TNPSC Thervupettagam

கிழக்கு ஆசியாவை பாதிக்கும் தென் அமெரிக்க வெப்பம்

June 1 , 2024 224 days 177 0
  • உலகக் கடல்களிலுள்ள மொத்தக் கடற்புல் பரப்பைக் கணக்கில் கொண்டால், இவற்றின் மூலம் ஆண்டுதோறும் 1.3 மில்லியன் டன் கரிமச் சுமை குறைக்கப்படுகிறது. புவிவெப்ப உயர்வைக் கட்டுப்படுத்துவதில் கடற்புற்களின் பங்கு அவ்வளவு முக்கியமானது.
  • கரிம வளிச் சுமையைக் குறைப்பதன் மூலம் கடல் அமிலமயமாகாமல் பாதுகாக்கிறது. அவ்வாறு, பவளத்திட்டுகளும் ஏனைய சுண்ணாம்புத்தோடு மூடிய உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. கரிமவளி மிகுதியாகி, கடலின் அமிலத்தன்மை உயர்ந்துவிட்டால் உயிரினங்களுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து கிடைக்கப்பெறாது.

அழியும் படுகைகள்:

  • பொ.ஆ. (கி.பி.) 1930களிலிருந்து உலகக் கடல்களின் கடற்புல் படுகைகள் வேகமாய் அழிந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்மைக் காலத்தில் ஆண்டுக்கு 7% அளவில் படுகைப் பரப்புகள் குறைந்துவருகின்றன.
  • கரைக்கடல்கள் நகர்ப்புற, தொழிற்சாலைக் கழிவுகளின் கிடங்காக மாறிக்கொண்டிருக்கின்றன; வேளாண் நிலங்களிலிருந்து வெளியேறும் வேதிஉரங்கள், உயிர்க்கொல்லி எச்சங்களின் வடிகாலாகவும் கடல் பயன்படுத்தப்படுகிறது. கடற்கரை மேம்பாட்டு நடவடிக்கைகள் கடற்புல் படுகைகளைப் பாதிக்கின்றன. இவை தவிர, காலநிலை மாற்றமும் புல்பரப்புகளின் அழிவுக்கு முக்கியமான காரணமாக அமைகிறது.

கண்டல் காடுகள்:

  • கரைக்கடல் மீன்வளத்தின் மூல ஆதாரங்களான பவளத் திட்டுகள், கழிமுகங்கள், கண்டல் காடுகள் (அலையாத்திக் காடுகள்) ஆகிய மூன்று வகை சூழலியல் கட்டமைவுகளும் காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மீன் அறுவடை 10% வீழ்ச்சியடையும். முக்கியமாக, உணவுச் சங்கிலியின் மேல் மட்டத்திலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்கள் பலவும் அழிந்துபோகும்.
  • வெப்பமண்டலக் கடல்களில் வாழும், உணவுச் சங்கிலியின் கீழ்மட்டத்திலுள்ள கோப்பிப்போடு (tropical copepods) போன்ற முக்கியமான மிதவை விலங்கின உயிரிகள் மிதவெப்பக் கடல்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அதனால், இரைக்காக இவற்றைச் சார்ந்திருக்கும் மீன் இனங்களின் உற்பத்தி சரிந்துவிடும்.

பரத்தாங் கண்டல் காடு:

  • 2016இல் அந்தமான் ஜாரவா காட்டுக்குப் போயிருந்தபோது, பரத்தாங்கிலுள்ள நடு-நீரிணையை (Middle Strait) கடந்து ஜாரவாக்களின் சுண்ணாம்புக்கல் குகைகளைக் காணச் சென்றோம். அப்போது அலையாத்திக் காடுகளின் ஊடாகப் படகில் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்துச் சென்ற அனுபவம் நினைவுக்கு வருகிறது. கண்டல் காடு கடலோடு எவ்வாறு ஊடாடிக் கொண்டிருக்கிறது என்பதை அந்தப் படகுப் பயணத்தின்போது கவனித்தேன்.
  • நாங்கள் நடு-நீரிணையைக் கடந்து அலையாத்திக்குள்ளே நுழைகிற நேரத்துக்கெல்லாம் கடல் வற்றம் தீவிரமாகி, நீர்மட்டம் வேகமாய்க் கீழே போய்க்கொண்டிருந்தது. பக்கவாட்டில் கிளைத்துப்போகும் ஒரு வாய்க்காலுக்குள் நுழைந்து, சோலைவனத்தின் கவிகையைத் தலைகீழாய்க் கவிழ்த்தியதுபோல் பரவிக் கிடந்த அலையாத்தி மரங்களின் வேர்களுக்கிடையில் அந்த அனுபவம் மிகுந்த இளம் படகோட்டி சற்று சிரமத்தோடுதான் படகைச் செலுத்தினார்.
  • ஏறத்தாழ ஒரு சாகசப் பயணம்போல, பயணிகளும் கிளைகளில் இடித்துவிடாமல் நெளிந்தும் குனிந்தும்தான் பயணித்தோம். சுண்ணாம்புக்கல் குகையைப் பார்த்துவிட்டு மீண்டும் படகில் நடு-நீரிணைக்குத் திரும்புகிற நேரத்தில் வற்றம் அதன் உச்சத்தில் இருந்தது.
  • இரண்டு கரைகளிலும் அலையாத்தி வேர்கள் அரை மீட்டர் உயரத்துக்கு வெளியே தெரிந்தன. நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் இப்படி கடல்நீர் உள்ளே புகுந்து திரும்பும்போது உயிர்ச் சத்துகள் பரிமாறப்படுகின்றன; கடலுக்கும் கழிக்கும் இடையில் உயிரினங்கள் நகர்கின்றன.

தமிழ்நாட்டுக் கண்டல் காடுகள்:

  • தமிழ்நாட்டின் பிச்சாவரம், கிள்ளை தொடங்கி, குஜராத்தின் கட்ச், மேற்கு வங்கத்தின் சுந்தரவனம் வரை இந்தியாவின் கண்டல் காடுகள் பெரும் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
  • சுந்தரவனம் கண்டல் காடு 80,000 ச.கி.மீ. பரப்பு கொண்டது; அங்கு 34 அலையாத்தித் தாவர இனங்கள் உள்ளன. கடல்மட்ட உயர்வு, இக்காட்டின் இந்தியப் பகுதியில் வாழும் 40 லட்சம் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
  • வெப்பநிலை உயர்வினால் கண்டல் காடுகளுக்கு நேர்ந்துவரும் சிதைவு காலநிலை மாற்றத்தின் மற்றொரு வெளிப்பாடு. கடல் மீன்வளத்துக்குக் கண்டல் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மீன்களின் இனப்பெருக்கத்துக்கும் குஞ்சுமீன்களின் செழுமையான வளர்ச்சிக்கும் கண்டல் காடுகள் தேவை. அதோடு, அவை பேரிடர் தணிப்பானாகவும் அமைகின்றன. 2004 சுனாமியின்போது ஆறு கிராமங்களை அழிவிலிருந்து காத்தது பிச்சாவரம் கண்டல் காடு.

எல் நினோ:

  • 2015 சென்னைப் பெருவெள்ளம், 2017 ஒக்கி புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கும் தென்னமெரிக்கக் கடற்பகுதியில் நேரும் வெப்ப நீரோட்டங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஏறத்தாழ உலகின் எதிரெதிர் விளிம்புகளில் அமைந்திருக்கும் தென்னமெரிக்காவும் கிழக்காசியாவும் கடலாலும் வளிமண்டலத்தாலும் பிணைக்கப் பட்டுள்ளன. எல் நினோ என்கிற வெப்ப அலைகளும் வளிமண்டல வெப்பச் சலனங்களும் காரண- விளைவு உறவைக் கொண்டவை.

எல் நினோ என்றால் என்ன?

  • பொ.ஆ. (கி.பி.) 1600இன் ஒரு கிறிஸ்துமஸ் காலத்தில் பசிபிக் பெருங்கடலின் மைய, கிழக்கு வெப்ப மண்டலப் பகுதிகளின் மேற்பரப்பில் வழக்கத்துக்கு மாறாக ஏற்பட்ட வெதுவெதுப்பை பெரு நாட்டு மீனவர்கள் கவனித்தனர். அந்த வெதுவெதுப்பு மேற்கு நோக்கி விரிந்து, வழக்கத்தைவிட அதிக காலம் நீடிக்கவும் செய்தது. பெரு மீனவர்கள் அதற்கு ‘எல் நினோ’ என்று பெயரிட்டனர். ஸ்பானிய மொழியில் அதற்கு ‘பாலகன் யேசு’ என்று பொருள்.
  • தொடர்ந்து, எல் நினோவின் எதிர்நிலையாக, கடற்பரப்பின் வெப்பநிலை வழக்கத்தைவிட குளிர்ச்சியாகத் தொடங்கியது. அதனை ‘லா நினா’ என்று அழைத்தனர். அரிதான அந்த இரண்டு நிகழ்வுகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் வரலாயின.
  • புவி வெப்ப உயர்வின் விளைவுகளில் ஒன்றான காலநிலை மாற்றமே எல் நினோ- லா நினா நீரோட்டங்களை உருவாக்குகின்றன என்பதும், எல் நினோக்கள் உலகளாவிய பருவநிலையில் தாக்கத்தை விளைவிக்கின்றன என்பதும் பருவநிலை ஆவணங்களிலிருந்து நாம் அறிந்துகொண்ட உண்மைகள்.

கடலில் வெப்ப அலைகள்:

  • எல் நினோ ஆண்டுகள் மனிதகுலத்தின் கொடுங்கனவாக மாறியுள்ளன. 2016 எல் நினோவைத் தொடர்ந்து, 2017இல் ஒக்கி பேரிடர் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். 2022 எல் நினோ குறித்து அஞ்சப்பட்டதுபோலவே, 2023இல் பூமியின் வெப்பநிலையை 21,000 ஆண்டு் கால உச்சத்துக்குக் கொண்டுபோனது.
  • 2023இன் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிய வெப்ப மண்டலப் பகுதிகள் இரண்டாவது கோடையைச் சந்தித்தன. 2023இன் இறுதியில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காலம் தப்பிய பெருமழை கொட்டித் தீர்த்தது. காயல்பட்டினத்தில் 950 மி.மீ. மழை பதிவானது, வரலாறு கண்டிராத நிகழ்வு.
  • அண்மையில் (2020-2022) மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக எல் நினோக்கள் நிகழ்ந்தன. அவற்றின் நீட்சியாக, கிழக்கு பசிபிக் வெப்ப மண்டலக் கடலில் வெப்ப அலைகள் உருவாகின. 2021இல் இந்தியப் பெருங்கடல் 52 வெப்ப அலைகளைச் சந்தித்தது. இப்படி, வழக்கத்துக்கு மாறாக ஏற்படும் வெப்ப அலைகள் கீழ், மேல் வளிமண்டல அடுக்குகளின் சுழற்சியைப் புரட்டிப் போடுகின்றன. கணிக்க முடியாத வெப்பமண்டலப் புயல்களும் காலம் தவறிய மழைப் போக்குகளும் இதன் தொடர்ச்சியே.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories