TNPSC Thervupettagam

காவிரி பங்கீட்டை உறுதிசெய்ய ஒரு வழி

October 17 , 2023 277 days 217 0
  • மீண்டும் தமிழக விவசாயிகளைக் கொடுஞ்சூழலில் நிறுத்தியுள்ளது காவிரி. கர்நாடகத்திலும் நீர்ப் பற்றாக்குறை நிலவுவதாக அங்குள்ள விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர். சர்வதேச அளவில் இரு நாடுகள் இடையிலான நதி நீர்ப் பங்கீடுகளே வெற்றிகரமாகப் பல இடங்களில் நடக்கும்போது நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் இரு மாநிலங்கள் இப்படி நதி நீர்ப் பங்கீட்டைப் பெரும் பிரச்சினையாக்கிக்கொள்வது மோசம்.   

மாநிலங்கள் இடையிலான நீர்ப் பகிர்வின் வரலாறு

  • காவிரி அளவுக்கு இல்லை என்றாலும், இன்றைக்கு இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் நதி நீர்ப் பகிர்வு தொடர்பான சர்ச்சைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
  • இந்தியாவில் 80% அதிகமான நதிகள், மாநிலங்களுக்கு இடையில் பாய்கின்றன. இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாகவே 125 நதி நீர் ஒப்பந்தங்கள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், சிக்கல் நிலவ முக்கியமான காரணம் என்னவென்றால், இந்த ஒப்பந்தங்களின் பழமையும், அவற்றின் காலப் பொருத்தமின்மையும் என்று சொல்லலாம்.
  • இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலானவை. அதாவது, அன்றைய காலகட்டத்தின் பிராந்திய எல்லைகள், அன்றைய காலகட்டத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகள், அன்றைய காலகட்டத்தின் மக்கள் தேவைக்கேற்ப இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • காவிரி தொடர்பான ஒப்பந்தங்களையே எடுத்துக்கொண்டால், சென்னை - மைசூர் மாகாணங்களுக்கு இடையில் உண்டாக்கப்பட்ட நதி நீர்ப் பங்கீடு முதல் ஒப்பந்தம் உருவான ஆண்டு 1892.  இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாணத்தின் ஒப்புதலின்படியே மைசூர் அரசு அணை கட்ட முடியும். 1924இல், 50 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்தடுத்து ஏற்படுத்தப்பட்ட துணை ஒப்பந்தங்களின் அடிப்படையில் மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணையையும் சென்னை அரசு மேட்டூர் அணையையும் கட்டின.
  • இதற்குப் பின் நாம் கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பப் பார்த்தால், பல சமயங்களில் ஒப்பந்த ஷரத்துகள் மீறப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த மீறல்களை இரு தரப்பும் நியாயப்படுத்துவதற்கு ஏற்ப மக்கள்தொகை அதிகரிப்பு தொடங்கி பாசன நிலங்களின் பரப்பு அதிகரிப்பு வரை பெரும் மாற்றங்களும் இரு தரப்பிலும் நடந்திருக்கின்றன.
  • இதையெல்லாம் கணக்கில் கொண்டே காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான இறுதித் தீர்ப்பை நீதித் துறை வழங்கியது.  தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி, கர்நாடகத்திற்கு 284.75 டிஎம்சி, கேரளாவிற்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று தண்ணீர்ப் பங்கீட்டைப் பிரித்தளித்தது. ஆயினும், அதை வெற்றிகரமாக அமலாக்க முடியவில்லை. காரணம், ஆற்றில் தண்ணீர் வழக்கமான அளவுக்கு வரும்போது பிரித்துக்கொள்வதில் உண்டாக்கப்பட்ட பகிர்வு அணுகுமுறை போன்ற ஒன்றை வறட்சிக் காலகட்டத்துக்கு நம்மால் வெற்றிகரமாக உருவாக்க முடியவில்லை.

மூன்று தீர்வுகள்

  • ஆற்றில் தண்ணீர் அடித்துக்கொண்டு வரும்போது பகிர்வில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை; தண்ணீர் வரத்து குறையும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. இரு தரப்பிலுமே அவரவர் நலன்கள் முக்கியம் என்றாகும்போது அரசியல்ரீதியாகத் தீர்வு காண்பதில் தடை உண்டாகிவிடுகிறது. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  மூன்று நடவடிக்கைகளை நாம் யோசிக்கலாம்.
  • முதலாவது, இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப புதிய ஒப்பந்தங்களை உருவாக்கிடல்; இரண்டாவது, நதிநீர்ப் பகிர்வை அமலாக்க சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு தன்னாட்சி நிர்வாகக் குழுவை உருவாக்கிடல்; மூன்றாவது, ஆற்றில் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்ற அளவில், நீர் பகிர்வைத் திட்டமிடல்.
  • இப்போது ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ புது டெல்லியில் இருந்து செயல்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக ஒன்றிய நீர்வளத் துறைச் செயலர் இருக்கிறார். ஆயினும், மாற்றம் தேவை!

தீர்வுக்கான தேவை எது

  • நதி நீர்ப் பங்கீட்டால் ஏற்படும் முழு பயன்களையும், பாதிப்புகளையும் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பங்கீட்டைத் தீர்மானிக்க வேண்டும். ‘நீர்பிடிப்பு - வடிகால் பகுதி பயன்பாடு’ இதற்கு உதவலாம்.
  • இதற்கு நதி நீரின் அளவு, வரலாற்று உரிமை, மக்கள்தொகை வளர்ச்சி, நதிநீர் விரயத்தைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட  மாநிலங்கள் எடுக்கும் முயற்சிகள், பருவத்தின் மழையளவு, பயிரிடும் முறைகள், தண்ணீரின் அறிவியல் பயன்பாட்டு முறைகள், மாநிலத்தில் வேளாண்மையின் முக்கியத்துவம், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி, வீட்டுப் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் தண்ணீர், வெள்ளக் கட்டுப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பயன்பாட்டினைக் கணக்கிட வேண்டும்.
  • உலக வங்கி 1960இல், இந்தியாவிற்கும் - பாகிஸ்தானிற்கும் இடையேயான இந்து நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்த்தது. இதற்கென்று ‘நிரந்தர இந்து நதிநீர் ஆணையம்’ அமைக்கப்பட்டது. அது தொடர் தகவல் பரிமாற்றத்தினையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினையும் உறுதிசெய்தது. நதிநீரின் பயன்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிக்கிறது.

சர்வதேச உதாரணங்கள்

  • அனைத்துலக எல்லை மற்றும் நீர் ஆணையமானது, அமெரிக்கா - மெக்சிகோ நாடுகளுக்கிடையே 1884 முதல் நதிநீர் பங்கீட்டை வெற்றிகரமாக நடத்திவருகிறது. நீர் பாசனப் பயன்பாடு, நதியின் போக்கு, வெள்ளக் கட்டுப்பாடு, மக்கள்தொகை பெருக்கம், நகர்ப்புறமயமாதல் மற்றும் பல காரணிகளின் அடிப்படையில், நதிநீர் பங்கீட்டு உடன்படிக்கை 7 முறைக்கு மேல் திருத்தப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, நதி நீரின் அளவு கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் வறட்சி காலங்களிலும், வெள்ள காலங்களிலும் நீர் பங்கீடு செய்யப்படுகிறது.
  • இதே போன்று இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பங்கிட்டுத்திட்டங்களில் ஒன்று, 1972இல் இந்தியா - வங்கதேசம் நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீர் ஆணையம். இந்த ஆற்றுப் போக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் மே 31 வரை ‘குறைந்த மழை பெறும் பருவ காலம்’ என வரையறுக்கப்பட்டது. இதனைக் கண்காணிக்க இரு நாடுகளின் ஒருங்கிணைந்த குழு உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், மழை குறைவாகும்போது இரு நாடுகளும் தங்களின் தண்ணீர் தேவையைக் குறைத்துக்கொள்கின்றன. ஆனால், ‘தண்ணீர் கொடுக்க முடியாது, போ!’ என்ற சூழல் உருவாவதே இல்லை.

இது நிர்வாக மேலாண்மை

  • நாம் அரசியல்ரீதியாக மட்டுமே இது போன்ற விவகாரங்களில் உடனடித் தீர்வை எட்ட முடியும் என்று நம்பினால் அது நிலைத்த பலனைத் தராது. நாம் நிரந்தரத் தீர்வை எட்ட நிர்வாக மேலாண்மைத் தளத்தில் சிந்திக்க வேண்டும். தண்ணீர் பகிர்வானது தன்னாட்சி அதிகாரம் மிக்க மூன்றாவது அமைப்பு ஒன்றினுடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (17 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories