- ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொடர்பான மூன்றாவது பணிக்குழுக் கூட்டம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மே 22 தொடங்கி 24 வரை நடைபெற்றது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகக் காஷ்மீர் மாநிலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் பாகிஸ்தான், சீனாவின் எதிர்ப்பு காரணமாகவும், சில நாடுகள் பங்கேற்காததன் காரணமாகவும் ஸ்ரீநகர் ஜி20 கூட்டம் பேசுபொருளாகியிருக்கிறது.
- ஜி20 அமைப்பு முன்னணி நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பாகக் கருதப் படுகிறது. அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி கொண்டவை. அந்த வகையில், 2022 டிசம்பர் 1 முதல் இதன் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. அதன் அடிப்படையில், ஜி20 மாநாட்டின் சில அமர்வுகள் காஷ்மீரில் நடத்தப்படும் எனக் கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகின.
- ஜி20 அமைப்பில் இடம்பெறாத நிலையிலும், பாகிஸ்தான் இதற்குக் கண்டனம் தெரிவித்தது. இக்கூட்டம் நடந்தால் காஷ்மீர் விஷயத்தில் ஐநாவில் தீர்மானங்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதுதான் பாகிஸ்தானின் அச்சத்துக்குக் காரணம். தனது தரப்புக்கு வலுசேர்க்கத் தனது நட்பு நாடான சீனாவிடமும், இந்தோனேசியா, சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளிடமும் பாகிஸ்தான் ஆதரவு கோரியது. இதன் பலனாக, ‘ஜி20 மாநாட்டில் அரசியல் கலப்பு கூடாது’ என ஆரம்பத்திலேயே சீனா ஆட்சேபம் தெரிவித்தது.
- எதிர்பார்த்தது போலவே இதில் கலந்துகொள்ள சீனா மறுத்துவிட்டது. சர்ச்சைக்குரிய இடத்தில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்றும் அந்நாடு விளக்கமளித்திருக்கிறது. இதையடுத்து, தனது சொந்த மண்ணில் எங்கு வேண்டுமானாலும் மாநாடு நடத்தத் தனக்குச் சுதந்திரம் இருப்பதாகவும், இதில் கலந்துகொள்ளாததால் சீனாவுக்குத்தான் நஷ்டம் என்றும் இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது. அதேபோல், காஷ்மீர் குறித்துப் பேசும் உரிமை பாகிஸ்தானுக்கு இல்லை என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது.
- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட துருக்கி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இதில் பங்கேற்கவில்லை. சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த, எகிப்தும் கலந்துகொள்ளவில்லை. இஸ்லாமியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்நாடுகள் இந்த முடிவை எடுத்த நிலையில், இதே அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தோனேசியா, ஓமன் போன்றவை இக்கூட்டத்தில் பங்கேற்றன. 27 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது சுற்றுலா தொடர்பான முந்தைய இரு கூட்டங்களை ஒப்பிட அதிகமான எண்ணிக்கை ஆகும்.
- காஷ்மீரில் கடந்த சில பத்தாண்டுகளில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் கொண்ட மாநாடுகள் நடைபெற்றதில்லை எனும் சூழலில் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், இதுவரை அங்கு தேர்தலும் நடத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சர்வதேச அளவிலான மாநாட்டின் அமர்வைக் காஷ்மீரில் நடத்துவதன் மூலம், அங்கு அமைதியும் பாதுகாப்பும் நிலவுவதாக இந்தியா நிறுவியிருக்கிறது. இதே நம்பிக்கையுடன் அங்கு தேர்தலை நடத்தவும் அரசு முன்வர வேண்டும். அது காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை உலகுக்கு மேலும் தெளிவுபடுத்தும்!
நன்றி: தி இந்து (28 – 05 – 2023)