TNPSC Thervupettagam

கிராமங்கள் எப்படி கரோனாவை எதிர்கொள்கின்றன?

July 14 , 2020 1652 days 820 0
  • உலகத்தை உலுக்கிக் கதிகலக்கியிருக்கும் கரோனா கிராமங்களில் வெறும் இலையை உசுப்பும் சலனமாக நகர்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர் கரோனாவை நம்முடைய கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று என்னைக் கேட்டார்.

  • ஆண்டவன் விதித்த தண்டனை என்று நினைக்கிறார்களா அல்லது நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியில் சோர்ந்து ஒடுங்கிவிட்டார்களா அல்லது புது வேகத்தோடு எதிர்த்துப் போராடுகிறார்களா என்று அறிய அவருக்கு ஆவல்.

  • கிராமத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை தத்துவ விசாரணையில் தொடங்கி தர்க்கக் கச்சிதமாக ஒரு தத்துவக் கோட்பாட்டில் முடிவதில்லை.

  • கரோனா காலத்தில் கோயிலுக்குள் செல்ல முடியாவிட்டாலும் வெளியே நின்று தாலிகட்டிக்கொள்கிறார்கள். திருமணத்தில் கூட்டமாகக் கலந்துகொள்ளாவிட்டாலும் இருபது, முப்பது உறவினர்களாவது நிகழ்ச்சிக்கு வந்துவிடுகிறார்கள்.

  • வீடு கட்டி முடித்தவர்கள் குடிபோகிறார்கள். இறந்த அன்றைக்கே துக்கத்துக்குச் செல்லவில்லை என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் சென்று விசாரித்து வருகிறார்கள். பருத்திச் சாகுபடியும் நெல் சாகுபடியும் வழக்கம்போல் நடக்கின்றன.

  • வயலில் உளுந்து எடுக்கிறார்கள். வீட்டில் பயறு உடைக்கிறார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிக்கிறார்களே என்று குறைபடுகிறார்கள்.

  • சென்ற ஆண்டு கிலோ ஐம்பத்தைந்து ரூபாய் விற்ற பருத்தி, இந்த ஆண்டு முப்பது ரூபாய்கூட விலை போகவில்லையே என்று கவலைப்படுகிறார்கள்.

  • நூறு நாள் வேலைக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்றுவருகிறார்கள். வயல் வெளியில் மாட்டுக்குப் புல் அறுக்கிறார்கள். மாட்டுத் தரகும் ஆட்டுத் தரகும் மும்முரப்படுகின்றன.

  • கந்துவட்டிக் கடனுக்கு அன்றாடம் தவணை கட்டுகிறார்கள். அடகில் இருக்கும் நகைக்கு வட்டியாவது கட்டிவைக்கிறார்கள். வீட்டுக்குக் கீற்று போடுகிறார்கள்.

  • ஓடு மாற்றுகிறார்கள். வேலி கட்டுகிறார்கள். அந்தி சாயும் நேரத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் ஆடு, மாடுகளைப் பறந்து பறந்து ஓட்டிவந்து கொட்டிலில் கட்டுகிறார்கள்.

  • கறந்த பாலைக் கொடுத்துவருகிறார்கள். வீட்டுக்கு விருந்தாளிகள் வருகிறார்கள். இவர்களும் விருந்தாளி போகிறார்கள். எந்த வேலையும் தள்ளிப்போகவில்லை. எதுவும் நின்றுபோகவுமில்லை.

வேலையில் துவங்கும் வாழ்க்கை

  • அதற்காக எதையுமே அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் பொருள் இல்லை. கூட்டம் அதிகமாகத் தெரியும் இடங்களைத் தவிர்க்கிறார்கள்.

  • வழியில் ஆட்கள் எதிர்ப்படுகையில் நெருக்கம் தவிர்க்கிறார்கள். ஆனால், குறையும் வருத்தமும் கொண்டாட்டமும் துக்கமும் கவலையும் இழப்பும் ஆதாயமும் எப்போதும்போல் கிராமங்களில் வாழ்க்கையை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன.

  • ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டது. இப்போது அடுத்த சாகுபடிக்குத் தயாராக வேண்டும். அதற்கு முதல் தேட வேண்டுமே என்ற அடுத்த கவலை. விதைத்தது முளைக்க வேண்டும். முளைத்த நாற்றைக் காலம் தவறாமல் நட்டுவிட வேண்டும்.

  • நட்டது பயிராகி அறுவடையாக வேண்டும். இப்படி வேலை என்ற புள்ளிதான் வாழ்க்கையைத் துவக்கி அந்தப் புள்ளியே வாழ்க்கையின் நிறைவாகவும் இருந்துவிடுகிறது. அதைப் பார்த்து நாம்தான் ஒரு தத்துவத்தை வரைந்துகொள்ள வேண்டும்.

வாழ்க்கையே தற்காப்புதானா?

  • பேச்சில், “உங்களுக்குப் பயம் இல்லையா?” என்று கேட்டால், “நமக்கெல்லாம் கரோனா வராது” என்பார்கள். அடுத்து, “அப்படி வந்தால் என்ன செய்ய முடியும்; வந்துவிட்டுப் போகட்டும்!” என்பார்கள்.

  • அப்புறம், “எனக்குத் தனியாகவா வரப்போகிறது? எல்லோருக்கும் வருவதுதானே எனக்கும் வரும்?” என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள். அறியாமை என்றோ அலட்சியம் என்றோ இதைப் பார்க்கக் கூடாது.

  • கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதே அவர்களுக்கு வாழ்க்கையாக இன்னும் மாறவில்லையே என்று நாம் நிம்மதிகொள்ளலாம். வாழ்க்கையை அன்றாடம் முழுமையாக எதிர்கொள்பவர்களுக்கு கரோனாவோ மற்ற தொற்றுகளோ வாழ்க்கையில் ஓர் அங்கம்தான். அதை அந்த நிலையிலேயே குறுக்கி வைத்துக்கொள்ளும் ஒரு மனப்பாங்குக்குக் கிராம மக்கள் தாங்கள் அறியாமலேயே பழகிக்கொண்டார்கள்.

  • பெரிய நெருக்கடிகளில் அரசும் நகரங்களும் தங்கள் சிந்தனையைக் கிராமங்களில் செலாவணியாக்கத் தீவிரமாக முயல வேண்டியிருப்பது ஆச்சரியமல்ல.

  • தங்கள் சிந்தனையைக் கிராமங்கள் அப்படியே தழுவிக்கொள்ள வேண்டும், அப்படியே உள்வாங்க வேண்டும் என்று அவை எதிர்பார்க்கின்றன. அரசும் மக்களும், கிராமமும் நகரமும் வெவ்வேறு சிந்தனைத் தளங்களில் தனித்தனியாக இயங்கும் சாத்தியம் உண்டு என்று நமக்குத் தோன்றுவதில்லை. வெவ்வேறு என்றால் எதிரெதிரானவை என்று நினைத்துவிடக் கூடாது.

கிராமங்கள் சாதித்த எளிமை

  • ஒருவரின் தலைக்கு ஒரு நெல் மூட்டையை நான் தூக்கிவிடும்போதும், அதை அவர் தன் தலையிலிருந்து இன்னொருவர் தலைக்கு மாற்றிவிடும்போதும் சமூக இடைவெளி பற்றிச் சிந்திக்க முடியுமா? வரிசையாக ஒரு அடி அகல வரப்பில் நடந்துபோகிறவர்கள் எதிரே வரும் வரிசைக்கு சமூக இடைவெளிவிட்டு விலக முடியுமா? நாற்று பறிப்பவர்களும் நடவு நடுபவர்களும் சமூக இடைவெளியை ஒரு பாதுகாப்பாக எப்படி மதிப்பிட்டுக்கொள்வார்கள் என்று நாம் கற்பனை செய்ய வேண்டும்.

  • வயல்களில் சமூக இடைவெளியைப் பேணுதல் தொடர்பில் இங்கே யாரும் பேசவில்லை; அப்படியென்றால், விவசாயிகளுக்கு இந்தப் பாதுகாப்பு விதிகளிலிருந்து விலக்கு என்று பொருள் கொள்ளலாமா அல்லது ‘நீங்கள் எக்கேடுகெட்டாவது உணவு உற்பத்தி செய்து கொடுங்கள், நாங்கள் பத்திரமாக இருந்துகொள்கிறோம்’ என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா?

  • உற்பத்தி நோக்கம் நிறைவேறிய பின்பு கிராமங்களுக்கு கரோனா வந்துவிட்டால் அங்குள்ளவர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார்கள் என்றும் நாம் வெகு எளிதாகப் பேசலாம். ஆயினும், கிராமங்கள் இப்படியான சிந்தனைச் சிக்கல்களையெல்லாம் தேடிப் பிடித்து மலைத்து நிற்கவில்லை.

  • அவை எப்போதும்போல் சிந்தனையில் நமக்கெல்லாம் எட்டாத எளிமையைச் சாதித்துக்கொண்டன. கிராமங்களில் உற்பத்தி நடவடிக்கைகள் நின்றுபோகவில்லை. அது ஒன்றுதானே இப்போது நாட்டின் ஜீவனுக்கு அடையாளம்!

நன்றி: தி இந்து (14-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories