TNPSC Thervupettagam

காஷ்மீர்: தேர்தல் அல்ல, மாபெரும் பொறுப்பு

May 30 , 2024 226 days 171 0
  • நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
  • காஷ்மீரை மட்டும் தனித்த அத்தியாயமாக நான் எழுத வேண்டும் என்று எண்ணியதற்குப் பல காரணங்கள் உண்டு.
  • 2019 இல் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசு தன்னுடைய இந்தப் பத்தாண்டு கால ஆட்சியின் பெரிய முடிவை காஷ்மீர் சார்ந்துதான் எடுத்தது. இந்திய ஒன்றியத்தோடு காஷ்மீரை இணைப்பதும், ஏனைய பிராந்தியங்களோடு ஒப்பிட காஷ்மீருக்குக் கூடுதல் அதிகாரங்களை அளித்ததுமான அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டதோடு, லடாக், ஜம்மு காஷ்மீர் இரண்டும் தனித் தனி ஒன்றியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இதற்குப் பின் காஷ்மீர் எதிர்கொள்ளும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது. அரசின் நடவடிக்கை காஷ்மீரில் பெரும் ஆக்கபூர்வ மாற்றங்களைக் கொண்டுவந்திருப்பதாக பாஜக தலைவர்களும், முற்றிலும் ஜனநாயகம் அங்கு முடக்கப்பட்டிருப்பதாக காஷ்மீரின் அரசியலர்களும் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு இங்கே கூடுதல் கவனம் அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
  • தமிழ்நாட்டைப் போன்றே மொழி வழி ஒருங்கிணைப்பு உணர்வைக் கொண்டவர்கள் காஷ்மீரிகள் என்றாலும், புவியியல் மற்றும் பண்பாடு சார்ந்து மூன்று பிராந்தியங்களாகவே காஷ்மீர் நீடித்தது. லடாக், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு. இந்த பிராந்தியங்களின் மக்கள்தொகை எண்ணிக்கை அங்குள்ள அரசியல் சூழலைக் கொஞ்சம் எளிதாக விளக்கக் கூடியது: ஜம்முவில் இந்துக்கள் 67.5%, சீக்கியர்கள் 2%, இஸ்லாமியர்கள் 30%; லடாக்கில் இந்துக்கள் 46%; பௌத்தர்கள் 39%; இந்துக்கள் 12%; காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்துக்கள் 2%, இஸ்லாமியர்கள் 97%.
  • காஷ்மீரிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்  டெல்லி காட்டிய தொடர் அலட்சியமும் துரோகங்களும் காஷ்மீரைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தன. தொடர் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டநிலையில், பயங்கரவாத நடவடிக்கைகள் மேல் எழுந்தன. ஆயுததாரிகள், வன்முறைகள் இடையேதான் அன்றாடத்தைக் கழிக்க வேண்டும் என்றானது காஷ்மீரிகள் வாழ்க்கை. ஏற்கெனவே இமயமலையின் கடினச் சரிவு மேடுகளும் பாதி நாட்கள் பனி மூடிவிடுவதுமான வானிலையும் வெளியுலகத் தொடர்பைக் கடினமாக்கிவிட்டிருக்கும் சூழலில், அதோடு வன்முறைகளும் சேர்ந்துகொண்டது எந்த வளர்ச்சியும் இல்லாத பிராந்தியமாக இதை மாற்றிவிட்டது. ஆப்பிள் சாகுபடி உள்ளிட்ட விவசாயப் பணிகளும் உள்ளூரில் மேற்கொள்ளும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் உற்பத்தியுமே பெரும்பான்மை காஷ்மீர்களின் வாழ்வாதாரம். 
  • பல தரப்பு அபிலாஷைகள் முட்டி மோதும் இந்த பிராந்தியத்தை ‘காஷ்மீரி அடையாளம்’ ஒருங்கிணைத்திருந்தது என்றாலும், சென்ற ஏழு தசாப்தங்களில் இங்குள்ள மக்களுடைய உணர்வில் ஏராளமான முரண்பாடுகள் உருவாக காஷ்மீர் தலைவர்களும் முக்கியமான ஒரு காரணமாக அமைந்தார்கள். டெல்லி தலைவர்கள் ஒருபுறம் வஞ்சித்தார்கள் என்றால், உள்ளூர் தலைவர்களும் உரிய பொறுப்போடு நடந்துகொள்ளவில்லை. மூன்று பிராந்தியங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கின் செல்வாக்கு காஷ்மீர் அரசியலில் இயல்பாகப் பிரதிபலித்தது. பொதுவாகவே காஷ்மீரின் மூன்று பிராந்தியங்களிலுமே வளர்ச்சிக் குறைவு என்றாலும், பள்ளத்தாக்கை ஆதங்கத்துடன் ஜம்மு, லடாக் மக்கள் பார்க்க இது வழிவகுத்தது. 2019இல் மாநிலம் பாஜக அரசால் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது லடாக்கில் கணிசமானோர் வரவேற்றதற்கு இதுவே காரணம். “ஜம்முவும் பிரிக்கப்பட்டிருக்கலாம்” என்றும் அங்கிருந்த ஒரு தரப்பினர் கூறினர். காஷ்மீர் பள்ளத்தாக்கு மீளா துரயத்தில் ஆழ்ந்தது. எல்லாவற்றுக்கும் மேல் ஒட்டுமொத்த நாடுமே அதிர்ச்சிக்கு ஆளானது.
  • ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, இன்று ஒட்டுமொத்த காஷ்மீரிலிருந்து வெளிப்படும் குரல்களைக் கவனித்தால் மூன்று பிராந்தியங்களிலுமே அதிருப்தியே வெளிப்படுகிறது. ஐந்தாண்டுகளாக ஆளுநர் வழி ஆட்சியை டெல்லி நடத்துவதால் நிர்வாகமும் வளர்ச்சியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வை எல்லோரிடமுமே கேட்க முடிகிறது. முன்பு இந்த முடிவால் லடாக் பலன் பெறும் என்று நம்பிய சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் சமீபத்தில் கடும் குளிரில் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரதம் ஓர் உதாரணம்.
  • ஶ்ரீநகரில் நான் சந்தித்த ஒவ்வொருவரிடமுமே அச்சம் சூழ்ந்திருப்பதைக் கண்டேன். “அரசை விமர்சிக்கும்யாரும் கைது செய்யப்படலாம். குறைந்தபட்சம் முன்பு மக்கள் பிரதிநிதிகள் இருந்ததால் நாங்கள் அவர்கள்முன் முறையிட ஒரு வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் இல்லை. இங்கே என்ன இருக்கிறது, பாருங்கள்” என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப பலரிடமும் கேட்டேன். சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. திடீர் திடீரென்று மின்சாரம் நின்றுவருகிறது. நகரிலேயே பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருப்பதாகச் சொன்னார்கள்.
  • ஜம்முவைச் சேர்ந்த ஒரு இளைஞர் சொன்னார், “பிராந்திய பிரிவினை ஒருவேளை வளர்ச்சிக்குவழிவகுக்கலாம் என்ற நப்பாசை சிலருக்கு இருந்தது. காரணம், முந்தைய காஷ்மீரிகளின் தலைவர்களும் ரொம்ப சிறப்பான நல்லாட்சியைத் தந்தார்கள் என்று சொல்வதற்கு இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்புவரை நான்கு மருத்துவக் கல்லூரிகள்தான் மாநிலத்தில் இருந்தன என்று சொன்னால் நம்புவீர்களா? பாஜக சில பெரிய திட்டங்களைக் கொண்டுவந்தது. புதிய மருத்துவக் கல்லூரிகளை அறிவித்தது. இதெல்லாம் நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், மொத்தமாகக் கிடைத்தது ஏமாற்றம்தான். மாநில அந்தஸ்துகூட இல்லாத இடத்தில் நீங்கள் ஒரு மாநகராட்சி அதிகாரத்தைக்கூட மக்களுக்குப் பகிர முடியாது!”
  • காஷ்மீரில் தன்னுடைய முடிவுகளுக்குப் பெரும் வரவேற்பு இருப்பதாகச் சொன்ன பாஜக இந்த முறைபள்ளத்தாக்கில் உள்ள மூன்று தொகுதிகளிலுமே போட்டியிடவில்லை. உள்ளூர் பாஜகவினருக்கே இதுஅதிர்ச்சி. குறைந்தபட்சம் அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கேனும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் இடையே இருந்தது. கடைசி நேரத்தில் அந்த முடிவையும் கட்சி கைவிட்டுவிட்டது. ஜம்முவிலும், லடாக்கிலும் மட்டும் பாஜக கவனம் பதித்திருந்தாலும், அங்கும் சென்றமுறை போன்று செல்வாக்கு இல்லை. வெற்றிக்குக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்று பாஜகவினரே தெரிவிக்கின்றனர். பள்ளத்தாக்கைப் பொறுத்த அளவில், “காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்றுக்குமே வாக்களிக்க வேண்டாம்” என்று பிரச்சாரம் செய்வதோடு நிறுத்திக்கொண்டிருக்கின்றனர் பாஜகவினர்.
  • பொதுவாக, பள்ளத்தாக்கில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகும். இந்த முறை இந்தச் சூழல் மாறும் என்று களத்தில் நிற்கும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்று தரப்பாரும் நான் சென்றிருந்த தருணத்தில் கூறினர். “தண்ணீர், மின்சாரம், சாலைகள்…” இந்த மூன்று விஷயங்களைமுன்னிறுத்தியே அவர்கள் பேசுகின்றனர். “டெல்லியில் ஆட்சி மாறினால் காஷ்மீர் மக்கள் அதிகாரம் பெறுவார்கள்; அதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” என்ற பேச்சுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல கவனம் இருக்கிறது. லடாக்கில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மக்களுடைய விவாதத்தின் மையத்தில் இருக்கின்றன. அதேசமயம், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் எல்லாம் சரியாகச் செல்வதாகக் கூறிட முடியாது. கூட்டணிக்குள்ளான முரண்கள், கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிரான அதிருப்திக் குரல்கள், எல்லாவற்றுக்கும் மேல் “இவ்வளவு நாட்கள் உங்களுக்கு வாக்களித்ததற்கு மட்டும் என்ன பலனைக் கண்டோம்?” என்ற கேள்விகளும் அவர்களைச் சங்கடப்படுத்துகின்றன.
  • எப்படியாயினும், காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் துயரங்களும் காஷ்மீர் எதிர்கொள்ளும் சவால்களும் அவர்களுடையது மட்டும் இல்லை; ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகம் - கூட்டாட்சிக்கு முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் கேள்விகள் அவை. ஆகையால், காஷ்மீரிகள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் காஷ்மீர் மற்றும் இந்திய தலைவர்கள் முன் மாபெரும் பொறுப்புகளாக உருமாறுகின்றன!  

நன்றி: அருஞ்சொல் (30 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories