TNPSC Thervupettagam

கு.அழகிரிசாமியும் பெரியாரும்

June 24 , 2023 376 days 461 0
  • எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு இது. 1923 செப்டம்பர் 23இல் பிறந்து தம் நாற்பத்தேழாம் வயதில் 5 ஜூலை 1970இல் மறைந்த கு.அழகிரிசாமி சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரைகள், பதிப்பு எனக் கணிசமான இலக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளார். பல துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவரது சிறுகதைகளுக்கு வாசகரிடத்து இருக்கும் செல்வாக்கு தனிதான்.
  • அழகிரிசாமி எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை 105. அவற்றை முழுமையாகத் தொகுத்துப் பழ.அதியமான் பதிப்பித்திருக்கிறார். கால வரிசையில் கதைகளைக் கொடுத்துள்ளதோடு நூலாக வந்த சிறுகதைத் தொகுப்புகள் முன்னுரைகள், பதிப்புரைகள், தம் கதைகளைப் பற்றிக் கு.அழகிரிசாமி எழுதிய கட்டுரை ஒன்று, தகவல் பட்டியல்கள், வாழ்க்கைக் குறிப்பு என அவசியமான பின்னிணைப்புகள் பலவற்றையும் சேர்த்துள்ளார். நவீன இலக்கியப் பதிப்பு பற்றிய பார்வையுடன் கடுமையாக உழைத்து இப்பதிப்பை அவர் உருவாக்கியுள்ளார். காலச்சுவடு பதிப்பக வெளியீடு.

எனது மறுவாசிப்பு

  • கு.அழகிரிசாமியின் பத்தொன்பதாம் வயதில் முதல் கதை (‘பிரசண்ட விகடன்’, 1942) வெளியாகியுள்ளது. மிக இளம் வயதிலேயே எழுத்துக்குள் வந்துவிட்ட அவர் எழுதிய கதைகளை இப்படிப்பட்டவை என்று சட்டென வகைப்படுத்திவிட இயலாது. தென்தமிழ்நாட்டுக் கிராம வாழ்வை மையப்படுத்திச் சில கதைகளை எழுதியுள்ளார். அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய எழுத்தர்களின் குடும்ப வாழ்வைச் சித்திரிக்கும் ‘குமாஸ்தா கதை’களை எழுதியிருக்கிறார். நடுத்தரக் குடும்பக் கதைகள் பல. வெளிநாட்டுக்குக் கூலிகளாகச் சென்று துயருற்ற மனிதர்கள் குறித்தும் கதைகள் உள்ளன. புராணக் கதைகளை மறுவாசிப்புச் செய்யும் கதைகளும் உண்டு. பெண்களையும் குழந்தைகளையும் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு அவர் எழுதிய பல கதைகள் மிகவும் பிரபலமானவை; இன்றும் பலருக்கு ஆதர்சமாக உள்ளவை.
  • அழகிரிசாமி நூற்றாண்டு தொடங்கிய நாளன்று சென்னையில் நடைபெற்ற ஆவணப்படத் திரையிடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினேன். அப்போதிருந்து அவர் சிறுகதைகளைத் தொடர்ந்து மறுவாசிப்புக்கு உட்படுத்திவருகிறேன். சாதிப் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் சகஜமாகப் பயன்படுத்தி அவர் காலத்தில் எழுத முடிந்திருக்கிறது என்பதைக் காணும்போது பெருமூச்சு வருகிறது. ஊர்களையும் தெருக்களையும் விரிவாக வருணிக்கவும் செய்கிறார். இன்று வழக்கிழந்துபோன பல நடைமுறைகள் அவர் கதைகளில் காணக் கிடைக்கின்றன. அன்றைய விழுமியங்களில் சிக்கி உணர்ச்சிக்கு ஆளாகும் விதவிதமான மனிதர்களைக் கண்டு வியக்க முடிகிறது.
  • ஒவ்வொரு கதைக்குமான பின்னணி பற்றிச் சில நிமிடங்களேனும் சிந்திக்காமல் நகர முடியவில்லை. ஒன்றிரண்டு வித்தியாசமான கதைகளின் பின்னணி பிடிபடும்போது வியப்பாக இருக்கிறது. அப்படியான கதைதான் 1944ஆம் ஆண்டு ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளியான ‘மளிகைக்கடை சரசுவதி.’ இக்கதைக்கு அவர் கொடுத்துள்ள முன்குறிப்பும் கதைக்குள் வரும் பெயர் விளக்கமும் எனக்குத் தந்தை பெரியாரின் கட்டுரை ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்தன. அக்காலகட்டத்துத் திராவிட இயக்கச் செயல்பாடுகளையும் பின்னணியில் வைத்துப் பார்க்க முடிந்தது.

எள்ளல் நிறைந்த இரங்கல் கட்டுரை

  • பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மாள் 1936ஆம் ஆண்டு தம் 95ஆம் வயதில் மறைந்தார். அதை ஒட்டிப் பெரியார் எழுதிய ‘சின்னத் தாயம்மாள் முடிவு’ என்னும் கட்டுரை மிகவும் பிரபலமானது. இரங்கல் கட்டுரையை வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே வாசிக்க முடியுமா? பெரியாரின் அந்தக் கட்டுரையைச் சிரிக்காமல் வாசிக்க இயலாது. அது “எனக்கு அவர் முடிவெய்தியது பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்தம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கலியாணம் செய்து வைத்துவிட்டுச் சாக வேண்டுமென்பதே. எனது கோரிக்கை – எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்தி விட வேண்டுமென்பதே. என் இஷ்டம் நிறைவேறியது. மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி!” (ஈ.வெ.ரா. பெரியார் சிந்தனைகள், தொகுதி 3, ப.1922) என்று முடியும். ஓர் இரங்கல் கட்டுரையை உண்மையான உணர்வோடு முடிக்கும் தூய பகுத்தறிவு மனம் கொண்டவர் பெரியார்.
  • அதில்தான் தம் பெற்றோரின் வாழ்வைப் பற்றி விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தோம் என்று துயரத்தைப் பிழிந்து எழுதும் வாழ்க்கை வரலாறுகள் ஏராளம் உள்ளன. ‘கஷ்டப்பட்டு முன்னேறினோம்’ என்று சொல்வதுதான் பெருமை என்பது பொதுமனக் கருத்து. அதைப் பெரியாரிடம் எதிர்பார்க்கக் கூடாது. அவரது பெற்றோரும் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்தான். அவர்கள் முன்னேற்றத்தைச் சுய எள்ளலுடன் பெரியார் பதிவுசெய்துள்ளார். வறுமையான வாழ்வில் இருந்தபோது அவர் தந்தை வெங்கட்ட நாயக்கர் கல்தச்சு (கல்லுடைத்தல்?) வேலை செய்தார். பிறகு மாட்டுவண்டி ஓட்டினார்; தட்டுக்கடை வைத்து நடத்தினார்; மளிகைக்கடைக்காரர் ஆனார்; மண்டி தொடங்கினார். அவர் வேலைகள் மாற மாறப் பொருளாதார நிலையும் உயர்ந்துகொண்டே வந்தது. ஈரோட்டில் செல்வாக்குள்ள பெரும் பணக்காரரானார்.
  • இந்த மாற்றத்தை மிகுந்த எள்ளலோடு பெரியார் குறிப்பிடுகிறார். முதலில் அவர் தந்தை பெயர் ‘கல்தச்சு வெங்கட்டன்’ என்று வழங்கியதாம். பிறகு ‘வண்டிக்கார வெங்கட்ட நாயக்கன்’ ஆகியதாம். அடுத்துத் ‘தட்டுக்கடை வெங்கட்டன்’ என்றானதாம். பின்னர் ‘மளிகைக்கடை வெங்கட்ட நாயக்கர்’ என அழைத்தனராம். அப்படியே ‘மண்டி வெங்கட்ட நாயக்கர்’ ஆனாராம். மேலும் பொருளாதார நிலை உயர்ந்து வர வர ‘வெங்கட்ட நாயக்கர்’ என்னும் பெயரே போய் வெறும் ‘நாயக்கர்’ ஆகிவிட்டாராம். சின்னத்தாயம்மாள் பெயர் ‘நாயக்கம்மாள்’ என்றானதாம். பொருளாதார நிலைக்கேற்ப ஒருவர் பெயர் மாறும் உலகியல் வழக்கை இப்படிச் சொல்கிறார் பெரியார்.

ஒரு கதையும் ஒரு கட்டுரையும்

  • இந்தக் கட்டுரையின் தாக்கம் என்று கூறத்தக்க வகையிலான கு.அழகிரிசாமியின் கதை ‘மளிகைக்கடை சரசுவதி’யில் வரும் பாத்திரத்தின் பெயர் ‘வெங்கடாசலம் பிள்ளை.’ இளவயதில் அவர் மளிகைக்கடை ஒன்றில் வேலை செய்கிறார். மளிகைக்கடை உரிமையாளர் அதை மூடுகிறார். வாராக் கடன்களை வசூலிப்பதற்காக வெங்கடாசலம் பிள்ளையை மட்டும் கொஞ்ச நாள் வேலைக்கு வைத்துக்கொள்கிறார். அந்தக் கடனை வசூலிப்பது ‘கல்லிலே நார் உரிக்கும்’ வேலையாம். பிறகு கோவில்பட்டிக்கு வந்து அங்கே ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்கிறார். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதுதான்.
  • கடையில் வேலை செய்வோர் அவரை எப்படி அழைப்பது எனக் குழம்புகிறார்கள். “பிராமணாளாயிருந்தால் ‘வெங்கு’ என்று அழைத்துவிடலாம். கொஞ்சம் கண்ணியமாகவும் இருக்கும்” என்கிறார் கு.அழகிரிசாமி. கடைக் கணக்குப் பிள்ளை விளையாட்டாக ‘வெங்குப் பிள்ளை’ என்று அழைக்கிறார். அதே வழக்காகிக் கடைப் பையன்கள் எல்லாம் ‘வெங்குப் பிள்ளை’ என்றே கூப்பிடுகிறார்கள். கடை முதலாளிக்கு ஒரு பிரச்சினை. ‘நேற்றுத் தலையெடுத்த பயலுக்குப் பிள்ளைப் பட்டம் வேறா?’ என்று தோன்றுகிறது. ஆகவே, இகழ்ச்சியாக ‘வெங்கன்’ என்று அழைக்கிறார். ‘வெங்கன் என்ற சிறப்புப் பெயருக்கும் தமிழ்ப் பாஷையில் அர்த்தம் உண்டு என்பது பின்னால்தான் தெரிய வந்தது’ என்று எழுதும் அழகிரிசாமி அந்த அர்த்தம் என்னவென்று சொல்லவில்லை. தமிழ்ப் பேரகராதி ‘வெங்கன்’, ‘வெங்கம்’ ஆகிய சொற்களுக்குத் ‘தரித்திரன்’ என்று பொருள் தருகிறது. வழக்கில் ‘வெங்கம்பயல்’, ‘வெங்கப்பயல்’ என வசைச்சொற்கள் இருக்கின்றன. அந்தப் பொருளைத்தான் அழகிரிசாமி குறிப்பால் உணர்த்துகிறார்.
  • மளிகைக்கடையில் வேலை பார்த்த வெங்கடாசலம் பிள்ளை தனியாக வெற்றிலை பாக்குக் கடை வைக்கிறார். பிறகு மளிகைக் கடை வைக்கிறார். அதன் பிறகு அவருக்கு ஏற்றம்தான். அவர் வளர்ச்சி நிலையை வெங்கன், வெங்குப் பிள்ளை, வெங்கடாசலம் பிள்ளை, வெங்கடாஜலம் பிள்ளை எனப் பெயரைக் கொண்டு அழகிரிசாமி விவரிக்கிறார். அந்த ‘வெங்கடாஜலம் பிள்ளை’ சரஸ்வதி பூஜை கொண்டாடுவதைக் கதை விவரிக்கிறது. பூஜையின் முடிவில் ‘சரசுவதியின் மஞ்சள் முகத்தைப் பிசைந்து உருண்டையாக்கிக் கிணற்றில் போடச் செய்தார்’ வெங்கடாஜலம் பிள்ளை.

அழகிரிசாமியின் எதிர்வினை

  • இயல்பாகவே சரஸ்வதி என்னும் கடவுள் கலைகளுக்கான குறியீடு. வெங்கடாஜலம் பிள்ளையிடம் கலை என்ன பாடு படுகிறது என்பதே கதையின் மையம். அவர் கொண்டாடும் சரஸ்வதி பூஜையைக் கேலியுடன் விவரிக்கிறது கதை. கதையின் தொடக்கத்தில் கொடுத்துள்ள குறிப்பு இது:
  • “கலைக்கும் இந்த ‘வெங்குப் பிள்ளை’ கூட்டத்துக்கும் உள்ள சம்பந்தம் ‘அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும்’ உள்ள சம்பந்தம்தான். ஆனால், ஒரு தேசத்தின் கலை வளர்ச்சி இந்தக் கூட்டத்தின் கையிலகப்பட்டிருப்பதை நினைக்க எவ்வளவு பயமாக இருக்கிறது” (ப.140)
  • கதைத் தொடக்கப் பகுதியில் ஒருபத்தி இது:
  • “சமூகத்தில் எதையும் நல்லது இது, கெட்டது இது என்று நியாயமாகவோ நியாயமில்லாமலோ நிர்ணயிக்கும் உரிமை பெற்ற ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தில் வெங்குப் பிள்ளையும் ஒரு மெம்பர். அவர்கள் நிர்ணயிக்கும் அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் அந்தக் கூட்டத்திற்கு அக்கரையோ கவலையோ இல்லாமலும் இருக்கலாம். அது இன்னது என்று புரியாத நிலையில் அந்தக் கூட்டம் இருந்தாலும் இருக்கும். ஆனால் அதைப் பற்றிய குணதோஷங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும் இந்த வெங்குப் பிள்ளை கூட்டத்துக்கும் கிடைத்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆனால் கலை வளர்ச்சிக்கு ஆதரவு தேட இப்படிப்பட்ட ‘கலா ரசிகர்’களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.” 

கதையின் முடிவுப் பகுதி இது:

  • “சமூகத்தில் தோட்டி முதல் தொண்டமான் வரை ஒவ்வொரு ஸ்தானத்திலும் உட்கார்ந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட பல்லாயிரம் ‘வெங்குப் பிள்ளை’களின் கைகளில்தான் நாட்டின் கலை வளர்ச்சி, ஏன் சரசுவதியின் தலையெழுத்தே அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்கிறீர்களா?” 
  • கதையில் வரும் ‘வெங்கடாசலம் பிள்ளை’ என்னும் பெயரைப் பெரியாரின் தந்தை பெயரான ‘வெங்கட்ட நாயக்கர்’ என்பதற்கு அப்படியே பொருத்தலாம். ‘வெங்கட்டன்’ தொடங்கி ‘நாயக்கர்’ வரை அவரது பெயர் எப்படியெல்லாம் மாறிவந்தது எனப் பெரியார் கிண்டல் செய்கிறாரோ அதை அப்படியே எடுத்துக்கொண்டு காத்திரமாகப் பயன்படுத்துகிறார் அழகிரிசாமி. கிட்டத்தட்ட அதே வகையில் ‘வெங்கன்’ முதல் ‘வெங்கடாஜலம் பிள்ளை’ வரை பெயர் மாறிவருகிறது. ‘கல்தச்சு வெங்கட்டன்’ என்று கல்வேலை செய்யும் காலத்தில் தன் தந்தை பெயர் விளங்கிய விதத்தைப் பெரியார் குறிப்பிடுகிறார். மளிகைக் கடைக் கடன்களை வசூலிக்கும் சிரமத்தைக் ‘கல்லில் நார் உரிக்கும் வேலை’ என்று கு.அழகிரிசாமி ஒற்றை மேற்கோளில் குறிப்பிடுகிறார். இவ்வாறு ஒப்பிட்டுக் காணும்போது பெரியாரின் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு, அவர் தந்தையின் பெயரைக் குறியீடாக வைத்து அழகிரிசாமி இந்தக் கதையை எழுதியிருக்கிறார் என்பது வெளிப்படை. 
  • ‘வெங்குப் பிள்ளை கூட்டம்’, ‘இந்தக் கூட்டம்’ என்றெல்லாம் கோபத்தோடு அழகிரிசாமி குறிப்பிடுவது பெரியாரையும் அவர் தொண்டர்களையும்தான். அவர்கள் கையில் ‘கலை வளர்ச்சி’ அகப்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிறார். இந்தக் கதை 1944ஆம் ஆண்டு ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளியாகியுள்ளது. 1943இல் தொடங்கி நான்கைந்து ஆண்டு காலம் சுயமரியாதை இயக்கம் கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றை எரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தது. அவற்றை ஏன் எரிக்க வேண்டும் எனப் பெரியார் பேசினார். பல தமிழறிஞர்களுடன் அறிஞர் அண்ணா மேடையில் விவாதம் நடத்தினார். அண்ணா நடத்திய விவாதத் தொகுப்பு ‘தீ பரவட்டும்’ (முதற்பதிப்பு, 1943) என நூலாக வெளியாயிற்று. ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈழத்தடிகள் ஆகியோருடன் 1943ஆம் ஆண்டில் நடத்திய மேடை விவாதங்களின் தொகுப்பு இந்நூல்.

பெரியாரின் கிளர்ச்சி

  • அதே காலகட்டத்தில் ‘திராவிட நாடு’ இதழில் புனைபெயரில் ‘கம்பரசம்’ எழுதினார் அண்ணா. அது பின்னர் 1947ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தது. அந்நூலின் முன்னுரையில் அண்ணா “தமிழ்நாட்டிலே இங்ஙனம் ஓர் உரையாடல் சற்றுக் காரசாரமாகக் கிளம்பிற்று 1943ஆம் ஆண்டும் - அதற்குப் பிறகும். அந்த உரையாடலுக்கான காரணமாக இருந்தது, கம்ப ராமாயணம் பெரியபுராணம் முதலிய ஏடுகள் தமிழரிடையே ஆரியத்தைப் புகுத்திக் கேடு விளைவித்தன, ஆகவே அவைகளைக் கொளுத்துவதன் மூலம், தமிழர் தமக்கு ஆரியத்தின் மீதுள்ள வெறுப்புணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று பெரியார் துவக்கிய கிளர்ச்சியாகும்” என்று குறிப்பிடுகிறார்.
  • ராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் கடுமையாக விமர்சித்துப் பெரியாரும் அண்ணாவும் பேசினர்; எழுதினர். அதை எதிர்கொள்ளத் தமிழறிஞர்கள் ‘கவிதைச் சுவை’ என்னும் அழகியல் கோட்பாட்டை முன்வைத்து அக்காப்பியங்களைப் போற்றி எழுதினர்; பேசினர். இந்த விவாதம் பக்தி, பக்தி இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரையும் கடுங்கோபம் கொள்ளச் செய்தது.
  • பெரியார் முன்னெடுத்த எரிப்புக் கிளர்ச்சிக்கு அவர்கள் ஏதேனும் ஒருவிதத்தில் எதிர்வினையாற்றினர். ஊர்தோறும் ‘கம்பன் கழகம்’ உருவானதையும் இந்தப் பின்னணியில் வைத்துக் காணலாம். கம்பராமாயணப் பதிப்புகள் பெருக்கம், கம்பராமாயண நய நூல்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கும் தூண்டுதலாகப் பெரியாரின் கிளர்ச்சி காரணமாக இருந்தது என்றே சொல்லலாம்.

அழகிரிசாமிக்குப் பிடித்த கம்பராமாயணம்

  • கம்பராமாயணத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர் கு.அழகிரிசாமி. சிறுவயதிலேயே தம் தாயார் மூலமாகக் கம்பராமாயணப் பாடல்களைக் கேட்டு மனனம் செய்தவர் அவர். பின்னாளில் அவர் எழுதிய ‘கவிச் சக்கரவர்த்தி’ நாடகத்தை “என் சிறுவயதிலேயே எனக்குக் கம்பர் கவிதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அவற்றில் நான் ஈடுபாடு கொள்ளும்படி செய்த என் அன்னைக்கு” எனச் சமர்ப்பணம் செய்துள்ளார். “குழந்தைகளை அடிக்க மாட்டேன், கம்பராமாயணத்தின் மீது சத்தியம்” என்று தம் நாட்குறிப்பில் எழுதியிருந்தார்.
  • கம்பராமாயணத்தின் ஐந்து காண்டங்களை அவர் பதிப்பித்துள்ளார். ‘கவிச் சக்கரவர்த்தி’ என்னும் நாடக நூலையும் எழுதினார். கு.அழகிரிசாமிக்குச் சிறுவயதில் தொடங்கிய கம்பராமாயண ஈடுபாடு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. இவ்வாறு கம்பராமாயணத்தில் பற்றுக் கொண்ட கு.அழகிரிசாமி அதை எரிக்க வேண்டும் என்று பேசிய ‘வெங்குப் பிள்ளை கூட்ட’த்திற்குச் செய்த எதிர்வினைதான் இக்கதை.
  • கதையை எழுதியபோது கு.அழகிரிசாமிக்கு இருபத்தொரு வயது. 28.07.1936 அன்று இறந்த தம் தாயாரின் மறைவுக்குப் பெரியார் எழுதிய இரங்கல் கட்டுரை 02.08.1936 அன்று ‘குடியரசு’ நாளிதழில் வெளியாயிற்று. அப்போது கு.அழகிரிசாமிக்குப் பதின்மூன்று வயது. அப்போதே பெரியாரின் கட்டுரையைக் கு.அழகிரிசாமி வாசித்திருக்கக்கூடும். பின்னர் பத்திரிகைத் துறை வேலைக்கு வந்த பிறகு வாசித்திருக்கலாம்.
  • பெரியாரின் எழுத்துக்கள் அப்போது சிறு சிறு நூல்களாக வெளியாயின. அவற்றில் இக்கட்டுரையும் இருந்திருக்கலாம். மேலும் பெரியார் எழுதியவற்றில் அது பலரும் நன்றாக அறிந்திருந்த கட்டுரை. ஆகவே, அவர் வாசிப்புக்கு எப்படியோ அக்கட்டுரை வந்திருக்கக் கூடும். கம்பராமாயண எரிப்புப் பிரச்சினை பரவலானபோது நேரடியாக இல்லாமல், கதை வடிவில், பெரியாரின் தந்தை பெயரை வைத்துத் தம் எதிர்வினையை அவர் ஆற்றியிருக்கிறார். அந்த அளவு கம்பராமாயண ஈடுபாட்டாளர் கு.அழகிரிசாமி. 

நன்றி: அருஞ்சொல் (24  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories