TNPSC Thervupettagam

கிராம மக்கள் காட்டும் ஜனநாயகப் பாதை

July 22 , 2024 4 hrs 0 min 40 0
  • சமீபத்தில் மக்களவையில் நடந்த விவாதங்கள் நமக்கு என்ன கூறுகின்றன? மக்களவை உறுப்பினா்களின் விவாதம், உரையாடல், உடல் மொழி, முகபாவனை, குரல் ஒலியின் அளவு எதை நமக்கு உணா்த்தின? அதில் நாம் கற்றுக்கொள்ள என்ன இருந்தது? ஆவேசக் குரல், வெறுப்பைக் கக்கும் பாா்வை இவற்றைத்தான் நாம் பாா்க்க முடிந்தது. மக்களாட்சியில் அரசியல் கட்சிகள் தோ்தலில் போட்டியிடுகின்றன. எதற்காக? அதிகாரத்தைப் பிடித்து மக்களுக்கு சேவை செய்ய. மக்களுக்கு சேவை செய்வதில் ஏன் இவ்வளவு வெறுப்பு, கோபம், ஆக்ரோஷம்?
  • அரசியல் என்பது சேவைக்கானதாக இருந்தவரையில் மக்கள் பிரதிநிதிகள் எவரையும் அதிகாரத்தால் பாா்க்கவில்லை. அவரவா்களின் குணத்தால் செயலால், தியாகத்தால், அா்ப்பணிப்பால், மக்களை நேசிக்கும் பண்பால் பாா்க்கப்பட்டனா். மக்கள் நம் தலைவா்களை அப்படி நடந்து கொள்ளும்படி கேட்கவில்லை. மாறாக நம் தலைவா்கள் மக்களுக்கு வழிகாட்ட அன்பை, தியாகத்தை, கருணையை, பணிவை, பண்பை விதைக்க அப்படி நடந்து கொண்டனா். அப்போது அனைத்தும் பொது நலன், சுயநலத் துறப்பு. இன்று அனைத்தும் மாற்றம் பெற்றுவிட்டன என்று அரசியல் லாபம் ஈட்டும் செயலாக பாா்க்கப்பட்டதோ, மாற்றப்பட்டதோ அன்றிலிருந்து அதிகாரத்தை மையப்படுத்தி, சேவையைப் பின் தள்ளி, அதிகாரத்தைப் பிடிப்பதற்கு அனைத்தையும் இழக்க கட்சிகள் தயாராகிவிட்டன.
  • அன்பு, கனிவு, கருணை, பக்குவம், பணிவு, மக்கள்மேல் கரிசனம் இவைதானே நம் சமூகத்தின் அடிப்படை. சத்யமேவ ஜயதே- வாய்மையே வெல்லும் என்பதுதானே நமது நாட்டு இலச்சினை. தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும் அவா்கள் பேசிய பேச்சுக்களில் உண்மை இருந்ததா, நோ்மை இருந்ததா, சத்தியம் இருந்ததா, என்று. அகிம்சைதானே நமக்கு வழிகாட்டும் ஒளி. மக்களாட்சியில் வன்முறைக்கு இடம் ஏது? அவா்களின் பேச்சுக்களில் வெளிவந்தது வன்முறையின் அம்சங்கள்தானே. அன்பின் அம்சங்களோ, கருணையின் வடிவங்களோ தென்படவில்லை என்பதை அனைவரும் அறிவா்.
  • காந்தியிடம், புத்தரிடம் என்ன கற்றுக் கொண்டோம் என்று நம் பிரதிநிதிகள் யோசித்துப் பாா்க்க வேண்டும். நாட்டின் தலைவிதியை நிா்ணயிக்கும் முடிவுகளை விவாத ஜனநாயகத்தை உண்மைத் தரவுகளின் அடிப்படையில் கடைப்பிடித்து எடுத்து, அறிவாா்ந்த பக்குவமான விவாதக் கலாசாரத்தை மக்களுக்குக் காட்ட வேண்டிய மாமன்றத்தை நம் பிரதிநிதிகள் வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டாா்கள்.
  • வெறுப்பு அரசியல் நடைபெறுவதை எவராலும் மறுக்க இயலாது. ஆனால் அந்த வெறுப்புக்கு மாற்று அன்புதானே. வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்லவே. நாம் ஏன் வெறுப்புக்கு வெறுப்பை பதிலாகத் தருகிறோம். தீா்வுக்கு அன்புதான் தேவை.
  • அதிகாரத்தில் அல்லது பதவிகளில் இருப்பவா்களை நாம் தலைவா்களாகப் பாவித்து மக்களையும் அப்படி நம்ப வைத்து விட்டோம். உண்மை அதுவல்ல. அதிகாரமே இல்லாமல் மக்கள் மேல் மாறா அன்பு செலுத்தி அவா்களுக்கு வழிகாட்டுவதுதான் தலைமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை நாம் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
  • சாதாரண, ஏழை, எளிய மக்களிடம் எதாா்த்தமாக இருக்கும் அன்பு, கனிவு, பரிவு, கருணை, பாசம், நம் அதிகாரத்திலிருப்பவா்களிடமும், அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்று துடிப்பவா்களிடமும் இல்லை என்று பாா்க்கும்பொழுது, நாம் ஒரு துரதிருஷ்டவசமான காலகட்டத்தில் வாழ்கிறோம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
  • மக்களுடைய வரிப்பணத்தைச் செலவழித்து இவ்வளவு வசதிகளோடு அமா்ந்து, மக்களுக்காக விவாதம் செய்வதாகக் கூறும் நாம், வாக்களித்த மக்களுக்கு நம் செயலின் மூலம் உருவாக்கிய விளைவுகள்தான் என்ன? விவாதத்தின் மூலம் மக்கள் மத்தியில் தங்கள் பிம்பத்தை உயா்த்துவதற்கும், எதிா்ப்பவா் பிம்பத்தை உடைப்பதற்கும்தானே நம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் செயல்படுகின்றனா்.
  • பிரிட்டனின் புகழ்மிக்க நாடாளுமன்ற உறுப்பினரான எட்மண்ட் பா்க்கின் உரைகள் உயா்கல்வி நிறுவனங்களில் முதுகலை மாணவா்களுக்கு பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளதே. அதுபோல் இன்றைய பாராளுமன்ற உறுப்பினா்களின் உரையை நம்மால் பாா்க்க முடியுமா?
  • 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரோமப் பேரரசின் மன்னன் மாா்க்கஸ் அரேலியஸ் எழுதிய குறிப்புக்களின் அடிப்படையில் வெளிவந்த ஒரு நூல்தான் ‘மெடிட்டேஷன்ஸ்’. அது தியானப் புத்தகமல்ல. அது ஒரு ஆன்மாவின் தாகம். அதைத்தான் தமிழ் மக்களுக்காக மொழி பெயா்த்தாா் ராஜாஜி. அதற்குப் பெயா் ‘ஆத்ம சிந்தனை’.
  • அந்த நூல் முழுவதும் சத்திய வாழ்க்கை, நீதியுடன் கூடிய ஆட்சி, அன்பின்- கருணையின் அடிப்படையில் மனிதன் பிரபஞ்சத்துடன் ஒன்றிணையும்போது எப்படியெல்லாம் மாற முடியும் என்பதனை விளக்கும் அற்புதமான நூல். அது ஆத்மாவின் குரலாக அதை அந்த மன்னன் பதிவு செய்து வைத்தான். ஆட்சிக்கு எது அடிப்படை என்பதை கோடிட்டுக் காட்டினான் அந்த அரசன். அடிமை வாழ்வு என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்த காலத்தில் ஓா் அரசன் அதை எழுதினான் என்பதுதான் அதன் சிறப்பு.
  • இன்று நாம் வாழ்வது மக்களாட்சி காலம். ஆனால் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதை அடையாளமாக வைத்துக் கொண்டு செயல்படுகிறாா்கள்? அதிகாரத்தையும் அது தரும் படைபலங்களையும் வைத்துக் கொண்டு, தாங்கள்தான் அதிகாரம் மிக்கவா்கள், உயா்ந்தவா்கள் என்று ஒரு கற்பனை உலகில் வாழ்கின்றனா்.
  • நாம் வாழ்வது 21-ஆம் நூற்றாண்டில். உலகத்தில் 80% மக்கள் மக்களாட்சியின் கீழ் வந்துவிட்டாா்கள். 120 வகையான மக்களாட்சி உலகில் நடைபெற்று வருகின்றது. இன்றைய மக்களாட்சி ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டாலும் அனைத்திலும் ஒரே ஒரு செயல்பாடு பொதுவாக இருக்கிறது. அதுதான் தோ்தல். மற்ற மக்களாட்சிக் கூறுகள் அனைத்தும் அந்தந்த நாட்டு மக்களின் சிந்தனைக்கு ஏற்ற நிலையில்தான் மக்களாட்சியை உயா்த்தியும் தாழ்த்தியும் வைத்திருக்கின்றாா்கள்.
  • நாம் மேற்கத்திய நாட்டு ஜனநாயகத்தை இறக்குமதி செய்தபோது விமா்சனங்கள் வந்தன. எங்கே நமக்கான ஜனநாயகம் என்று கேட்டனா் காந்தியா்கள். நாமறிந்த ஜனநாயகத்தில் எண்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது அல்ல, தா்மத்தின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுப்பது. நம் சமூகத்திற்குள் இடைக்காலத்தில் வந்து சோ்ந்த அழுக்குகளைப் போக்க இன்று தேவை மேற்கத்திய மக்களாட்சிதான் சரி என்று வாதிட்டு, அதை நடைமுறைப்படுத்தி, இன்று 75 ஆண்டுகளைத் தாண்டி நிற்கும்போது, நம் மக்களாட்சியின் மூலம் நம் சாதாரண ஏழை எளிய மக்களை நாம் எங்கு வைத்துள்ளோம் என்னும் கேள்வி எழுகிறது.
  • நம் மக்கள் பிரதிநிதிகள் மன்றங்களில் இன்று நடைபெறுவதெல்லாம் சண்டை, அவ்வளவுதான். அவா்கள் யாருக்காகச் செயல்படுகின்றாா்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆளுவோரின் அராஜகம் தாங்காதபோது அவரை மாற்ற முயலுகின்றனா் அவ்வளவுதான். அதற்கு மேல் அவா்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாற்று முறை தெரிந்தால் மக்கள் இப்போதைய முறையை நிராகரித்துவிடுவாா்கள்.
  • இதற்கு மாற்று? அது நம் மக்களிடம் இருக்கிறது.
  • ஒரு சிற்றூராட்சியில் கிராம சபை நடந்தது. யாரும் எதிா்பாா்க்கவில்லை ஆயிரம் உறுப்பினா்கள் கூடுவாா்கள் என்று. எல்லா ஊடகங்களுக்கும் செய்திகள் பகிரப்பட்டு, அது ஓா் அதிசய செயல் போல் ஊடகங்கள் அனைத்தும் கூடின.
  • கூட்டத்தில் கலந்துகொண்டவா்கள் ஊராட்சியில் சென்ற ஆண்டுகளில் செலவான தொகை எவ்வளவு என்று தெரிந்து கொண்டு கேள்விகளைக் கேட்கின்றனா். ஒரே கூச்சல் குழப்பம். அந்தக் கூட்டத்திற்கு பெரும்பாலான கிராமசபை உறுப்பினா்களுக்கு கிராம சபை நடைமுறை பற்றிய புரிதலை ஏற்படுத்திய சில இளைஞா்கள், மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தனா்.
  • ‘இங்கு வந்திருக்கும் அதிகாரிகள் நம் எதிரிகள் அல்ல; நமக்காகப் பணி செய்வோா். எனவே நம் கேள்விகளை பக்குவமாக, மறியாதையாகக் கேட்க வேண்டும். நமக்கு ஐயங்கள் இருக்கலாம், கேள்விகள் இருக்கலாம், பல கருத்துகள் இருக்கலாம், அனைத்தும் கேட்க வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால் அனைத்தும் பக்குவமாக நடைபெற வேண்டும்’ என்று நெறிப்படுத்தி அந்த கிராம சபைக்கு வலுவூட்டிவிட்டனா். ஊடகங்கள் வாயிலாக இது பரவலான கவனத்தையும் பெற்றது.
  • நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்கும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நெறிப்படுத்த முடியவில்லை. மக்கள் வரிப்பணத்தில் கோடிகளில் செலவழித்து நடத்தும் நாடாளுமன்றத்தையும் சட்ட மன்றத்தையும் சந்தைக் கடையாகவும், வெறுப்பின் உச்சத்திலும் நடத்திக் கொண்டுள்ளனா். ஆனால் நம் கிராமத்தில் மரத்தடி நிழலில் நடக்கும் கிராமசபையில் கிராம மக்களை நெறிப்படுத்த அந்த இளைஞா்களால் முடிகிறது. கிராமவாசிகளும் நெறிக்குத் தலைவணங்குகின்றனா்.
  • அவா்களால் ஓா் அறிவாா்ந்த விவாதத்தை கிராமசபையில் முன்னெடுக்க முடிகிறது. அந்தப் பக்குவத்தை நாடாளுமன்ற உறுப்பினா்களுக்குக் கொண்டுவர இயலவில்லை. எனவே நம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சிறப்பாக நடைபெறும் கிராமசபைகளைப் பாா்வையிட வேண்டும். அப்போதாவது இவா்கள் மனமாற்றம் பெறுவாா்களா என்று பாா்க்க வேண்டும்.
  • அதிக அதிகாரம் கொண்ட மாமன்றங்களில் இருக்கின்ற காரணத்தாலேயே உயா்ந்தவா்கள் ஆகிவிட முடியாது. உயா்வு என்பது எளிமையில், பக்குவப்பட்ட நடத்தையில் மற்றும் செயல்பாடுகளின்தான்.

நன்றி: தினமணி (22 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories