குடிநீருக்குக் குறைந்தபட்ச உத்தரவாதம்: வரவேற்கத்தக்க நடவடிக்கை!
- கிராமப்புறக் குடும்பங்களுக்குக் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் வசதியை உறுதிசெய்கிற ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தால் இதுவரை 79.74 சதவீதக் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன என அண்மையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் கிராமப்புறங்களில் வாழ்ந்துவரும் சூழலில், அவர்களுக்குக் குடிநீர் கிடைக்க வழிவகை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- குடும்பத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவது பெண்களின் அன்றாட வேலைகளில் முதன்மையானதாக உள்ளது என்றே கூறலாம். கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சினை இன்னும் அதிகம். இந்த நிலையில்தான், கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் பிரத்யேகக் குடிநீர்க் குழாய் இணைப்பு வசதியை அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் பிரதமர் மோடி ஆகஸ்ட் 15, 2019இல் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது 3.26 கோடி குடும்பங்களே இந்த வசதியைப் பெற்றிருந்தன.
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் முழுமையான செயல்பாட்டுத் திறனுடன் கூடிய குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்குவது, வறட்சியான பகுதிகளிலும் பாலைவனப் பகுதிகளிலும், காந்திய நெறிமுறைகளின்படி அடிப்படை வசதிகளைச் செயல்படுத்தும் ‘சன்சத் ஆதர்ஷ்’ கிராமமாக அங்கீகரிக்கப்பட்ட பஞ்சாயத்துகளிலும் இந்த வசதியை நடைமுறைப்படுத்துதல், கிராமப்புறப் பள்ளிகள் - அங்கன்வாடி மையங்கள் - சமுதாயக் கூடங்கள் போன்றவற்றுக்கு இதை உறுதிப்படுத்துதல் உள்படப் பல இலக்குகள் ஜல் ஜீவன் திட்டத்துக்கு இருந்தன. தொடக்கத்தில் இதற்கான முதலீடு 3.60 லட்சம் கோடி ரூபாய். ஒரு மாநிலத்துக்கான முதலீட்டில் பாதியை மத்திய அரசு வழங்குகிறது.
- ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 55 லிட்டர் குடிக்கத் தகுந்த நீர் கிடைக்கும் வசதியே முழுமையான செயல்பாட்டுத் திறனுடன் கூடிய குழாய் இணைப்பு எனப்படுகிறது. குடிக்க மட்டுமல்லாது, சமையலுக்கும் பாத்திரம் கழுவவும் துணி துவைக்கவும் பயன்படும் நீரை இது குறிக்கிறது. ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 56 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஜனவரி, 2023இல் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
- அமைச்சரவை நடத்திய கணக்கெடுப்பில், முழுமையான செயல்பாட்டுத் திறனுடன் கூடிய குழாய் இணைப்பு வசதியைத் தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 80 சதவீதக் குடும்பங்கள் பெற்றுவிட்டதாகவும் கேரளம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் போன்றவற்றிலும் திரிபுரா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் 50 சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்கள் பெற்றிருப்பதாகவும் தெரியவந்தது.
- இத்திட்டத்தின்படி, குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் சேவையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 31 வரை நாடு முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வகங்களின் வலைப்பின்னல் மூலம் 66.32 லட்சம் குடிநீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
- குடிநீரின் தரத்தைச் சோதிக்கும் பொறுப்பு 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு போன்ற வழிமுறைகள் மூலம் நீரைப் பாதுகாக்கும் பணிகளிலும் பெண்கள் ஈடுபடுவது இந்தத் திட்டத்தின் இன்னொரு சிறப்பு.
- தமிழகத்தில் 2028 வரை இத்திட்டத்தை நீட்டிக்கத் தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
- இத்திட்டம் குறித்த காலத்துக்குள் இலக்கை முழுமையாக அடைய முடியவில்லை என்பது உண்மைதான். இதைச் செயல்படுத்துவதில் தனியார் நிறுவனங்கள் தலையிடுவதாகவும் குழாய் இணைப்புகளின் எண்ணிக்கையை உள்ளாட்சி நிர்வாகங்கள் போலியாகக் காட்டுவதாகவும் சில புகார்களும் எழுந்திருக்கின்றன.
- எல்லாவற்றையும் தாண்டி, இதன் மூலம் லட்சக்கணக்கான கிராமங்களில் குடிநீருக்குக் குறைந்தபட்ச உத்தரவாதமாவது கிடைத்துள்ளது பாராட்டத்தக்கது. இத்திட்டத்தை முழுமையாக வெற்றியடைய வைக்க அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)