TNPSC Thervupettagam

காஷ்மீர், ஹரியாணா தேர்தல்கள்: ஜனநாயகம் தழைக்கட்டும்!

August 20 , 2024 145 days 187 0

காஷ்மீர், ஹரியாணா தேர்தல்கள்: ஜனநாயகம் தழைக்கட்டும்!

  • ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காஷ்மீரில் செப்டம்பர் 30க்குள் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • ஜூன் மாதம் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி விரைவில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் என உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
  • காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாகவும், ஹரியாணாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 4இல் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
  • இரண்டு மாநிலங்களிலும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இருப்பதை ஒரு காரணமாகக் கூறியிருக்கும் தேர்தல் ஆணையம், காஷ்மீர் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காகப் படைகளை அனுப்ப வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
  • ஹரியாணா தேர்தலைப் பொறுத்தவரை விவசாயிகள் போராட்டம், அக்னிவீர் திட்டத்துக்கு எதிர்ப்பு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் உள்ளிட்டவை பேசுபொருளாகக் கருதப்படுகின்றன. மறுபுறம், கடந்த 10 ஆண்டுகளாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்காத காஷ்மீரில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
  • காஷ்மீரில் 2014 தேர்தலுக்குப் பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), பாஜக ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்திவந்த நிலையில், பல்வேறு அரசியல் காரணங்களால் 2018இல் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
  • 2019இல், காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டக்கூறு நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. 2022இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பிராந்தியத்துக்கு ஆறு தொகுதிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. இப்படியான சூழலில், அங்கு நடைபெறும் தேர்தல் முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரியமில்லை.
  • காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் சூழலில் இந்தத் தேர்தல் நடத்தப்படுவது, தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்க்கிறது. ஒருவகையில், காஷ்மீரில் ஜனநாயகம் தழைத்திருப்பதை உலகின் பார்வைக்கு வைப்பதற்கும் இந்தத் தேர்தல் துணைபுரியும். 2024 மக்களவைத் தேர்தலின்போது காஷ்மீரில் அதிக அளவில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
  • காஷ்மீரில், தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டுகிறது. மறுபுறம், காஷ்மீர் மீதான நடவடிக்கைகளால் பாஜக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகப் பேசும் எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதுகின்றன.
  • காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும் (ஜேகேஎன்சிபி), மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி) தாம் அமைப்புரீதியான கட்டமைப்பைக் கொண்டவை. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படாவிட்டால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இரண்டு கட்சிகளும் கூறிவந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர் அக்கட்சிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வருவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன.
  • எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், காஷ்மீர் தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைக் களைய பெரும் முயற்சிகள் எடுத்தாக வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துதல், தொழில் முதலீடுகளைப் பெருக்குதல் எனப் பல கடமைகள் புதிய அரசுக்குக் காத்திருக்கின்றன. இந்தத் தேர்தல் காஷ்மீரின் புதிய வசந்தத்துக்கு வழிவகுக்கட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories