கிறிஸ்துவமும் கம்யூனிசமும்
- மக்கள் தொண்டும் கடவுளுக்கான தொண்டும் வேறு வேறு அல்ல என வாழும் கிறிஸ்துவர்கள் உண்டு. சமயத்தைத் தள்ளிவைத்துவிட்டுச் சமூக நலனில் மட்டுமே அக்கறை செலுத்திய கம்யூனிஸ்ட்களும் உண்டு. கிறிஸ்துவத்தையும் கம்யூனிசத்தையும் ஒரு ஜன்னலின் இரு பக்கங்களாகக் கருதுவது அரிதானதொரு அணுகுமுறை. உலகம் விசித்திரமான மனிதர்களின் சங்கமமாக இருப்பதே, அதன் தீராத வசீகரமாக இருக்கிறது. தமிழகமும் அத்தகைய சில ஆளுமைகளைக் கண்டுள்ளது.
- மறைந்த எழுத்தாளர் ஐசக் அருமைராஜனால் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் என்கிற நிலைப்பாட்டைச் சிந்திக்க முடிந்தது. ஐசக் அருமைராஜன் நாகர்கோவிலில் பிறந்தவர். இவர் 1970லிருந்து எழுதத் தொடங்கினார். கிறிஸ்துவத்தைச் சமய நோக்கில் பின்பற்றுவதைக் காட்டிலும், அதை ஒரு வாழ்வியல் நெறியாக அணுகுவதில் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. சக மனிதர்கள் நன்மை தீமை இடையிலான வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமலோ, தீமைக்குத் துணைபோவதாகவோ வாழ்வது குறித்த கேள்விகள் அவருக்கு இருந்தன. குறிப்பாக, கிறிஸ்துவர்கள் இந்த நெருக்கடிக்கு அடிபணியக் கூடாது என அவர் நினைத்தார்.
- கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் அதற்கான மனவலிமையைத் தரும் என ஐசக் நம்பினார். இதற்கு அவர் எழுதிய ‘கீறல்கள்’ என்கிற புதினம் ஓர் உதாரணம். அதில் வரும் வேதமணி வாத்தியார் என்னும் கதாபாத்திரம் ஐசக் அருமைராஜனின் மனசாட்சியைப் பிரதிபலிக்கிறது. ‘கிறிஸ்துவங்கதான் தப்பு செய்றவங்களைத் தட்டிக் கேட்கணும்’ என வேதமணி வாத்தியார் ஓரிடத்தில் கூறுகிறார். இன்னோர் இடத்தில் ‘கிறிஸ்துவ அறிஞ்ச கிறிஸ்துவன் எந்த இடத்துல சேர்ந்தாலும் கெட்டுப் போக மாட்டான். கிறிஸ்துவன் ஏழை மக்களுக்காக வேலை செய்யணும்’ என்கிறார். (ஆதாரம்: ஐசக் அருமைராஜன், ஆசிரியர்: சீ. மோபெல் ஜோதிராணி)
- தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் செல்வாக்குப் பெற்றிருந்த பகுதிகளில் நாகர்கோவில் வட்டாரமும் ஒன்று. அங்கு சிபிஐ, சிபிஎம் என ஏதேனும் ஒன்றில் இருந்தபடி செயல்பட்ட எழுத்தாளர்கள் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். ஐசக் அருமைராஜன் கம்யூனிசத்தையும் கிறிஸ்துவத்தையும் ஒன்றொடு ஒன்று நெருங்கிய தொடர்புகொண்டவையாக அணுகினார். எளியவர்களுக்கு இரங்குதலில் இரு கொள்கைகளுக்கும் உள்ள ஒற்றுமை அவரை ஈர்த்திருக்கிறது. ‘நான் ஒரு நல்ல கம்யூனிஸ்ட். நான் ஒரு நல்ல கிறிஸ்துவன். நாட்டிற்காக என்னை அர்ப்பணிக்கிறேன்’ என்கிற வேதமணி வாத்தியாரின் வார்த்தைகளில் ஐசக் அருமைராஜனின் விருப்பம்தான் வெளிப்படுகிறது.
- கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் என்பது ஒற்றை ஆளாக இவருடன் மட்டுமே முடிந்துவிடக்கூடிய வாழ்வியலாக இருக்கவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சிலர் இத்தகைய அடையாளத்துடனேயே கம்யூனிச இயக்கத்தில் செயல்பட்டுள்ளனர். சாயர்புரத்தைச் சேர்ந்த மறைந்த தோழர் அதிசயமணி ஓர் உதாரணம். கிறிஸ்துவச் சமய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், சிபிஎம் கட்சியிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். 1980களில் அப்பகுதியில் பிள்ளையார் கோயில் கட்டப்படுவதற்கு சக கிறிஸ்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதிசயமணி கோயில் கட்டுவதை ஆதரித்தார். திட்டமிடல் ஏதுமின்றி இயல்பான கரிசனத்தின் வெளிப்பாடாக இத்தகைய செயல்பாடுகள் நிகழ்ந்தன. திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் என்னும் ஊரிலும் இதுபோன்ற பொதுவுடைமைவாதிகள் வாழ்ந்தனர்.
- சமயத்தைப் பின்பற்றுவதும் அதிலிருந்து வெளியேறுவதும் அவரவரது தனிப்பட்ட உரிமை. இயக்கத்திலும் இறைவழிபாட்டிலும் ஒரே சமயத்தில் பயணித்த இவர்களின் நிலைப்பாடு அபூர்வமானது. ஏழைகளின் பங்காளன் ஆன இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளில் இவர்களை நினைவுகூர்வது பொருத்தமானது.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2024)