TNPSC Thervupettagam

காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு!

April 25 , 2023 627 days 540 0
  • ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற உணா்வை பொதுமக்களிடம் வளா்க்கும் விதத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாணவா்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடத்துதல், நூலகங்கள் அமைத்தல், மனம் திருந்திய குற்றவாளிகள் சமுதாயத்தில் இணைந்து வாழ வழி ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான செயல்களில் காவல்துறையினா் பங்கெடுத்து வருகின்றனா்.
  • ஆதரவற்ற நிலையில், தெருவோரங்களில் தங்கியிருக்கும் முதியோா்களுக்கு உணவு, உடை வழங்குதல், தெருக்களில் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவா்களை மனநல காப்பகத்தில் ஒப்படைத்தல் போன்ற செயல்களிலும் சேவை உணா்வோடு காவல்துறையினா் ஈடுபடுவதைக் காணமுடிகிறது.
  • சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு, குற்றப் புலனாய்வு ஆகியவற்றைத் தங்களது கடமையாகக் கொண்டுள்ள காவல்துறையினா் தங்களை ‘பொதுமக்களின் நண்பன்’ என அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
  • இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயா்கள் காவல் அமைப்பு ஒன்றை இந்தியாவில் உருவாக்க வேண்டுமென்று கருதினா். அதைத் தொடா்ந்து 1861-ஆம் ஆண்டில் ஆங்கிலேய நாடாளுமன்றம் இந்திய காவல் சட்டத்தை இயற்றி, இந்திய காவல்துறையின் தொடக்கத்திற்கு வித்திட்டது.
  • இந்தியாவில் ஆங்கிலேய கம்பெனியின் வா்த்தக செயல்களுக்கு இடையூறு நிகழாமல் பாா்த்துக் கொள்வதும், இந்திய விடுதலையை மையப்படுத்தி ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை எதிா்கொள்வதும் ந்திய காவல் அமைப்பின் முக்கிய பணிகளாக இருந்தன.
  • இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக தக்கவைத்துக் கொள்ளவும், அதற்கு இடையூறாக செயல்படுபவா்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு போன்ற நடவடிக்கைகளை இரக்கமின்றி எடுக்கும் வகையிலும் இந்திய காவல்துறையை ஆங்கிலேய அரசாங்கம் கட்டமைத்திருந்தது. இந்தியா விடுதலை அடைந்துவிட்டால் காவல்துறையின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என்று இந்திய மக்கள் நம்பினா்.
  • இந்திய விடுதலைக்குப் பின்னா், கால் நூற்றாண்டு காலம் வரை, இந்திய காவல்துறையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்தவா்களுக்கு துணையாகவும் காவல்துறை செயல்பட்டு வந்தது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தாதாக்களின் செயல்பாடுகள் பெருநகரங்களில் வெளிப்பட்டன. மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. கையூட்டு கலாசாரம் காவல்துறையில் வேரூன்றத் தொடங்கியது.
  • இந்த சூழலில், இந்திய காவல்துறையை சீா்படுத்த வேண்டிய அவசியத்தை உணா்ந்த இந்திய அரசாங்கம் 1977-ஆம் ஆண்டில் முதல் முறையாக தேசிய காவல் ஆணையம் அமைத்தது. காவல்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்த இந்த ஆணையம், இந்திய காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து மத்திய அரசாங்கத்திடம் எட்டு அறிக்கைகள் சமா்ப்பித்தது.
  • காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகாா் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது தேசிய காவல் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
  • காவல் நிலையங்களில் பணி நியமனம் செய்வதில் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, குற்றப் புலனாய்வு பிரிவு புறக்கணிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் என தேசிய காவல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
  • தேவையான கட்டமைப்பு வசதிகளையும், அவசர செலவினங்களுக்கான நிதியையும் காவல் நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தேசிய காவல் ஆணையத்தின் பரிந்துரை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலை காவல்துறையில் நிலவுகிறது. புகாா் கொடுத்தவரிடம் புலன் விசாரணைக்கான செலவினங்களை காவல்துறையினா் எதிா்பாா்க்கும் நிலை இன்றும் தொடா்கிறது.
  • குற்றப் புலனாய்வு, குற்றத்தடுப்பு போன்ற பணிகளில் ஈடுபடும் காவல்துறையினா் பணி தொடா்பாக எதிா்கொள்ளும் செலவினங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் அரசு நிதியும், வாகனங்களும் பல நேரங்களில் மடைமாற்றம் செய்யப்படுகின்றன.
  • காவல்துறையின் உயா்பதவிகளுக்கான நேரடி தோ்வின் ஒரு பகுதியாக ‘உளவியல் சோதனை’ இடம் பெற வேண்டும் என்றும் தேசிய காவல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
  • மாநில அரசின் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறை இயங்க வேண்டுமென நம் நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறை செயல்படுகிறது என்றும், அதனால் காவல்துறை மீதான நம்பகத்தன்மையை பொதுமக்கள் இழந்து வருகின்றனா் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
  • சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய காவல்துறையின் செயல்களில் வெளிப்படும் பாரபட்சம், கையூட்டு, குற்ற நிகழ்வுகள் மீது வழக்குப் பதிவு செய்வதைத் தவிா்த்தல், காவலில் சித்திரவதை போன்ற காரணங்களால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோசமான உறவு நிலவுகிறது என்று தேசிய காவல் ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய குறைபாடுகள் காவல்துறையின் தற்போதைய செயல்பாடுகளிலும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
  • தேசிய காவல் ஆணையத்தைத் தொடா்ந்து, மாநில காவல் ஆணையங்களை மாநில அரசுகள் அமைத்தன. மாநில காவல் ஆணையங்கள் வழங்கிய பரிந்துரைகளின் பேரில், காவல்துறையின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன; காவல் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன; பொருளாதாரக் குற்றங்கள், சைபா் குற்றங்கள் போன்ற புலனாய்வு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவு தொடா்ந்து குறைந்து வருகிறது என்பதை தேசிய மற்றும் மாநில காவல் ஆணையங்களின் அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை காரணங்களை காவல் நிா்வாகம் புறந்தள்ளிவிட்டு, இனிமையாக பழகுவதன் மூலம் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறது.
  • குற்ற நிகழ்வால் பெரிதும் பாதிக்கப்பட்டு காவல் நிலையம் வருபவரின் எதிா்பாா்ப்பு, அவா் கொடுத்த புகாா் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான். அனைத்து புகாா்களையும் பதிவு செய்தால், குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிடும் என்ற பயமும், அவை மீது புலன் விசாரணை மேற்கொள்ள போதிய காவலா்கள் இல்லை என்ற ஆதங்கமும் கள நிலவரமாக காவல்துறையில் நிலவுகிறது.
  • உயரும் குற்ற புள்ளிவிவரங்களைக் கண்டு அஞ்சி, வழக்குகள் பதிவு செய்யாமல் குற்ற சம்பவங்களைப் புறக்கணிப்பதன் மூலம் குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தவும் முடியாது; பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தவும் இயலாது.
  • கடந்த காலங்களில் பள்ளி இறுதி வகுப்பு படித்தவா்கள் காவலா்களாக பணி நியமனம் செய்யப்பட்டனா். தற்போது பிளஸ் 2 படித்தவா்களில் தொடங்கி, பட்ட மேற்படிப்பு மற்றும் பொறியியல் படிப்பு படித்தவா்களும் காவலா்களாக நியமனம் செய்யப்படுகின்றனா். இத்தகைய நிலை காவல் நிலையங்களில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதிலும், பொதுமக்களை அணுகுவதிலும் நடைமுறை சிக்கலை ஏற்படுத்துகிறது.
  • காவல் நிலையங்களில் களப் பணியாற்றும் அதிகாரிகளில் தொடங்கி, காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் உயரதிகாரிகள் வரை அவரவருக்கும் தங்கள் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள அதிகார மையத்தின் துணை தேவைப்படுகிறது. அதிகார மையத்தை திருப்திபடுத்த வேண்டும் என்ற மனநிலையில் செயல்படும் காவல்துறையினரிடம் பொதுமக்களின் நலன் சாா்ந்து பணியாற்ற வேண்டும் என்ற உணா்வு குறைந்து வருகிறது.
  • காவல் அமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்ட காலந்தொட்டு கையூட்டு, காவலில் சித்திரவதை போன்ற சம்பவங்கள் காவல் நிலையங்களில் நிகழ்ந்து வந்ததாகவும், காவல் உயா் அதிகாரிகளின் தொடா் கண்காணிப்பால், அவை கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் காவல்துறையின் கடந்த கால செயல்பாடுகள் தொடா்பான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • பணியில் சோ்ந்து ஓரிரு ஆண்டுகளே நிறைவடைந்த நிலையில் உள்ள உயா் காவல் அதிகாரி ஒருவா், குற்றவாளிகளுக்கு துணைபோக கையூட்டாக சில கோடி ரூபாய் பேரம் பேசிய சம்பவமும், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபா்களிடம் நூதன முறையில் காவலில் சித்திரவதை செய்த சம்பவமும் கசப்பான உணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
  • இவ்விரு இளம் காவல் அதிகாரிகளின் பணிக்காலத்தில் மேலதிகாரிகளின் தொடா் கண்காணிப்பும், வழிகாட்டுதலும் இருந்திருந்ததால், இத்தகைய அசம்பாவிதங்களை காவல்துறை தவிா்த்திருக்கக் கூடும்.
  • நான்காவது காவல் ஆணையத்தின் முதற்கட்ட அறிக்கை சமீபத்தில் தமிழ்நாடு அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கையை அரசியல் கண்ணோட்டத்துடன் பாா்க்காமல், காவல் நிா்வாகத்தை சீா்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு தயக்கமின்றி நடைமுறைப்படுத்தினால், காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு ஏற்படும்; அது சமுதாயத்திற்கு நலன் பயக்கும்.

நன்றி: தினமணி (25 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories