TNPSC Thervupettagam

காஸா – உக்ரைன்: தொழில்நுட்பப் போர்

October 6 , 2024 115 days 172 0

காஸா – உக்ரைன்: தொழில்நுட்பப் போர்

  • ராணுவத் தொழில்நுட்பங்களில் நவீனத்துவம் புகுந்து பெரும் பாய்ச்சலை நிகழ்த்திவருகிறது. இனிவரும் எந்தப் போரிலும் ஒரு ராணுவம் தோற்காமல் இருப்பதற்கே குறைந்தபட்சம் 15 தொழில்நுட்பங்களை அவசியம் கையாண்டாக வேண்டும் என்று நன்கு படித்த என்னுடைய ராணுவ சகா எனக்கு ஒரு தகவல் அனுப்பினார்.
  • ரஷ்யா - உக்ரைன் இடையிலும் காஸா - ஹமாஸ் – ஈரான் - லெபனான் களத்தில் இஸ்ரேல் (அமெரிக்கா) நிகழ்த்திவரும் போர்களும் இதையே உணர்த்துகின்றன. புதிய கால ஆயுதங்களும் போருக்கான தகவல் தொழில்நுட்பமும், தாக்குதலை நடத்தும் புதிய தாக்குதல் முறைகளும் மிகத் திறமையாக அனைத்து தரப்பாலும் கையாளப்படுகின்றன.
  • போர்க்கள உத்திகள் என்றாலே எதிரியைத் தாக்கி அழிப்பதற்கான வெடிகுண்டுகள் - ஆயுதங்கள் உள்ளிட்ட தாக்குதல் திறன், நமது நாட்டையும் படைகளையும் அதிக சேதமின்றி காப்பதற்கான தற்காப்பு உத்திகள், எதிரி நாட்டுக்குள் மின்னல் வேகத்தில் புகுந்து தாக்கி நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவது ஆகியவைதான் இதுவரை முக்கியமாக இருந்தன. எதிரி நாட்டின் பெரும் பரப்பையோ அல்லது பிரதேசங்களையோ கைப்பற்றிய பிறகு அதை மீண்டும் இழந்துவிடாமலிருக்க நம்முடைய படையை அங்கே நிறுத்துவதும் உத்தியில் முக்கிய இடம்பெற்றிருந்தது.
  • நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் எதிரியின் பகுதியைக் கைப்பற்றினால் அதை நம்முடைய படைகளின் கண்காணிப்பில் வைத்து காப்பதில் மாற்றம் இல்லை. ஆனால், நவீன ராணுவத் தொழில்நுட்பங்களும், போரில் அடிப்படையான மூன்று அம்சங்களும் இன்னமும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

துலாம்பரமாகிவிட்ட களம்

  • தாக்கப்பட வேண்டிய எதிரி நாட்டின் நிலப்பரப்பை அங்குலம் அங்குலமாக நோக்கவும் கண்காணிக்கவும் நவீனத் தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன.
  • செயற்கைக் கோள்களில் பொருத்தப்படும் சக்திவாய்ந்த காமிராக்கள், எதிரிகளின் நிலப்பரப்பின் மீது பறந்து அந்த நேரத்தில் எவை, எங்கே இருக்கின்றன என்பதைத் துல்லியமாக தெரிவிக்கும் காட்சிப் பதிவுகளும், விண்ணில் பறந்தபடியே எதிரிநாட்டின் நிலப்பரப்பை அப்படியே காட்டும் வசதி படைத்த நவீன விமானங்களும், எதிரிகளின் குரல் கட்டளைகள், மின்னணு சாதன சமிக்ஞைகள், வரி வடிவிலான உத்தரவுகள் என்று அனைத்தையும் இடைமறிக்கவும் முழுதாக ஈர்க்கவும் உதவும் உளவுநுட்பங்கள் ஆகியவை வந்துவிட்டன; எதிரி நாட்டை நம் நாட்டிலிருந்தே பார்த்துவிடும் அளவுக்கு போர்க்களமானது வெகு தெளிவாகிவிட்டது.
  • பகலில் மட்டுமல்ல இரவிலும் துருப்புகள், வாகனங்கள், தளவாடங்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடிகிறது. அது மட்டுமின்றி எதிரி நாட்டின் ராணுவ இலக்குகளை வெகு துல்லியமாகத் தாக்க உதவும் ஏவுகணைகளும் லேசர் குண்டுகளும், நேராக இலக்கை நோக்கிச்சென்று தாக்குவதற்கான வழிகாட்டல்களுடன் கூடிய ஆயுதங்களும் (பிஜிஎம்), தேவைப்பட்ட இடத்துக்கே கொண்டுசென்று தாக்கவல்ல டிரோன்களும் நவீனப் போர்களில் அம்சங்களாகிவிட்டன.

தடையாக இருப்பவை

  • இந்த நவீனத் தொழில்நுட்பங்களைப் பெறுவதற்குத் தடையாக இருப்பவை நாட்டின் நிதி வளங்களும், நகரும் அல்லது நிலையான ராணுவ இலக்குகளை வேகமாக நகர்ந்து சென்று துல்லியமாகத் தாக்கும் இயக்கம் சார்ந்த ஆயுதங்களின் பற்றாக்குறைகள்தான். இந்த இரண்டையும்கூட மாற்று வழியில் சமாளித்துவிடலாம். விலை குறைவான டிரோன்களையும், எதிரி நாட்டுகள் மிக நீண்ட தொலைவு ஊடுருவி தாக்கவல்ல ஆயுதங்களையும் பயன்படுத்தி செலவுகளையும் சேதத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.

தற்காப்பில் பழைய முறை

  • நவீனத் தொழில்நுட்பங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டாலும் மக்களையும் ராணுவ வீரர்களையும் எதிரிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற, முதலாவது உலகப் போரில் கையாளப்பட்ட நீண்ட பதுங்கு குழிகளும், குழாய்ப் பாதை போன்ற (டன்னல்) தற்காப்பு அரண்களும்தான் இப்போது கைகொடுக்கின்றன. ரஷ்யா – உக்ரைனிலும், இஸ்ரேல் – காஸா - லெபனான் போர்க்கள காட்சிகளிலும் இவற்றைக் காண முடியும்.
  • எதிரிகளின் கட்டளைத் தொகுதிகளை மின்னணு சாதனங்கள் மூலமும் வழக்கமான ஜாமர் கருவிகளின் மூலமும் செயலற்றுப்போகச் செய்கின்றனர். இதற்கு சைபர் தொழில்நுட்பம் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. எதிரிகள் தங்களுடைய பீரங்கிப் படைப்பிரிவுக்கும் ஏவுகணைப் பிரிவு தளபதிகளுக்கும் விமானப் படைகளுக்கும் தரும் கட்டளைகளைத் தடுக்கவும், குழப்பவும்கூட இடைமறிப்பு உத்திகள் வெற்றிகரமாகக் கையாளப்படுகின்றன.
  • எதிரி நாட்டின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தற்காப்பு உத்திகளும், வெடிகுண்டுகள், கவசவாகனங்கள், ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களும் பெரிதும் கைகொடுக்கின்றன. டிரோன்கள் ராணுவ சாதனங்களாக மட்டுமல்ல - ஆயுதங்களாகவே பயன்படுகின்றன. இதனால், தாக்குபவரைவிட தற்காத்துக்கொள்கிறவரால் வலுவாகச் செயல்பட முடிகிறது. எதிரியின் நில எல்லையைப் பிடிக்க, போரைத் தொடுத்தவர் வெளிப்பட்டு சண்டை செய்ய நேர்கிறது.
  • எதிரி நாட்டின் தற்காப்பு ஏற்பாடுகளிலும் தாக்கும் திறனிலும் 70% முதல் 80% வரை நாசப்படுத்தப்பட்டால்தான், முதலில் தாக்குதல் தொடுத்தவரால் எதிரி நாட்டின் எல்லைக்குள் சென்று அவருடைய பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியும். ஆனால், இப்படி நேரில் துருப்புகளுடன் சென்று தாக்குவதில் அதிக ஆள் சேதங்களையும் ஆயுத சேதங்களையும் எதிர்கொள்ள நேர்கிறது. அதனால்தான் உக்ரைனில் நீண்ட காலமாகவும், காஸாவில் மிகத் தீவிரமாகவும் தாக்குதல்கள் நடந்தாலும் பெரிய அளவில் நிலப்பரப்புகள் கைப்பற்றப்படவில்லை.
  • இரண்டாவது உலகப் போரில் ஆயுதங்களும் ஆள் பலமும் இருந்த ராணுவங்கள் எதிரி நாட்டைத் தாக்கியதுடன் நிலப் பகுதிகளையும் வேகமாகக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது.

பதிலுக்கு பதில்

  • இப்போதைய தொழில்நுட்பப் போர் முறையில் இரு தரப்புக்குமே சாதகங்களும் இருக்கின்றன. எதிரியின் பலத்தை உளவுபார்க்கவும், படைகளை எங்கு அனுப்பலாம் என்று துல்லியமாகத் தெரிந்துகொள்ளவும், எதிரி உள்ளே வந்துவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கவும் முடிகிறது. மின்னணு போர்முறை, சைபர் போர்முறை, டிரோன்கள், வானில் பறந்து தாக்கக்கூடியவை ஆகியவற்றுக்கு எதிராக ஆங்காங்கே பாதுகாப்பு அரண்களையும், இடங்களையும் உருவாக்கிக்கொள்ளவும் இப்போது வழியிருக்கிறது.
  • குர்ஸ்க் என்ற பிரதேசத்தில் ரஷ்ய ராணுவத்தைத் தாக்கி வெற்றிபெற்றுவிட்டதாக உக்ரைன் அறிவித்தது, ஆனால் அதற்குப் பிறகு அதைப் பற்றிய செய்திகள் அதிகமில்லை. இவ்வாறு எதிராளியின் இடத்தைக் கைப்பற்றுவதும் அதைத் தொடர்ந்து தக்கவைப்பதும் மிகப் பெரிய சவாலானதாகவும் அதிகம் செலவு வைக்கக்கூடியதாகவும் மாறிவிட்டது. அது மட்டுமல்ல ஆள் சேதமும் திடீரென அதிகரித்துவிடுகிறது.
  • சுருக்கமாகச் சொல்வதென்றால், ஆயிரக்கணக்கான துருப்புகளை இறக்கி நிலப் பகுதியைப் பிடித்து வெற்றிக்கொடி நாட்டிய அந்தக் கால போர் முறைக்கும் இப்போது நடைபெறும் நவீனத் தொழில்நுட்பப் போர் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நோக்கமும் உத்தியும் ஒன்றாக இருந்தாலும் வழிமுறைகளும் மாறுகிற கள நிலைமைகளும் புதிய சவால்களாக இருக்கின்றன.
  • பயன்படுத்தும் சாதனங்களும் ஆயுதங்களும் நிறைய செலவு வைப்பதாகவும் இருக்கின்றன. மிகப் பெரிய படை, மிகப் பெரிய ஒருங்கிணைப்பு, ஒரே சமயத்தில் முப்படைகளும் சேர்ந்து தாக்குவது என்ற காலம் மலையேறிவிட்டது. ஆங்காங்கே சிறு குழுக்கள் திடீரென தாக்கி பெருமளவு சேதம் அல்லது செயலிழப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மலிவு விலை ஆயுதங்கள்

  • மிகவும் செலவு பிடிக்கும் நவீனரகத் தொழில்நுட்பங்கள், சாதனங்களைப் போலவே மலிவு விலையில் அதே வேலையைச் செய்யக்கூடிய சாதனங்களும் கிடைக்கின்றன.
  • ராணுவ டாங்குகள், காலாட்படையினர் பயன்படுத்தும் கள வாகனங்கள், பீரங்கிகள், விமான குண்டு வீச்சுகளிலிருந்து தற்காக்கும் படைப்பிரிவுகள், களத்துக்கு சாதனங்களையும் ஆயுதங்களையும் கொண்டுசென்று சேர்ப்பதுடன் எதிரிப்படைகள் மீது தாக்குதல் நடத்தவும் உதவும் ஹெலிகாப்டர்கள், எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் போர்படை விமானங்கள், விமானந்தாங்கி கப்பல்கள், நீர் மூழ்கிகள் என்று எல்லாவற்றுக்கும் இப்போது அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. ராணுவக் கொள்முதலால் திவாலாகிவிடும் நிலையில் பல நாடுகள் இருக்கின்றன.
  • பெரிய பணக்கார நாடுகள்கூட ராணுவத்துக்குத் தேவைப்படும் அனைத்து ஆயுதங்களையும் அனைத்து சாதனங்களையும் போதிய அளவு தயாரித்தோ வாங்கியோ கையிருப்பில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. உக்ரைன் போரே இதற்கு நல்ல உதாரணம்.

ஏகபோக முற்றுரிமை

  • செல்வமும் செல்வாக்கும் மிக்க பணக்கார நாடுகள் ஒரு காலத்தில் உயர் ராணுவத் தொழில்நுட்பங்களில் ஏகபோக உரிமை பெற்றவையாக இருந்தன. நவீன விமானம், போர்க் கப்பல், டாங்குகள், பீரங்கிகள் ஆகியவற்றை ஒரு சில நாடுகள்தான் தயாரித்தன, விற்றன. எனவே, வலுவற்ற நாடுகள் அவற்றிடம் விலைக்கு வாங்கின, அல்லது அந்த நாடுகளுக்கு அடங்கி நடந்து தங்களை தற்காத்துக்கொண்டன. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் எந்தத் தொழில்நுட்பமும் மக்களுக்குப் பயன்படும் இரட்டைப் பயன்களையும் கொண்டவை.
  • மக்களுடைய பயன்பாட்டுக்காக தயாரிக்கும்போது எளிமையாகவும் ஓன்றிரண்டு நோக்கங்களுக்காக மட்டும் தயாரித்தால் போதும். எனவே, அதிக எண்ணிக்கையில் தயாரித்து பயன்படுத்தும்போது அதன் உற்பத்திச் செலவும் விலையும்கூட மலிவாகிவிடுகின்றன. அப்படித்தான் ராணுவ நோக்கங்களுக்குப் பயன்படுத்தும் டிரோன்களை சிவிலியன் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கும்போது எடை குறைவாகவும், அதிக செலவில்லாமலும் சாதாரண உலோக – அலோக கலப்புகளாலும் தயாரித்துவிட முடிகிறது.
  • புகைப்படம் எடுக்க, பூச்சி மருந்து தெளிக்க, பொருள்களைக் குறிப்பிட்ட இடங்களில் கொண்டுபோய் சேர்க்க, ஒரு நிலப்பரப்பை சர்வே செய்ய என்றெல்லாம் சிவிலியன் பயன்பாட்டுக்கு டிரோன்களைக் கொண்டுவந்துவிட்டார்கள். இப்படி விலை மலிவாக உள்ள டிரோன்களை அதிக எண்ணிக்கையில் ராணுவ நோக்கத்துக்கும் இப்போது பயன்படுத்தி வெற்றி அடைந்துவருகின்றனர். செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனிதப் பயன்பாடு ஆகியவற்றுடன் சாமானிய மக்களே இயக்கி இலக்கை அடையும் அளவுக்கு மலிவு விலை டிரோன்கள் பெருகிவிட்டன.

திமோஃபி ஓரல்

  • உக்ரைனில் ‘எஃப்பிவி’ ரக மலிவு டிரோன்களைத்தான் முன்கள ராணுவ வீரர்கள் பயன்படுத்தினர். திமோஃபி ஓரல் என்ற உக்ரைனிய ராணுவ வீரர் ஒருவர் மட்டுமே இந்த டிரோன்களைப் பயன்படுத்தி 2024 ஜனவரி முதல் மே வரையில் 434 எதிரிகளை (ரஷ்யர்களை) கொன்றார், 346 பேரைக் காயப்படுத்தினார், 42 டாங்குகளை அழித்தார், 44 பிஎம்பிக்களை நாசமாக்கினார், 10 லேசுரக கவச வாகனங்களை துவம்சம் செய்தார், 28 பிடிஆர்களை அழித்தார்.
  • உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் நீண்ட தொலைவு பறந்து செல்லக்கூடிய டிரோன்கள்கூட மிக மலிவாகத்தான் தயாரிக்கப்படுகின்றன. கருங்கடலின் மேற்குப் பகுதியிலிருந்து ரஷ்யா தனது கடற்படையை முற்றாக விலக்கிக்கொள்ள இந்த டிரோன்கள்தான் காரணம் அது மட்டுமல்ல, உக்ரைனின் டிரோன்கள் மாஸ்கோ வரை - 1,700 கிலோ மீட்டர் - பறந்து சென்று தாக்கியுள்ளன.
  • லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பெரிய ராணுவ சாதனத்தை அதன் விலையில் மிகச் சிறு அளவு மதிப்பு மட்டுமே உள்ள டிரோன்கள் தாக்கி அழித்துவிடுகின்றன. ஒரு கோடி டாலர் மதிப்புள்ள பெரிய ராணுவ டாங்கை, 500 டாலர் மதிப்புள்ள டிரோன் அழிக்கிறது. 20 லட்சம் டாலர் மதிப்புள்ள ஏவுகணையை 2,000 டாலர் மதிப்புள்ள டிரோன் நிர்மூலம் செய்கிறது. எனவே, அடுத்த இருபதாண்டுகளில் விலை அதிகமுள்ள சாதனங்கள், விலை குறைந்த சாதனங்கள் இரண்டையும் ராணுவப் பயன்பாட்டில் அதிகம் காணப்போகிறோம்.

இனி போர் செய்வது எப்படி?

  • இனி போர்க்கள நிலவரம் என்ன என்பதை ஒவ்வொரு நாட்டு ராணுவமும் தன்னுடைய மூத்த தளபதிகள் நிலையில் தொடங்கி, களத்தில் இருக்கும் கடைசி ராணுவ வீரர் வரை எதையும் மறைக்காமல் சொல்லித்தான் போரை நடத்த வேண்டும். அப்படி இல்லாமல் மறைத்தால், ஒரு தரப்பு கடும் சேதம் அடைய நேரும்.
  • விலை அதிகமான செயற்கைக்கோள்கள், மின்னணு - சைபர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அதேவேளையில் மலிவு விலை டிரோன்களை ஆயிரக்கணக்கில் பயன்படுத்தியாக வேண்டும். அதில் காட்சிகளைப் படம்பிடிக்கும் காமிராக்களுடன் எதிரிகளின் சாதனங்களைச் செயலற்றுபோகச் செய்யும் மின்னணு சாதனங்களையும் பொருத்த வேண்டும். பிஜிஎம்களை அதிகம் பயன்படுத்தும் பிரிவுக்குச் சாதகங்கள் அதிகம். உக்ரைனும் ஹமாஸ் இயக்கமும் இதைக் கையாண்டுள்ளன.
  • இப்போது பயன்பாட்டில் இருக்கும் தகவல்தொடர்பு சாதனங்களும் ஆயுதங்களும் மின்னணு – சைபர் தொழில்நுட்ப சமிக்ஞைகளை அதிகம் வெளிப்படுத்துகின்றன. இதுவே அவற்றுக்குப் பெரிய கேடை விளைவித்துவிடும். ஹெஸபொல்லா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருந்தே அதன் தலைமை இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டே இஸ்ரேல், துல்லியமாக பதில் தாக்குதல் நடத்தி அதன் தளபதிகளை ஒருவர் பின் ஒருவராகக் கொன்றதுடன் தலைமையகத்தையே 10 நாள்களுக்குள் நாசப்படுத்தியது.
  • எல்லைகளில் நிரந்தரமாக எதிரெதிர் நாடுகளின் துருப்புகள் நிறுத்தப்படும் நிலையில், சாலை மார்க்கமாகவோ ஆகாய மார்க்கமாகவோ படைகளையும் ஆயுதங்களையும் இனி அனுப்பக் கூடாது. அவற்றையெல்லாம் சுரங்கப்பாதை போன்ற தரைக்கடி சாலை வழிகளில் கொண்டுசெல்ல வேண்டும்.

சீர்திருத்துங்கள் அல்லது…

  • உக்ரைன் - ரஷ்யா போரும், இஸ்ரேல் - எதிரி நாடுகளுக்கு இடையிலான போரும் இப்போதுள்ள நவீன ராணுவத் தொழில்நுட்பங்கள் எப்படிப்பட்டவை என்பதை காட்சி விளக்கமாகவே காட்டிக்கொண்டிருக்கின்றன. மிகப் பெரிய ராணுவ நாடான ரஷ்யா மேற்கொண்டு தனக்குச் சேதத்தை ஏற்படுத்த முடியாமலும் கைப்பற்றாமலும் தடுத்துக்கொண்டிருக்கிறது உக்ரைன். புதிய தொழில்நுட்பங்களை ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஈரான் ஆகியவையும் கையாள்கின்றன. அவற்றையெல்லாம்விட நவீனமான தொழில்நுட்பம் காரணமாக இஸ்ரேல் அவற்றைச் சமாளித்துக்கொண்டிருக்கிறது.
  • இந்திய ராணுவமும் இந்த போர்க்களக் காட்சிகளைப் பார்த்து சில பாடங்களைக் கற்றிருக்கும் என்று நம்புகிறேன். இந்திய ராணுவம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் கையாண்ட உத்திகளையும் கருவிகளையும் ஆயுதங்களையும் திறம்பட கையாளும் பயிற்சியை மட்டுமே பெற்றிருக்கிறது. முப்படைகளிலும் ஆங்காங்கே சில நவீனத் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலும் அவை முழு அளவு மாற்றத்துக்கு உதவுபவை அல்ல.
  • இந்திய ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைந்துகொண்டேவருகிறது. தேசிய பாதுகாப்பு உத்திக்கும் தேசிய ராணுவக் கொள்கைக்கும் அரசு முன்னுரிமை தர வேண்டும். சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் உத்தியை 2015இல் தொடங்கியது, 2035இல் முடிக்கப்போகிறது. கடந்த பத்தாண்டுகளில் நாம் இதில் ஒரு அடிகூட முன்னேறவில்லை என்பது வருத்தம் தருகிறது. விலை அதிகமுள்ள தொழில்நுட்பங்களைப் போலவே, விலை மலிவான நுட்பங்களும் இருப்பது இந்தியாவுக்குச் சாதகம். அடுத்த பத்தாண்டுகளில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

நன்றி: அருஞ்சொல் (06 – 10 – 2024)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top