- உலக செஸ் சாம்பியனுடன் மோதுவதற்கான வீரரைத் தேர்வு செய்யும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்ம சென்னைப் பையன் டி.குகேஷ் தேர்வாகி சாதனை படைத்திருக்கிறார். செஸ் தொடர்களிலேயே மிகவும் சவாலானதாகக் கருதப்படும் ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் வென்றதன் மூலம் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். உலகிலேயே மிகவும் இளம் வயதில் இத்தொடரில் குகேஷ் வென்றிருப்பது இன்னொரு சாதனை. கடந்த காலத்தில் நம்பர் ஒன் செஸ் வீரருக்குத் தண்ணி காட்டியிருக்கும் குகேஷ், ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் சாதித்ததன் மூலம் உலக செஸ்ஸின் புகழ் ஏணியில் ஏறியிருக்கிறார்.
- ‘கேண்டிடேட்ஸ்’ சவால்கள்: செஸ் விளையாட்டின் மாரத்தான் தொடர் என்றழைக்கப்படுகிறது ஃபிடே ‘கேண்டிடேட்ஸ்’. இந்தத் தொடரில் உலகின் தலைச் சிறந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஓபன் பிரிவில் 8 வீரர்கள், மகளிர் பிரிவில் 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தத் தொடரில் மகுடம் சூடுவோர்தான் உலக செஸ் சாம்பியனுடன் நேரடியாகமோதும் வாய்ப்பைப் பெறுவார். அதனாலேயே, ‘கேண்டிடேட்ஸ்’ மிகவும் மதிப்புவாய்ந்த தொடராகக் கருதப்படுகிறது.
- ‘கேண்டிடேட்ஸ்’ தொடருக்குத் தேர்ச்சிப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. இத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக சில முக்கிய செஸ் தொடர்களில் பங்கேற்று, அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஃபிடே புள்ளிகளைச் சேர்த்து ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ என்கிற நிலையை எட்டினால் மட்டுமே ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் விளையாட முடியும். கடந்த காலத்தில் இந்தியாவிலிருந்து செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே ‘கேண்டிடேட்ஸ்’ ஓபன் பிரிவில் விளையாடியிருக்கிறார். இந்த முறை பிரக்ஞானந்தா (18 வயது), குகேஷ் (17), விதித் குஜ்ராத்தி (29) என மூவர் தேர்வு பெற்றிருந்தனர். மகளிர் பிரிவில் வைஷாலி (22), கொனேரு ஹம்பி (37) ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் ஹம்பியைத் தவிர மற்ற நால்வருக்கும் இதுதான் முதல் ’கேண்டிடேட்ஸ்’ தொடர்.
- கனடா தலைநகர் டொரண்டோவில் மூன்று வாரங்கள் நடைபெற்ற இத்தொடரில் ஒவ்வொரு வீரரும் 7 பேரை எதிர்த்து தலா இரண்டு முறை விளையாடினர். ‘கேண்டிடேட்ஸ்’ தொடரைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி மட்டுமே முக்கியம். வாழ்வா, சாவா என்கிற ரீதியில்தான் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு படியைப் போன்றது. ஒவ்வொன்றையும் வெற்றிகரமாகக் கடந்தால் உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தகுதிபெறலாம். ஆனால், பட்டியலில் இரண்டாவது இடத்தையோ கடைசி இடத்தையோ எதைப் பெற்றாலும் அது தோல்விதான்!
- ’கூல்’ குகேஷ்: மூளையைக் கசக்கி விளையாடும் செஸ் விளையாட்டில் ஒரு வீரரின் வியூகம்தான் வெற்றியைத் தேடித்தரும். அந்த வகையில் ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் ஒவ்வொருவரும் சிறந்தவர்கள் என்பதால் ஒவ்வொரு வீரருக்கும் ஏற்ப வியூகத்தை வகுக்க வேண்டும். வெள்ளைக் காயோடு 7 போட்டிகளும், கறுப்புக் காயோடு 7 போட்டிகளும் விளையாட வேண்டும் என்பதால், முதல் முறையாக ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் விளையாடும் வீரருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்ளக்கூடும். ஆனால், தன்னைவிட வயதில் மூத்த, அனுபவமிக்க வீரர்களையும் தனது அமைதி, பதற்றமின்மை, கூர்மையான கவனம், மதி வியூகம் ஆகியவற்றால் வென்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் டி.குகேஷ். இத்தொடரில் அவர் பங்கேற்ற போட்டிகளில் ஐந்தில் வெற்றி, ஒரு தோல்வி, எட்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடித்ததன் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து பட்டத்தைத் தன்வசப்படுத்தினார் குகேஷ்.
- 2024 ‘கேண்டிடேட்ஸ்’ தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியர் ஒருவரால் கைப்பற்ற முடியாது என்றே கணிப்புகள் வெளியாயின. ஏனெனில், முன்னணி வீரர்களான ரஷ்யாவின் இயன் நெபோம்னியாஷி, அமெரிக்காவின் ஃபேபியானா கருவானா, நிகாரு நாகமுரா ஆகியோரே வெல்லக்கூடும் என்று கணிப்புகள் கூறின. ஆனால், இந்தக் கணிப்புகளைத் தவிடு பொடியாக்கி வெற்றி மாலையைச் சூடியிருக்கிறார் குகேஷ்.
- உலக சாம்பியன்ஷிப் போட்டி: ஃபிடே ‘கேண்டிடேட்ஸ்’ தொடரை வென்றதன் மூலம் குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார். 17 வயதிலேயே இந்தத் தகுதியை எட்டி உலக சாம்பியன்ஷிப் ‘சேலஞ்சர்’ஆக போட்டியிட இருக்கும் குகேஷ், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் 31 வயதான டிங் லிரனை எதிர்கொள்ள உள்ளார். இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி முதல் முறையாக ஒரு ஐரோப்பியர் அல்லாத போட்டியாகவும் ஆசியர்களே மோதும் போட்டியாகவும் அமைய உள்ளதால் அதிக கவனம் பெறுகிறது. கடைசியாக 2012இல் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன்ஷிப் பட்டம்வென்றிருந்தார். அவருக்குப் பிறகு குகேஷ் மகத்தான சாதனையைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- குகேஷின் ‘கேண்டிடேட்ஸ்’ வெற்றியை, ‘டொரண்டோவில் இந்தியாவின் பூகம்பம்’ என்று செஸ் உலகின் சகாப்தம் கேரி காஸ்ப்ரோவ் வர்ணித்திருக்கிறார். அந்தப் பூகம்பம் சீன வீரருக்கு எதிராகவும் தொடரட்டும். வாழ்த்துகள் குகேஷ்!
- குகேஷின் இந்தச் சாதனையில் அவரது பெற்றோருக்கும், பயிற்சியாளர்களுக்கும் முக்கிய பங்கு இல்லாமல் இல்லை. ‘கேண்டிடேட்ஸ்’, உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப் போன்ற முக்கியத் தொடர்களுக்கு ஆயத்தமாவதற்கான பயிற்சிகளை வழங்குபவர் ‘செகண்ட்’ என்றழைக்கப்படுகிறார். விஸ்வநாதன் ஆனந்த் நிர்வகித்து வரும் ‘வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடெமி’யில் குகேஷ் மட்டுமல்ல பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கும் ‘கேண்டிடேட்ஸ்’ தொடருக்கு ஆயுத்தமாவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த அகாடெமியைச் சேர்ந்த முன்னாள் செஸ் கிராண்ட் மாஸ்டரான போலந்தைச் சேர்ந்த செகோஸ் கயெஸ்கி, குகேஷின் ‘செகண்ட்’ ஆக டொரண்டோவுக்குப் பயணித்திருக்கிறார். உலக சாம்பியன்ஷிப் தொடரின்போது ஆனந்துக்கும் இவர் ‘செகண்ட்’ ஆகப் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 04 – 2024)