TNPSC Thervupettagam

கீழடி: ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி

August 31 , 2020 1607 days 1353 0
  • ஒரு நாட்டின் வரலாறு முதன்மைச் சான்றுகளான கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது.
  • ஆனால், எழுத்துச் சான்றுகளாகப் பதிவுசெய்வதற்கு முந்தைய காலகட்ட வரலாற்றை எழுதுவதற்கு அகழாய்வுத் தொல்பொருட்களே பெரிதும் துணைபுரிகின்றன.
  • கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் பல்வேறு வினாக்களுக்குப் பதிலளித்துள்ளன. கீழடி அகழாய்வு தொடங்கும்போது, தொடக்க வரலாற்றுக் காலத்தின் வாழ்விடப் பகுதியைக் கண்டறிய வேண்டும் என்ற கருதுகோளோடு தொடங்கப்பட்டது.
  • தொடர்ந்து செய்யப்பட்ட அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட செங்கல் கட்டுமானங்கள், தொல்பொருட்கள் கருதுகோள்களுக்கு விடையளித்துள்ளன.
  • நான்காம் கட்ட அகழ்வாய்வில் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள், அறிவியல் ஆய்வுகளுக்காகத் தலைசிறந்த சோதனைக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டன. ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகளானது ஆய்வாளர்கள், பொதுமக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புதிய கண்டுபிடிப்புகள்

  • கடந்த கீழடி அகழாய்வுகளில் நெசவு தொழிற்கூடப் பகுதியின் செங்கல் கட்டுமானங்கள், நீர் மேலாண்மையின் சிறப்பை வெளிக்காட்டும் பல்வேறு வகையான வடிகால் அமைப்புகள், பலவித வண்ண மணிகள், வேளாண்மைக்கு உறுதுணையாக விளங்கிய விலங்கினங்கள், தங்க ஆபரணங்கள், செம்பு மற்றும் இரும்புப் பொருட்கள், நூல் நூற்பதற்கான தக்களிகள், பல்வேறு அளவுகளில் கருப்பு-செவ்வண்ண மட்பாண்டங்கள் போன்றவை கண்டறியப்பட்டன.
  • கீழடி தொல்லியல் மேடானது கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பரந்த அளவிலானது. இந்த நான்கு பகுதிகளிலும் ஒருசேர விரிவான அகழாய்வு மேற்கொண்டு, கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் இந்தப் பண்பாட்டின் முழு பரிமாணத்தையும் அறிய முடியும். அத்தகைய பரந்த நோக்கோடு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆறாம் கட்ட அகழாய்வை நான்கு பகுதிகளிலும் செய்துவருகிறது.

நுண் கற்கருவிகள்

  • கீழடிக்கு அருகிலுள்ள அகரம் அகழாய்வுக் குழிகளில் நுண் கற்கருவிகள் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டன.
  • இவற்றில் மெல் அலகுக் கத்திகள் கிழிப்பான்கள் (blades), சுரண்டல் கருவிகள் (scrapers), நுண் கற்கருவிகள் நீக்கப்பட்ட வெட்டு முகப்புடன் கூடிய மூலக்கற்கள் குறிப்பிடத்தக்கவை. இவை மட்டுமின்றி, ஏராளமான மூலக்கற்களும் கிடைத்துள்ளன.

இரும்புக் கருவிகள்

  • கீழடி அகழாய்வுகளில் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்களோடு அன்றைய பயன்பாட்டில் இருந்த இரும்பிலான வாள், கொக்கி, ஆணிகள், கத்திகளின் பாகங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் அடையாளம் காண இயலாத இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.

குறியீடுகள் / தமிழி

  • பண்டைக் கால மக்கள் தங்களது பேச்சுமொழிக்கு எழுத்துருவாக்கம் தருவதற்கு முன்னர் தங்களது எண்ணங்களைக் குறியீடுகளாக வடிவமைத்தனர்.
  • அத்தகைய குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முந்தைய வரிவடிவமாகக் கருதப்படுகிறது. இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
  • அதிகபட்சமாக நான்கு மீட்டர் ஆழம் வரை குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் சேகரிக்கப்பெற்றுள்ளது சிறப்பாகும். தமிழி எழுத்துப் பொறித்த 70 பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவற்றில் ஆதன், குவிரன் ஆதன், கோதிரம் அருத, சாந்த(ன்) போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மணிகள்

  • தொடக்க வரலாற்றுக் காலத்தில் பல்வேறு மணிக்கற்கள், கண்ணாடிகள் வாயிலாகப் பல வண்ணங்களில் மணிகள் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட பல்வகை மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பச்சை வண்ண மணிகளும், கார்னீலியம், அகேட், அமெதிஸ்ட் போன்ற அரிய கல் மணிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
  • இவை இன்றைய குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டவையாக இருக்கக்கூடும். அகேட், கார்னீலியன் மணிகளில் சிறப்பானதாகக் கருதப்படும் பீப்பாய் வடிவ மணிகள் கிடைத்துள்ளன. இத்தகைய மணிகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதன் வாயிலாகத் தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் இவ்விரு பகுதிகளில் இருந்துள்ளன என்று சான்றுபகரலாம்.

சீன மட்பாண்டம்

  • கீழடியில் கடந்த பருவங்களிலும் தற்போதைய அகழாய்வுகளிலும் இந்தியாவின் கீழ் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலும் இலங்கையிலும் கீழ்த்திசை நாடுகளிலும் கிடைக்கும் ரௌலட்டட் பானை ஓடுகளும், உரோம நாட்டைச் சார்ந்த அரிட்டைன் பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளுடனும், இலங்கை, கீழ்த்திசை நாடுகளுடனும், உரோம நாட்டுடனும் வணிகத் தொடர்பு இருந்துள்ளதைக் காண்கிறோம்.
  • தற்போது அகரம் தொல்லியல் அகழாய்வுக் குழி ஒன்றில் மேல் மண்ணடுக்கில் இளம் பச்சை நிற செலடன் என்றழைக்கப்படும் கி.பி. 11-12-ம் நூற்றாண்டைச் சார்ந்த சீன மட்பாண்ட ஓடு ஒன்று கிடைத்துள்ளமை, சீன நாட்டுடன் வணிகத் தொடர்பு இருந்துள்ளதற்கு வலுசேர்க்கிறது.

கி.பி. 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்

  • அகரம் அகழாய்வுக் குழி ஒன்றில் மேல் மண்ணடுக்கில் கி.பி. 17-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த வீரராயன் பணம் என்று அழைக்கப்பட்ட 300 மி.கி. எடை கொண்ட தங்க நாணயம் ஒன்று கண்டறியப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி நாணயம்

  • கீழடிக்கு அருகே மணலூர் அகழாய்வில் மேல் மண்ணடுக்கில் 1835-ம் ஆண்டைச் சேர்ந்த செம்பு நாணயம் ஒன்று கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு அரையணா ஆகும்.
  • முன்பக்கத்தில் அரையணா என்றும், பின்பக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

தொன்மையான பண்பாட்டு அடையாளங்கள்

  • கீழடி தொல்லியல் மேடானது கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய பண்பாட்டுத் தொகுப்பாகும். இவற்றைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வாண்டு ஒருசேர அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
  • இந்த அகழாய்வு முடிவுகள் வைகை நதிக்கரையில் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்றும், இவை வரலாற்றுத் தொடக்கக் காலம் என்றும் வரையறுத்துள்ளன. இங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் நுண் கற்கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நுண் கற்கருவிகளின் பயன்பாடு நுண்கற்காலம் மட்டுமின்றி, தொடக்க வரலாற்றுக் காலங்களிலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
  • நுண் கற்கருவிகளின் தனித்த பண்பாட்டுக் கூறுகள் எதிர்கால அகழாய்வுகளில் வெளிப்படக்கூடும். நகர நாகரிகத்துடன் வரலாற்றுத் தொடக்க காலம் முதல் மத்தியக் காலம் வரை இங்குள்ள மக்கள் பிற நாடுகளுடன் தொழில் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இதுவரை கிடைத்துள்ள சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
  • இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்கள் முறையான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் சீரிய கருத்துகளையும் வழிகாட்டுதல்களையும் உள்வாங்கிக்கொண்டு ஆய்வு நடைபெற்றுவருகிறது.
  • தற்போது கிடைக்கப்பெறுகிற முடிவுகள் இப்போது நடைபெற்றுவரும் தொல்லியல் ஆய்வுகளுக்குப் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும் எனலாம்.

நன்றி:  தி இந்து (31-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories