TNPSC Thervupettagam

கீழடிக்கு வயது 2600

September 20 , 2019 1939 days 1856 0

கீழடி ஆய்வின் முக்கியத்துவம்

  • தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும், கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் என்று இதுவரை கருதப்பட்டுவந்தது.
  • ஆனால், கீழடி பிராமி எழுத்துகள் சங்க காலத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகள் வயதானவை ஆக்குகின்றன. கங்கைச் சமவெளியின் இரண்டாம் நாகரிகத்துக்கு இணையான நாகரிகம் எனும் இடத்தைப் பெறும் கீழடியில் வாழ்ந்த மக்கள் அக்காலகட்டத்திலேயே ரோமுடன் வணிகத் தொடர்பில் இருந்ததற்கான சாத்தியங்களையும் இங்கு கிடைத்துள்ள பானை ஓடுகளின் கணிப்பு வயது வெளிப்படுத்துகிறது.

உறுதிப்படும் தமிழின் தொன்மை!

  • உலகின் முற்பட்ட நாகரிகங்களில் ஒன்று நமது என்பதையும், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து பார்க்க வேண்டும் என்பதையும் மேலும் உறுதிப்படுத்தும் களம் ஆகியிருக்கிறது கீழடி.
  • 2018-ல் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் மியாமியில் உள்ள, ‘பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வக’த்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.
  • இந்த மாதிரிகளின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘கீழடி கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கியிருக்க வேண்டும்’ என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
  • அதாவது, வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
  • மேலும், கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல்ரீதியான காலக் கணிப்புகள் தமிழ் பிராமியின் காலம் கி.மு. 6-ம் நூற்றாண்டு எனும் முடிவுக்கும் இட்டுச் செல்கிறது.
  • இதன் மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதும் உறுதியாகிறது. “தமிழின் தொன்மை குறித்து இதுவரை நிலவிவந்த சில கருதுகோள்களுக்கு இவை உறுதியான சான்றுகள் ஆகியுள்ளன” என்று இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார் தொல்லியல் அறிஞரான கா.இராஜன்.

தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடி

  • இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் காலத்தால் தொன்மையானது 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துவெளி வரிவடிவங்களாகும்.
  • சிந்துவெளி பண்பாடு மறைந்ததற்கும் தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு வரிவடிவம் இருந்தது. அவ்வரிவடிவத்தினை ஆய்வாளர்கள் குறியீடுகள் என்றும் கீறல்கள் என்றும் அழைக்கின்றனர்.
  • இவை சாதாரண கீறல்கள் அல்ல, சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் இவை இருக்க வேண்டும். சிந்துவெளி எழுத்துகள் போன்றே இவற்றைப் படித்தறிதலும் முழுமை பெறவில்லை.
  • செப்புக்காலப் பண்பாட்டிலும் அதன் தொடர்ச்சியாக பெருங்கற்காலப் பண்பாட்டில் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.
  • தமிழ் பிராமிக்கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் பெருங்கற்கால மற்றும் இரும்புக் கால மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் எழுத்து வடிவமாகும்.
  • கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு இத்தகைய கீறல்கள் பொறித்த 1,001 பானை ஓடுகள் இரும்புக் காலம் தொட்டு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் என்பதை உணர்த்துகின்றன.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்து காணக் கிடைக்கின்ற வரிவடிவம் தமிழ் பிராமி எழுத்து வடிவமாகும். இவ்வெழுத்தை தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • கீழடி அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • இவற்றில் குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற ஆட்பெயர்களும், முழுமைபெறாத சில எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் வரும் ‘ஆதன்’ என்ற பெயர் ‘அதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காலத்தால் முந்திய தமிழ் பிராமியில் உயிர்க்குறில் வடிவத்திலிருந்து உயிர்நெடிலை வேறுபடுத்திக்காட்ட ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதை கா.இராஜன் தமது நூலில் (Early Historic Writing Sytem: A Journey from Graffiti to Brahmi) தெளிவுபடுத்தியுள்ளார்.
  • இந்நிலை உயிர் எழுத்துகளில் மட்டுமே காணப்படுகிறது. எனவே, கீழடி தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் காலத்தால் முந்தியவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

கைவினைத் தொழில்களும் நுட்பமான தொழிலறிவும்

  • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள கனிமங்களை கண்டறியும் சோதனைக்காக இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவியறிவியல் துறைக்கு வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டன.
  • இவை உள்ளூரிலேயே வனையப்பட்டவை என்பதை உள்ளூர் மண் மாதிரியை ஒப்பீட்டாய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் கீழடியில் பானை வனையும் தொழிற்கூடம் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.
  • அடுத்து, கீழடியில் கிடைத்த கருப்பு – சிவப்பு நிறப் பானை ஓடுகள் சிலவற்றின் மாதிரிகள் நிறமாலையியல் பகுப்பாய்வு (Spectroscopic Analysis) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
  • அந்த ஆய்வு முடிவுகளின் மூலம், கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகளின் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாதுப் பொருளான ஹேமடைட் என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியையும் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது.
  • இக்கருப்பு-சிவப்பு நிறப் பானைகளை 1100°c வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
  • கீழடியில் கிடைத்த மட்பாண்டங்களின் தொழில்நுட்பம், தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 2-ம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்துள்ளன என இத்தாலியின் பைசா பல்கலைக்கழக அறிக்கையில் தெரியவருகிறது.

வியக்கவைக்கும் கட்டுமானத் தொழில்நுட்பம்

  • கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன.
  • இவை ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக் கிடைக்கின்றன.
  • அவற்றின் கலவை மற்றும் தன்மை குறித்து விரிவான அறிக்கை பெறப்பட்டுள்ளது. செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிலிக்காவும், பிணைப்புக் காரணியாக அதிகளவு (7%) சுண்ணாம்பு கலந்துள்ளதையும்; சுண்ணாம்புச் சாந்தில் 97% சுண்ணாம்பு கொண்டிருந்ததையும் உற்று நோக்கும்போது அக்காலகட்ட மக்கள் மிகத் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது.
  • கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களில் 13 மீட்டர் மீள சுவர் ஒன்றும் அடங்கும்.
  • இதில் பயன்படுத்தப்பட்ட சுட்ட கட்டுமானச் சுவர் செங்கல்களின் பரிமாணமும் சங்ககால பிற தொல்லியல் இடங்களில் கிடைக்கப் பெற்ற சுட்ட செங்கல்களின் பரிமாணமும் 1:4:6 என்ற விகிதாச்சாரத்தில் காணப்படுகின்றன.
  • இதன் தரைத்தளம் சன்னமான களிமண்ணைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. செங்கல் ஓடுகளால் ஆன மேற்கூரையும், சரிந்த நிலையில் காணப்படுகின்றது.
  • அத்துடன், மேற்கூரையை தரையுடன் பிணைக்க மரத்தூண் நட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருப்பதை இங்கு வெளிப்பட்ட இரும்பு ஆணிகள் உணர்த்துகின்றன.
  • மேலும், கூரை ஓடுகளின் தலைப்பகுதியில் காணப்படும் துளைகள், அவை சரியாமல் இருக்க கயிறு அல்லது நார் கொண்டு கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்க உதவுகிறது.
  • கூடுதல் சிறப்பாக கூரை ஓடுகளின் மீது விழும் மழை நீர் எளிதாகக் கீழே விழும் வகையில் விரல்களால் அழுந்த அழுத்தி ஓடை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • கீழடியில் வெளிப்பட்ட கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்ததில் இவற்றை சங்ககாலத்தில் நிலவிய வளர்ந்த சமூகத்தின் அடையாளங்களாகக் காணப்படுகிறது.

பன்னாட்டு வணிகத் தொடர்பு

  • கீழடி அகழாய்வுப் பகுதிகளில் வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இவை ரோம் நாட்டுத் தொழில்நுட்பச் சாயல் கொண்டு உள்ளூரில் வனையப்பட்டவை என்று கருதப்படுகிறது. இவ்வகை ரௌலட்டட் பானை ஓடுகள் அழகன்குளம் அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ரோம் நாட்டு அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைக்கப் பெற்றுள்ளது. இப்பானைகள் கி.மு. 2-ம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த பானைகளாகும்.
  • எனவே, ரோம் நாட்டைச் சார்ந்த வணிகர்கள் அல்லது அழகன்குளத்தில் தங்கியிருந்த ரோம் நாட்டைச் சார்ந்த வணிகர் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

நெசவு

  • இவ்வகழாய்வுகளில் நூல்களை நூற்கப் பயன்படும் தக்களிகள், துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் எலும்பிலான கூரிய முனைகள் கொண்ட வரைகோல்கள், தறியில் தொங்கவிடும் கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குண்டு, செம்பினாலான ஊசி, சுடுமண் பாத்திரம் போன்ற தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்திய தொல்லியல் துறை ஏற்கெனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் சாயத் தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் என்று கூறினர்.
  • தற்போதைய அகழாய்வுகளிலும் கிடைத்துள்ள நெசவு தொடர்பான தொல்பொருட்கள், இப்பகுதியில் நெசவுத் தொழில் சிறந்து விளங்கியதற்குச் சான்று பகர்கின்றன.

பொழுதுபோக்குகள்

  • இன்றும் இப்பகுதியில் ‘பாண்டி’ என்றும் பிற பகுதிகளில் ‘நொண்டி’ என்றும் ஆடப்பட்டுவரும் விளையாட்டில் பயன்படுத்தப்படும் வட்டச்சில்லுகள், தாய விளையாட்டுக்கான பகடைக்காய்கள், சதுரங்கக் காய்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
  • கீழடி சமூகத்தின் பொழுதுபோக்கு எப்படி இருந்தது என்பதை இவை சுட்டுகின்றன.

ஆபரணங்கள் சுட்டும் வளமை

  • தங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கல் மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள் என இங்கு கிடைத்துள்ள ஆபரணங்களும், நேர்த்தியாகச் செய்யப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களும் கீழடிச் சமூகத்தின் வளமையை வெளிப்படுத்துகின்றன.

சமய அடையாளங்கள்

  • கீழடி அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்றுள்ள சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள் மற்றும் தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோகத் தொல்பொருட்கள் கிடைத்துள்ளபோதிலும் வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் ஏதும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

முதன்மைத் தொழிலான வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்

  • கீழடியில் வெளிக்கொணரப்பட்ட 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள் புனே டெக்கான் ஆய்வகத்தில் பகுப்பாய்வின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டன. திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்கள் என்று அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இப்பகுப்பாய்வு முடிவுகள் மூலம் சங்காலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு, கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவருகிறது.

ஆய்வுகளின் வெளிச்சத்தில்...

  • மத்திய தொல்லியல் துறை 2014 தொடங்கி 2017 வரை கீழடியில் மூன்று கட்டங்களாக அகழாய்வுகளை நடத்தியது. தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல் துறை 2017-18, 2018-19 ஆண்டுகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்தியது.
  • நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள் சர்வதேச ஆய்வகங்களுக்கும் தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன.
  • ஆய்வகச் சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள் தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரிபார்க்கப்பட்டு ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
  • கீழடி மட்டுமின்றி தமிழக தொல்லியல் துறை கடந்த அரை நூற்றாண்டில் நடத்திய 40 அகழாய்வுகளையும் இந்த அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது.
  • தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளை ஒப்பீடு செய்வதோடு சிந்து வெளியில் கண்டறிப்பட்ட எழுத்துகளுக்கும் கீழடி எழுத்துகளுக்கும் இடையிலான ஒப்புமைகளையும் இந்த வெளியீடு எடுத்துக்காட்டுகிறது.
  • கீழடி பண்பாடு 2600 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதோடு, கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற முக்கியமான செய்தியை வெளிக்கொணர்ந்து, தமிழர்களின் நகர நாகரிகத்தை மேலும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னகர்த்தியிருக்கும் ஆய்வின் முடிவைப் பகிரும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு ஆவணம்.
  • ஏற்கெனவே, மத்திய அரசால் நடத்தப்பட்ட மூன்று கட்ட அகழாய்வுகளின் இறுதி அறிக்கைகளும் வெளிவந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் பழங்காலத்திய வரலாற்றில் தமிழகத்துக்குத் தனிச்சிறப்பான இடம் கிடைக்கும்.
  • இப்பணிக்காக தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள்.

 

நன்றி : தமிழ் திசை இந்து (20-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories