TNPSC Thervupettagam

காஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்

November 4 , 2019 1902 days 1593 0
  • ஜம்மு காஷ்மீரானது மாநிலம் எனும் அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு ஒன்றிய பிரதேசங்கள் ஆகிவிட்டன; காஷ்மீர் மீது பாஜக அரசு எடுத்த முடிவுகள் அக்.31 அன்று முழுமையாகச் செயலாக்கத்துக்கு வந்துவிட்டன.
  • ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரித்து சுயாட்சி அளிக்க வேண்டும் என்பது லடாக் மக்களின் ஐம்பதாண்டு கோரிக்கை; அதன் ஒரு பகுதி நடந்திருக்கிறது என்ற அளவில் இப்போதைய மாற்றங்களில் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரங்களோடு, தன்னுடைய மாநில அந்தஸ்தையும் இழந்தது போக, மூன்று மாதங்களாக அங்குள்ள மக்கள் சகஜ வாழ்க்கையையும் இழந்திருப்பதை ஏற்கவே முடியாது.

காஷ்மீர் விவகாரம்

  • காஷ்மீர் விவகாரத்தில் தன்னுடைய செயல்பாடுகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் முயற்சிகளில் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவை ஜம்மு காஷ்மீரைச் சுற்றிப்பார்க்க அனுமதித்தது மத்திய அரசு. குறுகிய நேரச் சுற்றுப்பயணத்தின் முடிவில் “காஷ்மீரின் பெரும் பிரச்சினை பயங்கரவாதம்” என்றும் “காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அதன் உள்நாட்டு விவகாரம்” என்றும் இந்தக் குழுவினர் தெரிவித்துச் சென்றார்கள்.
  • எனினும், இந்தக் குழுவில் இடம்பெறுவதாக இருந்த கிரிஸ் டேவிஸுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதும், “இந்திய ராணுவத்தின் மேற்பார்வை இல்லாமல், காஷ்மீரில் நான் விரும்பிய இடங்களுக்குச் சென்று பார்க்கவும், விரும்பியவர்களைச் சந்தித்துப் பேசவும் அனுமதி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். எல்லாம் நன்றாக உள்ளது என பாசாங்கு செய்யும் மோடி அரசின் பிரச்சாரத்தில் பங்கேற்க நான் தயாராக இல்லை என்பதை எனது மின்னஞ்சல்கள் மூலம் தெளிவுபடுத்தியிருந்தேன்” என்று அவர் பேட்டியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அரசின் அணுகுமுறைகள்

  • காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று எழுபதாண்டுகளாக உறுதிபடப் பேசிவந்த குரலையே மோடி அரசும் மேலும் உறுதியாகப் பேசுகிறது என்றாலும், அரசின் அணுகுமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விவகாரத்தில் சர்வதேசத்தை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை அர்த்தப்பாட்டினுடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது.
  • காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் தீர்க்கமாகச் செயல்படுமேயானால், வெளிநாட்டினரின் விமர்சனங்களை இந்திய அரசு பொருட்படுத்த வேண்டியதில்லை. அதற்கு காஷ்மீரிகளுடன் அரசு பேச வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

  • புதிய அரசியல் சூழல் காரணமாக காஷ்மீரிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட அரசியலர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
  • அவர்களுடன் இந்திய அரசு உரையாட வேண்டும். “சுமுக நிலை திரும்பியதும் மீண்டும் மாநிலமாக அறிவிக்கப்படும் காஷ்மீர்” என்று இந்திய அரசு சொன்ன சுமுக நிலையை விரைவில் கொண்டுவர என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அவைதான் காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னுரிமை நடவடிக்கைகள்.
  • ஜம்மு காஷ்மீர், லடாக் இரண்டுமே மாநிலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளூர் மக்கள் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories