- வைகை நதிக்கரையின் கீழடியில் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வுகளில், நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.
- அரசு தந்திருக்கும் அறிக்கையின்படி பார்த்தால், அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரிகளைக் கொண்டு கீழடி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற வாழ்விடப் பகுதியாக விளங்கியிருக்கிறது என்று கருத இடம் தருகிறது.
- கீழடியில் கிடைத்திருக்கும் மண்பாண்டங்களில் உள்ள குறியீடுகள், அந்தக் காலகட்டத்திலேயே அங்கு வாழ்ந்த மனிதர்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான ஆதாரங்களாக இருக்கின்றன.
- கருத்துச் செறிவு மிக்க சங்க இலக்கியங்களுக்கு முன்பே தமிழர்களிடம் நகர்ப்புற நாகரிகம் இருந்திருக்க வேண்டும் என்ற அனுமானத்தை மெய்ப்பிப்பதுபோல இருக்கின்றன கீழடியின் அகழாய்வு முடிவுகள்.
- அந்த வகையில், இந்திய தொல்லியல் வரலாற்றில் கீழடி ஒரு முக்கியமான திருப்புமுனை என்று சொல்லலாம்.
மத்திய தொல்லியல் துறை வெளியேற்றம்
- முன்னதாக, “புதிய ஆதாரங்களோ, கட்டுமானத்தின் தொடர்ச்சியோ கிடைக்கவில்லை; புதிய சான்றுகளும் எதுவும் கிடைக்கவில்லை” என்று சொல்லி, மத்திய தொல்லியல் துறை கீழடியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வின் வழியாக வெளிக்கொணரப்பட்டிருக்கும் விஷயங்கள் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
- இந்த நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தவொரு இறுதி முடிவுக்கும் நாம் வந்துவிட முடியாது; இதற்கு முன்பு மத்திய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட மூன்று கட்ட அகழாய்வுகளின் இறுதி முடிவுகளும் வெளிவர வேண்டும்; தமிழக அரசு நடத்திய ஐந்தாம் கட்ட அகழாய்வின் முடிவும் வெளிவர வேண்டும்.
- தொடர்ந்தும் இங்கு ஆய்வுகளை நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை மத்திய தொல்லியல் துறை உணர வேண்டும்.
- வெளிவரப்போகும் ஆய்வு முடிவுகள், காலக் கணிப்பை மேலும் வலுப்படுத்தும். ஒருவேளை, மாறுபாடுகள் இருந்தால், வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துவந்த மாற்றங்கள், இடப்பெயர்வு குறித்து மேலும் தொடர்ந்து ஆய்வுகளை நடத்த வேண்டியிருக்கும்.
- கீழடி அகழாய்வை தமிழக அரசு மேற்கொண்ட நாள் முதலே அதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனும், தொல்லியல் துறை ஆணையர் த.உதயசந்திரனும் காட்டிவரும் அக்கறையும் ஈடுபாடும் குறிப்பிடப்பட வேண்டியவை.
- “முதலில் நடந்த மூன்று கட்ட அகழாய்வுகளின் முடிவுகளும் விரைவில் வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சரான க.பாண்டியராஜன்.
- சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அவர், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரையும், கலாச்சாரத் துறை அமைச்சரையும் சந்தித்து கீழடியில் உலகத் தரத்தில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.
சிந்து சமவெளி – முக்கிய நகரங்கள்
- சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களான ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் அகழாய்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பே தென்தமிழகத்தில் தொல் பழங்காலத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்பட்டது என்றாலும், தொல்லியல் ஆய்வுகளில் தமிழகம் தொடர்ந்து கைவிடப்பட்ட நிலையில்தான் இருந்துவந்தது.
- அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், மற்ற நாடுகளுடன் இருந்த வாணிகத் தொடர்பை அறிந்துகொள்ள உதவியிருக்கின்றன என்றாலும், தமிழகத்தில் இது மிக விரிவான அளவில், ஏறக்குறைய 100 கிமீ சுற்றளவில் விரிந்து பரந்த வாழ்விடப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வு கீழடி மட்டுமே.
- தற்போது அகழாய்வுகள் நடந்து முடிந்திருப்பதும்கூட மிகச் சில சதுர கிமீ பரப்பளவில் மட்டுமே. ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் பாகிஸ்தானிடம் சென்றுவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான தொல்லியல் பகுதியாக கீழடியை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் பாண்டியராஜன். இந்தக் கோரிக்கைகள் முக்கியமானவை; இவற்றுக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்.
- தமிழக தொல்லியல் துறை கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாற்பது அகழாய்வுகளை நடத்தியிருந்தாலும் கீழடி அகழாய்வுக்குப் பிறகுதான் தமிழகத்தில் அனைவரும் வரலாற்று ஆய்வுகளின் மீது கவனம் குவித்திருக்கிறார்கள்.
- கீழடி ஆய்வுகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இதுகுறித்து வெளிவந்த செய்திகளும், ஆய்வில் கடைப்பிடிக்கப்பட்ட வெளிப்படைத்தன்மையுமே அதற்கான காரணம்.
- தமிழக மக்களின் கீழடி தொடர்பிலான கதையாடல்களும், அங்கு சென்று பார்த்துவருவதுமான வரலாற்றார்வமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. அதேசமயத்தில், கீழடியின் பெருமை தமிழர்களின் பெருமை மட்டுமல்ல; இந்தியாவின் வரலாற்றுப் பெருமையும்கூட என்பதையும் நாம் உணர வேண்டும்.
- இப்படியான அகழாய்வு முடிவுகள் நாம் கடந்துவந்திருக்கும் பாதையானது எவ்வளவு பன்மைத்துவத்தை உள்ளடக்கியது என்பதைத்தான் உணர்த்துகிறதே அன்றி, நம்மிடையே நிலவிவரும் இன, மொழி வெறி துவேஷங்களுக்கு வலுவூட்டும் எண்ணங்களை அல்ல என்ற புரிதல் நமக்கு வேண்டும். வரலாற்றை வரலாறாக அணுகுவோம், எல்லோருமே!
நன்றி: இந்து தமிழ் திசை (27-09-2019)