TNPSC Thervupettagam

காஷ்மீர் பெண்களின் மனமும் குளிரட்டும்!

August 31 , 2019 1969 days 1278 0
  • புராண ரத்தினம் என வர்ணிக்கப்படும் விஷ்ணு புராணம் குமரிக் கடல் முதல் காஷ்மீர பர்வதம் வரை பாரத தேசம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, நம் எல்லைகள் பற்றிக் கூறும்போது, 

வடதிசை எல்லாம் இமயம் ஆகத் 

தென்னங் குமரியோடு ஆயிடை அரசர் 

முரசுடைப் பெருஞ்சமம் ததைய 
ஆர்ப்பெழ 

என்று வடக்கு எல்லை இமயம் என்கிறது. 

  • காஷ்மீரத்தின் சிறப்பு பனி மலைகளும் இயற்கை எழிலும் மட்டுமல்ல, பாரத தேசத்தின் வளர்ச்சியில் அது தந்திருக்கும் பங்களிப்பும் மகத்தானது. புராணங்களும் இதிகாசங்களும் போற்றும் பூமி காஷ்மீர். சப்தரிஷிகள் என்று போற்றப்படும் ரிஷிகளுள் ஒருவரான ரிஷி காஷ்யபர் காஷ்மீரத்தைச் சேர்ந்தவர். ஆதிசங்கரர் காஷ்மீரம் வரை சென்று அங்கே மடத்தை நிறுவியது மட்டுமல்லாமல், விஷ்ணு ஸகஸ்ரநாமத்திற்கு (திருமாலுக்கு ஆயிரம் பெயர்கள்) உரை செய்ய வேண்டும் என அவருக்கு இறைவனின் கட்டளை பிறந்த இடம் காஷ்மீரம். 
  • அறிஞர்களும் தத்துவ ஞானிகளும் கூடி கோட்பாடுகளை, தத்துவங்களை நிறுவிய சக்தி பீடங்களில் ஒன்றான சாரதா பீடம் என்று போற்றப்பட்ட, பாரத தேசத்திலேயே மிகச் சிறந்த பல்கலைக்கழகம் காஷ்மீரத்தில் அமைந்திருந்தது. இதே பல்கலைக்கழகம்தான் ராஜதரங்கிணி என்று பதினாறாம் நூற்றாண்டு வரை இந்த தேசத்தின் எழுதப்பட்ட வரலாற்றைத் தந்தது. 
கோட்பாடுகள்
  • வரலாற்றில் பல்வேறு சமஸ்தானங்கள் வெளிப்படையாகத் தோன்றிய போதிலும் கலாசாரத்தால் ஒன்றுபட்ட பாரத தேசமாகவே விளங்கியதை பல இடங்களிலும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. காசியில் கல்விபயிலும் மாணவர்கள் தமது கோட்பாடுகளை தத்துவங்களை நிறுவுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் செல்லவேண்டிய உச்சபட்ச இடமாக காஷ்மீரம் திகழ்ந்தது என்பது, காசியில் கல்வி கற்ற மாணவன் அங்கு கல்வி முடிந்தவுடன் காஷ்மீரம் நோக்கிய தன் பயணத்தை அன்றே தொடங்குவதாக அந்தத் திசை நோக்கி சில அடிகளை எடுத்து வைக்கவேண்டும் என்ற மரபு இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.
  • அக்கமகாதேவி போன்ற காஷ்மீரப் பெண்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்களிப்பை வழங்கினர். இன்றைக்கு அந்த மக்களின் பங்களிப்பு என்ன? ஏன் இதிலே தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்ற வினாக்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.
  • 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் ஒன்றுகூடி புதிய ஒன்றுபட்ட சுதந்திர இந்தியா உருவாயிற்று, மூன்று சமஸ்தானங்களைத் தவிர. அவற்றுள் ஒன்றான காஷ்மீரம் 1947 அக்டோபர் 26-இல் முறைப்படி இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்தது.
  • சில காரணங்களால் 1949-இல் சிறப்பு அந்தஸ்து பெற்ற காஷ்மீர் ஏறத்தாழ 70 ஆண்டுகள் அந்த சிறப்பு அந்தஸ்தோடு தொடர்ந்தது.
  • சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப்பிரிவு திரும்பப் பெறப்படுவதாகவும் இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவேதான் காஷ்மீரும் என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவித்தார். ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு லடாக் பகுதி சட்டப்பேரவை அற்ற யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு-காஷ்மீர் பகுதி சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஏற்படுத்தப்போகும் நன்மைகளைப் பற்றி ஒருபுறம் பலரும் மகிழ்ச்சி தெரிவிக்க, எதிர்க்கட்சிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றன. 
  • இந்த முடிவு உலக அரங்கில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, அரசியல் ரீதியாக வளர்ச்சியோ மாற்றங்களோ எப்படி இருக்கும் என்பதை வரும் நாள்களில்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்த முடிவினால் காஷ்மீரத்துப் பெண்களின் நிலையில் ஏற்படப்போகும் மாற்றத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
நாட்டின் வளர்ச்சி
  • சுதந்திர இந்தியாவின் 72 ஆண்டுகால வரலாற்றில் நாட்டின் வளர்ச்சியில் காஷ்மீர் பெண்களின் பங்களிப்பு என்ன? காஷ்மீர் பெண்கள் எந்த அளவுக்குத் தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்? ஏற்பட வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் நாடு ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
  • காஷ்மீரப் பெண்கள் அழகானவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்வு அழகானதாக இருக்கிறதா என்ற வினா எழும்போதே, இல்லை என்ற பதிலும் தோன்றிவிடுகிறது.
  • குறைந்தபட்சம் மக்கள்தொகையில்கூட சமநிலை காஷ்மீரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இல்லை. 
  • ஜம்மு-காஷ்மீரில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகளே இருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆண்-பெண் விகிதாச்சார சமநிலை குறையும்போது ஏற்படும் பாதிப்புகள் தீவிரமானவை. பெண்கள் குறைந்த அளவில் இருக்கும்போது  அவர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த இயலாத சூழல் இயல்பாகவே ஏற்பட்டுவிடும்.
வன்முறை
  • பெண்களின் மீதான வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் இந்த விகிதாச்சார சமநிலையற்ற தன்மை வழிவகுத்துவிடும். கடந்த 20 ஆண்டுகளாகவே ஆண்-பெண் விகிதம் இப்படியான மிகப் பெரிய வேறுபாட்டோடுதான் தொடர்கிறது. 
    சமீபத்தில் இந்த நிலை இன்னும் மோசம் அடைந்துள்ளது. லடாக்கின் லே பகுதியில் 1,000-த்துக்கு 583 பெண்கள்தான் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அதிர்ச்சியைத் தருகிறது.
  • இயற்கையில் இத்தகைய விகித வேறுபாடு தோன்றக்கூடுமா? எனில் இந்த அளவிலான விகித வேறுபாட்டுக்கான காரணங்கள் என்ன? சிந்திக்க வேண்டியது அவசியம்.
  • அதேபோல காஷ்மீரப்பெண்களுக்கு இதுவரை கல்வி எந்த அளவுக்குக் கிடைத்திருக்கிறது என்று பார்ப்போமேயானால் அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கிறது. 2011-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏறத்தாழ பாதிப் பெண்களுக்கு இன்னும் கல்வியறிவு என்பது கனவாகவே இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத பெண்கள் ஏறத்தாழ 50 சதவீதம் பேர். மீதமுள்ள 50 சதவீதத்திலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்ற அளவில்தான் மிக அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். உயர் கல்வி, மேல்நிலைக் கல்வி இவையெல்லாம் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே தற்போது வரை உள்ளது. 
  • திருமணம் என்று வரும்போது, நல்ல கல்வியறிவும் வேலைவாய்ப்பு அடிப்படை வசதிகளும் தன்னிறைவு பெற்ற பகுதிகளிலேயேகூட ஆணவக் கொலைகள் நடந்தேறுகின்றன. தாங்கள் விரும்பிய வாழ்வைத் தேர்ந்தெடுப்பதில் நாடு முழுவதும் பெண்களுக்கு சிக்கல்கள் இருந்துவரும் சூழலில், காஷ்மீரப் பெண்களின் நிலை? 
    கல்வியறிவும் குறைவு, வேலைவாய்ப்பும் கனவு. விரும்பிய பிற மாநில ஆண்களை மணந்தால் காஷ்மீரி என்ற அடையாளத்தையே துறக்க வேண்டிய துர்பாக்கியம்.
  • பாகிஸ்தான் நாட்டவரை மணந்தால் அந்த ஆண் காஷ்மீர் குடியுரிமை பெற முடியும் என்ற கட்டுப்பாடுகள் இந்தப் பெண்களின் வாழ்வை சீரழித்து வந்திருக்கின்றன. வேற்று நாட்டவரைப் பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க முயன்றால் அந்தப் பெண்ணின் நிலை இன்னும் பரிதாபம். இந்த அவலங்களை எல்லாம் துடைத்தெறிந்து ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு தற்போது மத்திய அரசுக்கு இருக்கிறது. 
  • இன்னும் குடியுரிமைகூட கிடைக்காத லட்சக்கணக்கான மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களுள் இருக்கும் பெண்கள் நிலை எந்தப் பதிவுகளிலும் வருவதற்கு வாய்ப்பில்லை. அதேபோல தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் பெறும் இட ஒதுக்கீட்டையும் காஷ்மீரின் பட்டியலின மக்கள் பெறவில்லை.
பாகுபாடுகள்
  • மிகப் பெரும் ஜாதியப் பாகுபாடுகள் நிலவும் பகுதியில் பெண்கள் நிலை பற்றி என்ன சொல்வது? காஷ்மீர் பள்ளத்தாக்கில் அன்றாடம் பயங்கரவாத நடவடிக்கைகள், அதைக் கட்டுப்படுத்துவதற்கான ராணுவத்தின் நடவடிக்கைகள் இவற்றுக்கு இடையில்தான் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கடந்த காலங்களில் 40,000-த்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் இருக்கும் பெண்களின் நிலை என்ன? அன்றாட வாழ்க்கையே போர்க்களத்திற்கு நடுவில் இருப்பதாக அமைந்த பெண்கள் நிம்மதியான உணவும் உறக்கமும் காணமுடியுமா?
    தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்தியா முழுவதும் அமலில் உள்ள கல்வி உரிமை, சொத்துரிமை, சமூகநீதி தொடர்பான இட ஒதுக்கீடுகள் ஆகிய அனைத்தும் காஷ்மீர் மக்களுக்கும் அந்தப் பெண்களுக்கும் கிடைக்க வழி ஏற்பட்டிருக்கிறது. அதன் பொருட்டு இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. 
  • இந்தியாவில் பிற பகுதிகளில் இருக்கும் நலத் திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களும் இனி இவர்களுக்கும் சாத்தியப்படும். உலகின் மிக அழகான பிரதேசத்தில் பிறந்திருக்கும் நம் சகோதரர்கள் அழகான வாழ்வை வாழட்டும். வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களுக்கும் கிடைக்கட்டும். 
  • காஷ்மீரத்தில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் பனிமலைச் சாரலில் கைகோத்து விளையாடிக்கொண்டு பள்ளிக்கூடம் செல்லட்டும். இனியேனும் காஷ்மீரப் பெண்கள் நிம்மதியாகப் பாதுகாப்பு உணர்வுடன் இரவுகளில் கண்ணுறங்கட்டும். அதற்கான வழிமுறைகளையும் செயல்பாடுகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.
  • இந்திய மக்கள் அதற்கு உறுதுணையாக ஒருமித்து ஒற்றுமை உணர்வோடு நிற்க வேண்டும்.

நன்றி: தினமணி (31-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories