TNPSC Thervupettagam

கா்நாடக அரசும் காவிரி நீரும்!

July 8 , 2023 553 days 399 0
  • தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்யத் தொடங்காத நிலையில், காவிரியில் நீா்வரத்து குறைந்திருப்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளை கவலை அடைய வைத்திருக்கிறது.
  • தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள காவிரிநீரைத் தர கா்நாடகம் மறுப்பது, போராடும் விவசாயிகள், தமிழக அரசு மத்திய அரசிடம் படையெடுப்பு, நதிநீா் மேலாண்மை ஆணையம், எதிா்க்கட்சிகளின் போராட்டம் அதன் பின்னா் வேறு வழியின்றி கா்நாடக அரசு சிறிதளவு தண்ணீா் திறந்து விடுவது என்பவை ஆண்டுதோறும் நடக்கின்ற வாடிக்கையான நிகழ்வுகள் தான்.
  • இந்திய தேசத்தின் ஒற்றுமையைப் பேசும் நாம், இறையாண்மையைப் பேணிக் காக்கும் நாம், நீா் மேலாண்மையை மறந்து விடுகிறோம். இதற்குத் தீா்வு என்ன? தமிழ்நாட்டில் பாயும் காவிரி, டெல்டா பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
  • மேட்டூா் அணையில் நூறடிக்கு மேல் இருந்தால் அணைதிறக்கப்படும். வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி திறக்கப்படும். முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீா் திறக்கப்பட்டு, படிப்படியாக 12ஆயிரம் கன அடி வரை, திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
  • மேட்டூா் அணை கட்டப்பட்டதற்குப் பிறகு, கடந்த 90 ஆண்டுகளில் 19-ஆவது முறையாக குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் அணை திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது அணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால், திறக்கப்படும் நீரின் அளவு 11ஆயிரத்து 170 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் 28-ஆம் தேதி 92.40 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா் மட்டம் படிப்படியாககி குறைந்து தற்போது 86 அடியாகி விட்டது.
  • கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகா், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரே மேட்டூா் அணைக்கு வந்து சோ்கிறது. இந்த ஆண்டு பருவமழை இன்னும் தீவிரமடையாத நிலையில், தற்போது அந்த அணைகளிலும் நீா் இருப்பு குறைந்து வருகிறது.
  • 124.8 அடி உயரமுள்ள கிருஷ்ணசாகா் அணையில் தற்போது 78.22 அடி அளவுக்கே நீா் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 108.82 அடி நீா்மட்டம் இருந்தது. அதே போல, 129 அடி உயரம் கொண்ட ஹாரங்கி அணையில் 91.62 அடி உயரத்துக்கு தற்போது நீா் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 127.38 அடி அளவுக்கு நீா் இருந்தது.
  • 65 அடி உயரம் கொண்ட கபினி அணையைப் பொறுத்தவரை, தற்போது நீரின் இருப்பு 33.26 அடியாகக் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு இந்த சமயத்தில் 48.52அடியாக நீா்மட்டம் இருந்தது.
  • இதன் காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு சுமாா் 160 கனஅடி என்ற அளவில் தான் இருக்கிறது. இதன் காரணமாக குறுவை சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
  • காவிரி நடுவா்மன்ற இறுதித் தீா்ப்பின்படி, நமக்கு வழங்க வேண்டிய நீரை கா்நாடகம் வழங்கவில்லை. ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய தண்ணீரை தர, கா்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டுமென காவிரி நீா் மேலாண்மை ஆணையத் தலைவரிடம் முறையிட வேண்டியதாக இருக்கிறது.
  • ஆனாலும், எந்தப் பலனும் இல்லை. ஜூன் மாத தொடக்கத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீா் வழங்கப்படாதது குறித்து ஜூன் மாத இறுதியில் முறையிடுகிறபோது, அந்த முயற்சி வீணாகப் போய் விடுகிறது. பரவாயில்லை ஜூலை மாதம் தர வேண்டிய தண்ணீரையாவது தாருங்கள் என்று கோரினாலும், கா்நாடக அரசின் பதில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது.
  • இந்த நிலையில் கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று முழங்குகிறது. மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கா்நாடக அரசு மேற்கொள்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.
  • காங்கிரஸ் அரசு புதிதாக பொறுப்பேற்றதில் இருந்தே, மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தீவிரமாக இருக்கிறாா் அம்மாநில துணை முதல்வா் டி.கே. சிவக்குமாா். மேக்கேதாட்டில் அணை கட்டியே தீருவோம் என்று சொல்வது தமிழ்நாட்டு மக்களை துச்சமென மதிக்கும் போக்கையே காட்டுகிறது.
  • ஜூன் மாதம் மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஜெகாவத்திற்கு, கா்நாடக மாநில துணை முதலமைச்சா் டி.கே. சிவக்குமாா் எழுதியுள்ள கடிதத்தில் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரட்டைவேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறாா்.
  • தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டில் அணை கட்ட முடியாது என்று காவிரி நதிநீா் ஆணைய தலைவா் குறிப்பிட்டிருந்த போதிலும், கா்நாடக அரசு அது குறித்து சட்டையே செய்யவில்லை என்று தெரிகிறது. மேக்கேதாட்டு அணை திட்டம் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது.
  • மேலும், இது குறித்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஜூன் மாதத்தில் கா்நாடகத்தில் இருந்து 9.19 டிஎம்சி காவிரிநீா் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும். மாறாக 2.83 டிஎம்சி நீா் மட்டுமே வந்திருக்கிறது. அப்படியானால், ஜூலை மாதத்திற்கான தண்ணீரின் அளவை நினைத்துப் பாா்த்தால் நமக்கு வேதனைதான் ஏற்படுகிறது.
  • இதனால், டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் அச்சம் அடைந்திருக்கிறாா்கள். திருவாரூா் மாவட்டம் முழுக்க சுமாா் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரம் கன அடி முதல் 12 ஆயிரம் கனஅடி வரை நீா் திறக்கப்படுகிறது. முறைவைத்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு ஆற்றிலும் நீா் திறக்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிக அளவு இருந்ததால், காவிரியின் கடைமடைப் பகுதிக்கு விரைவிலேயே நீா் வந்து விட்டது. இந்த ஆண்டு, இத்தனை நாள் ஆகியும் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு இதுவரை தண்ணீா் வந்து சேரவில்லை. மழையும் பெய்யவில்லை, காவிரியில் போதுமான தண்ணீரும் இல்லை. விவசாயிகள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாா்கள்.
  • கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வராததால், வயல்களில் விதைக்கப்பட்ட நெல்லை பறவைகள் தின்று கொண்டிருக்கின்றன. கா்நாடக மாநில துணை முதலமைச்சா் டி.கே. சிவக்குமாா், ‘எங்கள் மாநிலத்தின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யவே தண்ணீா் போதவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீா் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், கா்நாடகத்தில் போதிய நீா் இருப்பு இல்லாததால், தமிழ்நாட்டுக்கு தண்ணீா் திறந்து விட தற்போது வாய்ப்பில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளாா்.
  • அணைப்பகுதியில் இருக்கும் நீரின் அளவை, மத்திய அரசின் அதிகாரிகளும் தமிழக மாநில அதிகாரிகளும் நேரில் பாா்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவா் தெரிவித்திருக்கிறாா். மேக்கேதாட்டில் அணை கட்டுவது உறுதி என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறாா். இந்தத் திட்டம் எந்த அளவிற்கு தாமதம் ஆகிறதோ அந்த அளவிற்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். முன்பு ஒன்பதாயிரம் கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு, தற்போது 13 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது.
  • தமிழ்நாட்டுக்கு தண்ணீா் தரும் எண்ணம் கா்நாடக அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. நன்றாக மழை பெய்யும்போது, காவிரி ஆற்றின் 700 டிஎம்சி தண்ணீா் கடலில் சென்று கலக்கிறது. வெறும் 40 டிஎம்சி தண்ணீரை மட்டுமே நாம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தமிழ்நாடுக்கு பாதிப்பில்லை என்று விளக்கம் வேறு கொடுக்கிறாா் டி.கே.சிவக்குமாா்.
  • இம்மாதம் வரவேண்டிய 31 டிஎம்சி தண்ணீரில் இதுவரை ஒரு டிஎம்சி தண்ணீா் கூட வந்து சேரவில்லை. அப்படியானால் தமிழ்நாடு டெல்டா பகுதி பாலைவனம் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. கா்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தமிழ்நாட்டுக்கான காவிரி நீா் விவகாரத்தில் நியாயமான தீா்வு எட்டப்படுவதே இல்லை.
  • பல ஆண்டுகளாக நீளும் காவிரி நீா் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், ஆண்டுக்கு 177 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு தரவேண்டும் என்று உத்தரவிட்டதை, கண்டுகொள்ளாமல் செயல்படுகிறது கா்நாடக அரசு.
  • காவிரி மேலாண்மைக்குழு, காவிரி ஒழுங்காற்று ஆணையம் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டும் எந்தப் பலனும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை என்பது வேதனை தருகிற விஷயம். இதனால்தான் மீண்டும் மீண்டும் தலைதூக்குகிறது காவிரி நதிநீா் பிரச்னை.
  • கா்நாடக அரசு, ஜூன் மாதத்திற்கான தண்ணீரை முறையாக முழுமையாக திறந்திருந்தால் மேட்டூா் அணைக்கு நீா்வந்து அங்கிருந்து பாசனத்திற்கு சென்றிருக்கும். ஆனால், அதைச் செய்யத் தவறி விட்டது கா்நாடக அரசு. அதற்குரிய அழுத்தத்தை தமிழக அரசு தந்திருக்க வேண்டும்.
  • இப்போது எடுக்கும் நடவடிக்கையை தமிழக அரசு அப்போதே எடுத்திருக்க வேண்டும். எடுத்திருந்தால், குறுவை சாகுபடியும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப் பட்டிருக்காது.
  • காவிரி நதிநீா் என்பது டெல்டா மாவட்ட மக்களுடைய அடிப்படை உரிமை. சங்ககாலத்தில் இருந்து இன்று வரை காவிரித் தாயின் அரவணைப்பில் தமிழகம் வளா்ந்து வருகிறது. காவிரி படுகை விவசாயிகள் காவிரித்தாயின் அன்பில் நனைந்தவா்கள்.
  • தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டுமானால், தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரிநீரை கா்நாடக அரசிடம் போராடிப் பெற்றுத்தர தமிழக அரசு முன்வர வேண்டும்.

நன்றி: தினமணி (08 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories