TNPSC Thervupettagam

காவல் பணியில் இட ஒதுக்கீடு வேண்டும்

December 3 , 2023 405 days 300 0

நீங்கள் ஏன் காவல் பணியை விரும்பினீர்கள் மேடம்

  • காவல்துறை என்பது மிடுக்கான சமூகப்பணி. நான் சிறுவயதில் ஆண் உடையில் இருந்தபோதே பெண் போலீஸ் ஆகவேண்டும் என விரும்பினேன். எங்க ஏரியாவில் அடிக்கடி சண்டை நடக்கும். அப்போதெல்லாம் நானா நீயான்னு நிப்பாங்க. ஐயோ என்ன ஆகப்போகுதோனு நான் நெனப்பேன். அப்போ ஒரு ஜீப் சத்தம் கேட்கும். ஒருத்தர்கூட அங்கே நிக்க மாட்டாங்க. ஓடிடுவாங்க.
  • அதிகாரத்தோடு ஒரு சமூகப்பணியை நாம மேற்கொள்ளணும்னா அது காவல் பணிதான்னு என் மனசுல ஆழமா பதிஞ்சி போச்சி. அது மட்டுமில்லாமல் என் சொந்தக்காரங்க நெறைய பேரு என்னைத் திருநங்கைன்னு பெருமையா நெனைக்க மாட்டாங்க. கோழைன்னு நெனப்பாங்க. அவங்க எதிர்ல ஒரு காவல் அதிகாரியா வலம்வரணும்னு நெனச்சேன்.

நீங்க காவல்துறைக்கு வந்தது கோர்ட் கொடுத்த சிறப்பு தீர்ப்பால்தானே

  • ஆமாம். முதலில் நான் வேலைக்கு விண்ணப்பித்த போது மூன்றாம் பாலினத்துக்கு இடமே இல்லை. எந்தப்பாலினத்தில் குறிப்பிட வேண்டும் என்கிற குழப்பமே ரொம்ப நாளாக இருந்தது.
  • நீங்க பெண் மாதிரியே இருக்கீங்க. ஏன் திருநங்கைன்னு விண்ணப்பிக்கணும்? பெண் என்கிற பிரிவிலேயே விண்ணப்பிக்க வேண்டியதுதானே?
  • அப்படிச் செய்ய முடியாது சார். காரணம், எனது ஆதார் திருநங்கைன்னு இருந்தது. சப்போர்ட்டிங் டாகுமென்ட்ஸ் எல்லாம் திருநங்கைன்னுதான் இருந்தது. அதனால, நான் திருநங்கைன்னு சொன்னேன். அங்கேதான், எனக்குப் பிரச்சினையை தொடங்குச்சு.”

எல்லா சான்றிதழ்களிலும் பெண் என்று மாத்திட வேண்டியதுதானே

  • அப்படி நெனச்சவுடன் பாலினத்தை மாற்றிவிட முடியாது. திருநங்கை, பெண் அல்லது ஆண் என எப்படி வேண்டுமானாலும் என்னைக் கூறிக்கொள்ளலாம் என இந்தியத் திருநர் பாதுகாப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், ‘திருநங்கை’ என அடையாள அட்டைகள் கிடைப்பது தமிழகத்தில் சுலபம்.
  • பெண் என்று எனக்கான அடையாள அட்டை பெற நான் வழக்கறிஞர் மூலமாக அபிடவிட், மருத்துவர் அல்லது ஆலோசகர் மூலமாக ‘நான் பெண்ணாக உணர்கிறேன்’ என்கிற சான்றிதழும் பெற்று, தேசியத் திருநர் அடையாள அட்டையைப் பெறவேண்டும். அந்தத் தேசிய அடையாள அட்டையை வைத்து மற்ற அடையாள அட்டைகளான ஆதார் போன்றவற்றை மாற்றவேண்டும். தேவை ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து உதவிகோர வேண்டும். மேலும், நான் என்னைப் பெண் என்றும் பெண் பெயரையும் அரசிதழில் மாற்றி வெளியிட வேண்டும். இவை அனைத்தையும் நான் செய்தேன்.   

உங்களுக்குக் காவல்துறை உதவவில்லையா

  • காவல்துறையில் திருநங்கைகள் இணைவது புதிய நிகழ்வு என்பதால் இது குறித்த புரிதல் காவல்துறையினருக்குக் குறைவு. எனக்கு உதவணும்னு அவர்களுக்கு மனது இருந்தாலும் அவர்களால் உதவ முடியவில்லை. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கூறியிருக்கிற வரையறைக்குள் எனது பாலினம் இல்லை என்பதால் யாரும் எனக்கு உதவ முடியவில்லை.
  • காவல் பணியில் சேர திருநங்கை என்பதைத் தடையாகக் கருதக் கூடாது என்று கோர்ட் சொன்னபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
  • சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு பிரச்சினை களையும் நீதியரசர் புரிந்துகொண்டு எனது ஒரு வயதைத் தள்ளுபடி செய்யச்சொன்னது எனக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது. எங்கள் ஊரில் உள்ளவர்கள் முன்னிலையில் நான் போலீஸ் உடையில் வரப்போகிறேன் என நினைத்துப் பெருமைப்பட்டேன். இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பை நான் சிறப்பாகச் செய்திட உறுதி எடுத்துக் கொண்டேன்.
  • காவல் பணியாளர் தேர்வாணையத்தில் திருநர் சமூகத்துக்கென ஒரு பிரிவு இருந்தால் அதன் அடிப்படையில் நான் வெற்றியோ தோல்வியோ பெற்றிருப்பேன். பாலினம், சாதி அடிப்படையில் ஒதுக்கீடு இருக்கும்போது எனக்கு எதன் அடிப்படையிலும் அவர்கள் வாய்ப்பு அளிக்கவில்லை என்பதே உண்மை.

கதையல்ல நிஜம்

  • * ‘இவர்கள் இதற்கானவர்கள் அல்ல’ என யாரும் யாரையும் கூறிவிட முடியாது. மன்னர்கள் காலத்தில் இருந்தே திருநங்கைகள் பாதுகாவலர்களாக இருந்துள்ளார்கள். குறிப்பாக, சோழர்களின் அரண்மனையில் திருநங்கைகள் இருந்துள்ளனர்.
  • * இந்தியக் கடற்படையில் பணிபுரிந்த ஒருவர் திருநங்கையாக மாறியவுடன் அவரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர். இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பாலினத்தையும் நாம் செய்யும் பணியையும் தொடர்புபடுத்துவது நியாயமல்ல.
  • * இந்தக் கதையில் வரும் திருநங்கை எவ்வளவு போராட்டத்துக்குப் பின் காவல்துறையில் சேர்ந்துள்ளார் என்பது பெருமிதம் தருகிற அதேநேரம், இப்படிப் போராட முடியாமல் எத்தனை திருநர் வெளியேறி இருக்கின்றனர் என்பதை என்னும்போது மனம் கனக்கிறது.
  • * இட ஒதுக்கீடு ஒன்றே இதற்கு மிகப்பெரிய தீர்வு. எவ்வாறு காவல்துறையில் சாதி, பாலின ரீதியாக ஒதுக்கீடு இருக்கிறதோ அதேபோல் திருநர் மக்களுக்கும் தனிக் கொள்கையை அரசு கொண்டுவருவது காலத்தின் அவசியம்.
  • * திருநங்கை ஒருவர் காவல்துறையில் கால்பதித்தது தமிழகத்தில்தான் என்பது இந்தியாவுக்கே பெருமையான செய்தி. இன்று திருநங்கைகள் பலர் தமிழகக் காவல்துறையில் பணியாற்ற முன்வந்திருப்பதும் சிறப்பு.
  • * தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர். குறிப்பாகத் திருநங்கைகள் சுயதொழில் தொடங்க அவர்களுக்குத் தேவையான கருவிகளை வாங்கித் தந்து ஊக்கப்படுத்தியுள்ளனர். அவர்களை யாரேனும் துன்புறுத்தினால் உடனடியாக அதில் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்கின்றனர்.
  • * கரோனா பிடியில் நாம் சிக்குண்ட காலத்தில் தற்போது போக்குவரத்து கூடுதல் ஆணையாளராக இருக்கும் சுதாகர் தலைமையில் சென்னையில் உள்ள திருநங்கைகளுக்குப் பல்வேறு உதவிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories