TNPSC Thervupettagam

குடிநீர் வழங்கல் திட்டம்: சுகாதாரத்தை மட்டுமல்ல சமத்துவத்தையும் நிலைநாட்டும்!

October 4 , 2021 1029 days 555 0
  • 2019 சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடி வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் முக்கியமான முன்னகர்வு.
  • மாநில அரசுகளுடன் இணைந்து 2024-க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலமாகக் குடிநீர் வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு.
  • அடுத்த மூன்றாண்டுகளுக்குள் இந்த இலக்கு எட்டப்படாவிட்டாலும்கூட வெகுவிரைவில் அது சாத்தியமாகிவிடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
  • காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஊரகக் குடிநீர் மற்றும் சுகாதாரக் குழுக்களுடன் காணொளியில் உரையாடும்போது ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாகப் பெண்களின் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
  • இத்திட்டத்தின் பயனாகப் பெண்கள் குடிநீருக்காகக் குடங்களோடு வெகுதூரம் அலைய வேண்டிய நேரம் மிச்சப்படுத்தப்பட்டு, அந்நேரத்தில் அவர்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கவும் வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளைச் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
  • குழாய்களின் வழியாக வீடுகளுக்கு நேரடியாகக் குடிநீர் வழங்குவது என்பது பெண்களின் பணிச் சுமையை மட்டும் குறைக்கவில்லை.
  • ஊரகங்களில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக இன்னமும்கூட பொது நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்குச் சமத்துவத்துக்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது.
  • இயற்கை வளங்களில் ஒன்றான நீராதாரங்களைப் பயன்படுத்தும் முறையானது இந்தியாவில் பிராந்தியங்களுக்கு ஏற்றபடி வேறுபடுகிறது. ஊரகப் பகுதிகளில் குடியிருப்புகள் ஒரே பகுதியில் அமைந்திருப்பதில்லை.
  • ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் குடிநீருக்காக மற்ற குடியிருப்புகளுக்குச் செல்வது பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. இன்னமும்கூட பொதுக் கிணறு அல்லது கை பம்ப் வசதியில்லாத ஊரகப் பகுதிகளும் இருக்கவே செய்கின்றன.
  • அத்தகைய பகுதிகளில் வசிக்கும் பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை நிலை.
  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஊரகப் பகுதியில் உள்ள பட்டியலினத்தவர் வீடுகளில் 28% மட்டுமே வீட்டிலேயே குடிநீர் கிடைக்கப்பெறும் வசதி கொண்டவை என்பது தெரியவந்தது.
  • அதிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பைப் பெற்றவை 19% மட்டுமே. சுத்தமான குடிநீர் வசதியானது உடல்நலப் பாதுகாப்பை உறுதிசெய்கிறது.
  • ஆனால், அவ்வசதி அனைவருக்கும் பாரபட்சமின்றிக் கிடைக்க வேண்டும் என்றால், வீடுகளுக்கு நேரடி இணைப்பு அளிப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியம். அந்த வகையில், ஜல் ஜீவன் திட்டம் கிராமப்புறங்களில் சத்தமின்றி ஒரு மௌனப் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது.
  • இத்திட்டத்தின் கீழ், தவறான நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் நீர்க் கசிவு மற்றும் அடைப்புகளை எளிதாகக் கண்டறிந்து, உடனடியாக அவற்றைச் சரிசெய்யவும் குடிநீர்க் குழாய்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுவருகின்றன.
  • குடிநீருக்காக விதிக்கப்படும் கட்டணம், ஏழை எளியவர்களால் இயலக் கூடிய தொகையாக இருப்பதும் முக்கியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories