில் இல்லாத தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் செயல்திட்டம் பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்கலாம்.
- குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமையை வளர்ப்பதற்கும் அவர்கள் முற்போக்கான அறிவியல் கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெறுவதற்கும் ஏற்ற வகையில் பள்ளிகளில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதே இதன் நோக்கம். எனினும், சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடத்திய சிலரால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது ஆகிய இரண்டு சிக்கல்கள்தான் இதன் பின்னணி எனப் புரிந்துகொள்ள இயலும்.
பாராட்டத்தக்க அம்சங்கள்:
- பள்ளிகள், யார் வேண்டுமானாலும் நினைத்தபோது வந்து தங்கள் உணர்வுகளையெல்லாம் கொட்டிச் செல்வதற்கான இடம் அல்ல. மாணவர்களது உடல், மன நலனைக் காப்பதற்கான முதல் பொறுப்பு பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்கிறது.
- அதை இந்த வழிகாட்டல்கள் உரக்கத் தெரிவிக்கின்றன. முறைப்படி ஒப்புதல் பெற்றுப் பள்ளிக்கு வந்தவர்கள், தாங்கள் முன்வைத்த செயல்திட்டத்துக்கு முரணாகப் பேசினால், அவர்கள் தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்திவைக்கும் தலைமை ஆசிரியரின் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- சுற்றுலாக்களில் பெற்றோர் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. மாணவர் நலன் விவகாரத்தில் இனியும் சறுக்கல் நேரக் கூடாது என்கிற கல்வித் துறையின் நோக்கம் பாராட்டுக்குரியது. எனினும், அனுமதி பெறும் செயல்முறையை இவ்வளவு சிக்கலானதாக மாற்ற வேண்டுமா என்பதே கல்வி ஆர்வலர்களின் கேள்வி.
- தனிநபர்கள் பலர் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகச் செயல்பட்டுவரும் நிலையில், விதிமுறைகளில் தொண்டு நிறுவன அமைப்புகளை மட்டுமே அரசு முன்னிலைப்படுத்துவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நெறிமுறைகளின் இன்னொரு பக்கம்:
- தொண்டு நிறுவனங்கள் பாரபட்சமின்றி வாய்ப்பளிக்கப்படுமா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. ஓர் ஆட்சியில் ஆதரிக்கப்படும் ஒரு தொண்டு நிறுவனம், இன்னொரு ஆட்சியில் புறக்கணிக்கப்படலாம். மாணவர் நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்கள் வளாகங்களை வழங்கும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. புதிய நெறிமுறைகள் இவற்றின் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடும்.
- தவறான சிலரைத் தவிர்ப்பதற்காகச் சரியான பல நபர்களை மறுக்கும் சாத்தியம் இந்த நெறிமுறைகளில் உள்ளதாகக் கூறும் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், “பள்ளிக் கல்வித் துறைக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது. அதன்படி, இதுவரை பள்ளிகளோடு சேர்ந்து பணிபுரிந்து, ஆக்கபூர்வமான பங்களிப்புகளைச் செய்துள்ளவர்கள் குறித்து ஒரு பட்டியலை உருவாக்கலாம்.
- அதில் இடம்பெற்றவர்களைப் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கலாம். புதிதாக வருபவர்களை விசாரித்து முடிவு செய்யலாம். இவர்களைப் பற்றிக் கருத்துக் கேட்கக் காவல் துறை வரைக்கும் பள்ளிக் கல்வித் துறை செல்ல வேண்டியதில்லை.
- உயர்கல்வியில் புதுவாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்குதல், மாணவிகளுக்குப் பொது சுகாதாரம் குறித்துக் கற்பித்தல், பாதுகாப்பான தொடுதல் - பாதுகாப்பற்ற தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல செயல்பாடுகளுக்காகத் தன்னார்வலர்கள் பலர் அரசுப் பள்ளிகளோடு தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். காவல் துறையிடம் அனுமதி பெற்றுவிட்டுத்தான் இவர்களைப் பள்ளிக்கு வரவழைக்க முடியும் என்பது இப்பணிகளுக்குத் தடை போடுவதாக அமையும்” என்கிறார்.
- அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகச் செயல்படும் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பும், ‘தவறு நடக்காமல் பார்த்துக்கொள்வது, தவறு நடந்தால் அதை எவ்வாறு கையாள்வது ஆகியன குறித்து ஆசிரியர்களுடன் விவாதித்து, பொறுப்பை உணர்ந்து சுயமான முடிவுகள் எடுக்க ஆசிரியர்களுக்குச் சுதந்திரத்தை வழங்குவதுதான் தற்போதைய தேவை. சுதந்திரமான கல்வியியல் செயல்பாட்டை முடக்கும் நெறிமுறைகளை அரசு திரும்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது.
காவல் துறையின் தலையீடு:
- தொண்டு நிறுவனங்கள் நிகழ்ச்சி நடத்த விண்ணப்பித்த பின்னர், அவற்றுக்குக் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவினர் (IS-Intelligence Service) சான்று அளிப்பர். அதன் பிறகுதான் மாநில/மாவட்டக் குழுவால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன. மனித உரிமை குறித்த கல்வியைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம் கொண்ட ‘மக்கள் கண்காணிப்பகம்’ (People’s Watch), இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
- “பள்ளி நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்களையோ, வழக்கறிஞர்களையோ அழைக்க நுண்ணறிவுப் பிரிவினர் எப்படி முன்வருவார்கள்? மகாவிஷ்ணு பேச்சு ஏற்படுத்திய எதிர்மறை விளைவுக்குத் தீர்வாகப் பள்ளிகளைக் காவல் துறையின் கண்காணிப்புக்கு உள்பட்ட இடமாக மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடியது” என மக்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
எந்த ஜெயகாந்தன்?
- குற்றம், சட்டம் சார்ந்தே சிந்தித்துப் பழக்கப்பட்டுள்ள காவல் துறைக்குச் சில வரம்புகள் உள்ளன. “நான் நள்ளிரவில் மேம்பாலத்தில் விரைவாகச் சென்றுகொண்டிருந்தேன். விசில் சத்தம் கேட்டதால், காரை நிறுத்தினேன். அது பாலத்தின் சரிவு என்பதால் கொஞ்சம் தள்ளியே காரை நிறுத்த முடிந்தது. விசில் அடித்த போக்குவரத்துக் காவல் அதிகாரி ‘என்ன மேன் நீ... காரை நிறுத்தாமல் போற?’ எனக் கேட்டார்.
- அதற்கு நான் ‘Call me Mr. Jeyakanthan’ எனக் கூறினேன். அவர், ‘எந்த ஜெயகாந்தன்?’ என்றார். ‘தமிழ்நாட்டில் ஒரே ஒரு ஜெயகாந்தன்தான் உண்டு. ஒரு காவல் அதிகாரியாக நீங்கள் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்’ என நான் சொல்ல, அவர் சல்யூட் அடித்தார்” என 1980களில் (‘சிந்தையில் ஆயிரம்’) சென்னையில் தனக்கு நடந்த அனுபவத்தைப் பதிவுசெய்துள்ளார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
- எழுதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அரசியல் பங்கேற்பு உள்படப் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட அனுபவமும் ஜெயகாந்தனை அவ்வாறு பேச வைத்திருக்கலாம். எனினும் ஜெயகாந்தன் யார் என அந்த அதிகாரி ஒரு சிறு உரசலுக்குப் பின்னர்தான் அறிந்துகொள்ள முடிந்தது. தகவல்தொடர்பு நன்கு வளர்ந்திருக்கும் இன்றைக்கும் காவல் துறையின் போக்கில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாகக் கூற முடியாது.
- அதன் அசாதாரணமான வேலைப்பளு அதற்கெல்லாம் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், கல்வித் துறையின் செயல்பாடு குறித்த முக்கியமான அதிகாரத்தைக் காவல் துறையிடம் ஒப்படைப்பது தீர்வாகுமா எனப் பள்ளிக் கல்வித் துறை பரிசீலிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 12 – 2024)