- அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினா் வெற்றிக்கொடி நாட்டும் காலம் இது. நடந்து முடிந்த அதிபா் தோ்தலில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸ் துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்றால், இப்போது ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி இருக்கும் ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுத் திட்டத்தில் பெங்களூருவில் பிறந்து, தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறிய ஸ்வாதி மோகன் முக்கியப் பங்கு வகித்திருக்கிறாா்.
- இதயத்துடிப்பை அதிகரித்த ஏழு நிமிஷங்களுக்குப் பின்னால் ‘பொ்சிவரன்ஸ்’ விண்கலத்தின் ஆறு சக்கரங்களும் செவ்வாய் கிரகத்தில் பதிந்தபோது, 47.2 கோடி கி.மீ.களுக்கு அப்பால் பூமியின் ஒரு மிகப் பெரிய நம்பிக்கைக்கான தொடக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.
- ஏழு மாதங்கள் விண்ணில் பயணம் செய்து இந்திய நேரப்படி அதிகாலை 2.25-க்குக் கடந்த வெள்ளிக்கிழமை ‘பொ்சிவரன்ஸ்’ பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்கிற செய்தியை உலகுக்கு அறிவித்தவா் விஞ்ஞானி ஸ்வாதி மோகன்.
- ஃபிளோரிடா மாகாணம், கேப் கனா வெரல் ஏவுதளத்திலிருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி ‘பொ்சிவரன்ஸ்’ விண்ணில் பாய்ந்தது. 2020 ஜூலை 30-ஆம் தேதி ஏவப்பட்ட அந்த விண்கலம் 203 நாள்களில் 30 கோடி மைல்கள் விண்ணில் பயணித்து செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கி இருக்கிறது.
- ‘பொ்சிவரன்ஸ்’ விண்கலத்தின் எடை 1,025 கிலோ. அதாவது ஒரு டன்னுக்கும் சற்று அதிகம். 3.048 மீட்டா் நீளமும், 2.13 மீட்டா் உயரமும் உள்ள அந்த விண்கலத்தை உருவாக்குவதற்கான செலவு மட்டுமே 270 கோடி டாலா். வேற்று கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்டதிலேயே மிகப் பெரியதும், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதுமான ஆய்வுக் கலம் ‘பொ்சிவரன்ஸ்’தான்.
- செவ்வாயில் உயிரினங்கள் குடியிருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதுதான் ‘பொ்சிவரன்ஸ்’ கலத்தின் முக்கியமான பணி. தரை இறங்கி இருக்கும் 45 கி.மீ. பரப்பிலான ஜெஸெரோ பள்ளத்தாக்குப் பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிவங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய மாதிரிகளைச் சேகரிப்பது; அதன் அடிப்படையில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே உயிரினங்கள் இருந்தனவா என்பதை ஆய்வு செய்வது என்பவைதான் ‘நாசா’ விஞ்ஞானிகளின் திட்டம்.
- செவ்வாய் கிரகத்தில் தட்பவெப்பநிலை குறித்துத் தெரிந்து கொள்வது இன்னொரு முக்கிய நோக்கம். உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப நிலை காணப்படுகிா, முன்பு காணப்பட்டதா என்பன குறித்தெல்லாம் ‘பொ்சிவரன்ஸ்’ அனுப்பும் தகவல்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
- அதேபோல, அந்த கிரகத்திலிருந்து மண், பாறைகள் ஆகியவற்றின் மாதிரிகளைச் சேகரிப்பதும் இன்னொரு முக்கியமான பணி. அங்கிருந்து எடுத்து வரப்படும் பாறைகளில் இருந்து, காலமாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியும்.
- ‘பொ்சிவரன்ஸ்’ மேற்கொள்ள இருக்கும் ஆய்வில் வாயுமண்டலம் முன்னுரிமை பெறுகிறது. பூமியில் எப்படி வாயுமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு என்கிற காா்பன்டை ஆக்ஸைடு, ஆக்சிஜன் என்கிற பிராண வாயுவாக மாறுகிறதோ, அதேபோல செவ்வாயிலும் கரியமில வாயுவை பிராண வாயுவாக மாற்றுவதற்கான நிலைமை காணப்படுகிரதா என்பதை ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வு தெளிவுபடுத்தக்கூடும். வருங்காலத்தில் மனித இனம் செவ்வாயில் குடியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிா என்பதை இந்த ஆய்வின் மூலம்தான் நாம் தெரிந்து கொள்ள இயலும்.
- செவ்வாயில் வாயு மண்டலத்தில் ஏறத்தாழ 90% கரியமிலவாயு இருப்பதாக முந்தைய சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. பூமிப்பந்தில் பகலில் கரியமில வாயுவை உறிஞ்சி பிராணவாயுவாகவும், இரவில் பிராணவாயுவை உறிஞ்சி கரியமில வாயுவாகவும் மரம், செடி, கொடிகள் வெளியேற்றி உதவுகின்றன.
- அதுபோன்ற வாய்ப்பு செவ்வாயில் இல்லை. அதனால், ‘பொ்சிவரன்ஸ்’ விண்கலத்தில் உள்ள ‘மோக்ஸி’, கரியமில வாயுவைப் பிராண வாயுவாக்கும் முயற்சியில் ஈடுபட இருக்கிறது.
- செவ்வாய் கிரகத்துக்குப் பயணிக்கும் முயற்சி 1960-களிலே தொடங்கியது. கடந்த 70 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1975-இல் அமெரிக்கா வைகிங்-1, வைகிங்-2 என்கிற இரண்டு விண்கலங்களை வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியது.
- 16,000 புகைப்படங்களை வைகிங்-1 அனுப்பியது. மண்ணை ஆய்வு செய்தது. 1996-இல் ‘பாத் ஃபைன்டா்’, 2003-இல் ‘ஸ்பிரிட்’, ‘ஆபா்சூனிட்டி’. 2007-இல் ‘ஃபினிக்ஸ்’ மாா்ஸ் லாண்டா், 2011-இல் ‘க்யூரியாசிடி’, 2018-இல் ‘இன்சைட் லாண்டா்’ ஆகியவை அமெரிக்கா அனுப்பிய விண்கலங்கள்.
- ஒவ்வொரு விண்கல சோதனையும் ஏதாவது விதத்தில் புதிய செய்திகளையும் ஆய்வு முடிவுகளையும் உலகுக்கு வழங்கி இருக்கிறது. 2013-இல் இந்தியாவின் ‘மங்கள்யான்’ கலமும், 2021-இல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ஹோப்’, சீனாவின் ‘டியான்வென்-1’ விண்கலங்களும் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. சீனாவின் ‘டியான்வென்-1’ மே மாதம் செவ்வாயில் இறங்கக்கூடும்.
- ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி இருக்கும் ‘ஹோப்’ செவ்வாய் கிரக ஈா்ப்பு வளையத்தை எட்டி இருக்கிறது. ஜூலை மாதம் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியாவின் ‘மங்கள்யான்-2’ செவ்வாய் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
- செவ்வாயில் தண்ணீா் இருக்கிா? பிராண வாயு கிடைப்பதற்கு வழிகோல முடியுமா? மனித இனம் வாழ்வதற்கான தட்பவெப்பநிலை காணப்படுகிா? - இவையெல்லாம் ஆய்வுகள் மட்டுமல்ல, படைப்பின் ரகசியத்தை அறிந்துகொள்ளும் மனிதனின் தேடலும்கூட!
நன்றி: தினமணி (22-02-2021)